பிரதமர் அலுவலகம்

கோவாவில் கோவா விடுதலை தின கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்’ வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
“விடுதலை மற்றும் சுயராஜ்ஜியத்திற்கான இயக்கங்களை தளர்த்த கோவா மக்கள் அனுமதிக்கவில்லை. சுதந்திரச் சுடரை இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் அவர்கள் எரிய வைத்தனர்.”
"இந்தியா என்பது ஒரு உணர்வாகும், இங்கு தேசம் 'சுய'த்திற்கு மேலே உள்ளது மற்றும் முதன்மையானது. தேசம் முதலில் எனும் ஒரே ஒரு தாரகமந்திரமே இங்கு இருக்கிறது. ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம் எனும் ஒரே ஒரு உறுதியே இங்கு இருக்கிறது”.
"சர்தார் படேல் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், விடுதலைக்காக கோவா நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்திருக்காது"
“ஆளுகையின் ஒவ்வொரு பணியிலும் முதன்மையாக இருப்பதே மாநிலத்தின் புதிய அடையாளம். மற்ற இடங்களில் வேலை தொடங்கும் போது அல்லது வேலை முன்னேறும் போது, கோவா அதை முடித்துவிடும்”
போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பையும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்
“மனோகர் பாரிக்கரின் நேர்மை, திறமை மற்றும் விடாமுயற்சியின் பிரதிபலிப்

Posted On: 19 DEC 2021 5:18PM by PIB Chennai

கோவாவில் நடைபெற்ற கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்’ வீரர்களை பிரதமர் பாராட்டினார். புதுப்பிக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம், நியூ சவுத் கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மார்கோவாவில் உள்ள டபோலிம்-நவேலிமில் எரிவாயு பாதுகாப்பு துணை நிலையம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை அவர் திறந்து வைத்தார். கோவாவில் இந்திய பார் கவுன்சில் அறக்கட்டளையின் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்தியா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கோவாவின் நிலம், கோவாவின் காற்று, கோவாவின் கடல் ஆகியவை இயற்கையின் அற்புதமான கொடையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இன்று கோவா மக்கள் அனைவரின் இந்த உற்சாகம் கோவாவின் விடுதலையின் பெருமையை மேலும் கூட்டுகிறது. ஆசாத் மைதானத்தில் உள்ள ஷஹீத் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக அவர் கூறினார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மிராமரில் நடந்த கப்பல் மற்றும் விமான அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார். ‘ஆபரேஷன் விஜய்’ நாயகர்கள் மற்றும் ராணுவ வீரர்களை நாட்டின் சார்பில் கவுரவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். கோவா இன்றைக்கு ஒன்றிணைத்துள்ள பல வாய்ப்புகள், பல அற்புதமான அனுபவங்களை வழங்கிய துடிப்புமிக்க கோவாவின் உணர்வுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் கீழ் இருந்த காலத்தில் கோவா போர்த்துகீசிய ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதன் பிறகு இந்தியா பல கிளர்ச்சிகளை சந்தித்தது. பல நூற்றாண்டுகள் மற்றும் ஆட்சி மாற்றங்களுக்கு பிறகும், கோவா அதன் இந்தியத்தன்மையை மறக்கவில்லை, இந்தியாவின் மற்ற பகுதிகளும் கோவாவை மறக்கவில்லை என்று திரு மோடி குறிப்பிட்டார். இது காலப்போக்கில் வலுப்பெற்ற உறவு. கோவா மக்களும் விடுதலை மற்றும் சுயராஜ்யத்திற்கான இயக்கங்களை தளர்த்த அனுமதிக்கவில்லை. இந்திய வரலாற்றில் சுதந்திரச் சுடரை அவர்கள் நீண்ட காலம் எரிய வைத்தனர். ஏனென்றால் இந்தியா வெறும் அரசியல் சக்தி மட்டுமல்ல. இந்தியா என்பது மனிதகுலத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சிந்தனை மற்றும் ஒரு குடும்பம். தேசம் 'சுயத்திற்கு' மேலானது மற்றும் முதன்மையானது, இந்தியா என்பது ஒரு உணர்வு என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசம் முதலில் எனும் ஒரே ஒரு தாரகமந்திரமே இங்கு இருக்கிறது. ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம் எனும் ஒரே ஒரு உறுதியே இங்கு இருக்கிறது.

 

நாட்டின் ஒரு பகுதி இன்னும் விடுதலை பெறாததாலும், சில நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காததாலும் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் இதயங்களில் கொந்தளிப்பு நிலவியது என்று பிரதமர் கூறினார். சர்தார் படேல் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், கோவா விடுதலைக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது இருந்திருக்காது என்று அவர் குறிப்பிட்டார். போராட்ட மாவீரர்களுக்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார். கோவா முக்தி விமோச்சன் சமிதியின் சத்தியாகிரகத்தில் 31 சத்தியாக்கிரகிகள் உயிர் இழக்க நேரிட்டது. இந்த தியாகங்களைப் பற்றியும், பஞ்சாபின் வீர் கர்னைல் சிங் பெனிபால் போன்ற மாவீரர்களைப் பற்றியும் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "கோவாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு இந்தியாவின் உறுதிப்பாட்டின் சின்னம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் உயிருள்ள ஆவணமாகும்" என்று பிரதமர் கூறினார்.

சில காலத்திற்கு முன்பு இத்தாலி மற்றும் வாடிகன் நகருக்குச் சென்றபோது போப் பிரான்சிஸைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியா மீதான போப்பின் அணுகுமுறையும் சம அளவில் இருந்தது. போப் பெருந்தகையை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் பிரதமர் பேசினார். "இது தாங்கள் எனக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசு" என்று போப் பிரான்சிஸ் அழைப்பிற்கு அளித்த பதிலை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் பன்முகத்தன்மை, நமது ஒளிமயமான ஜனநாயகத்தின் மீது போப்பின் அன்பு என பிரதமர் இதை எடுத்துரைத்தார். புனித ராணி கெட்டேவனின் புனித நினைவுச்சின்னங்களை ஜார்ஜியா அரசிடம் ஒப்படைப்பது குறித்தும் பிரதமர் பேசினார்.

 

ஆளுகையில் கோவாவின் முன்னேற்றங்களைக் குறிப்பிட்ட பிரதமர், கோவாவின் இயற்கை அழகு எப்போதுமே அதன் தனிச்சிறப்பாகும், ஆனால் இப்போது இங்குள்ள அரசு கோவாவின் மற்றொரு அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது என்று கூறினார். ஆட்சியின் ஒவ்வொரு பணியிலும் முதன்மையாக இருப்பதே அரசின் இந்தப் புதிய அடையாளம் ஆகும். மற்ற இடங்களில் வேலை தொடங்கும் போது அல்லது வேலை முன்னேறும் போது கோவா அதை முடிக்கிறது. மாநிலத்தை திறந்தவெளி மலம் கழித்தலில் இருந்து விடுவிப்பது, நோய்த்தடுப்பு, அனைத்து வீடுகளிலும் குழாய் நீர் இணைப்பு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான பிற திட்டங்களில் கோவாவை சிறந்த உதாரணமாக பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வயம்பூர்ணா கோவா திட்டத்தின் செயல்பாட்டை அவர் பாராட்டினார். மாநில ஆளுகையில் சாதனை படைத்த முதல்வர் மற்றும் அவரது குழுவினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். சமீபத்தில் நிறைவடைந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார். “கோவாவின் இந்த சாதனைகள், இந்த புதிய அடையாளம் வலுப்பெறுவதைப் பார்க்கும்போது, எனக்கு எனது நண்பர் மனோகர் பாரிக்கர் அவர்கள் நினைவுக்கு வருகிறார். கோவாவை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு அவர் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல், கோவாவின் திறனை விரிவுபடுத்தினார். ஒருவர் எப்படி தன் கடைசி மூச்சு வரை தன் மாநிலத்திற்கும், தன் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க முடியும் என்பதை அவரது வாழ்க்கையில் பார்த்தோம்,'' என்றார் அவர். கோவா மக்களின் நேர்மை, திறமை மற்றும் விடாமுயற்சியின் பிரதிபலிப்பை திரு மனோகர் பாரிக்கரிடம் தேசம் கண்டது எனக் கூறி உரையை அவர் நிறைவு செய்தார்.

                           ****************************



(Release ID: 1783267) Visitor Counter : 224