பிரதமர் அலுவலகம்

ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதைக்கு டிசம்பர் 18 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்


நாடு முழுவதும் அதிவேகமாக போக்குவரத்துத் தொடர்பை வழங்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்படுகிறது

உத்தரப்பிரதேசத்தில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கின்ற மீரட் முதல் பிரயாக் வரையிலான விரைவுப் பாதை இம்மாநிலத்தின்
12 மாவட்டங்கள் வழியாக செல்லும்

ரூ.36,200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள இது உத்தரப்பிரதேசத்தின் மிகநீண்ட விரைவுப் பாதையாக இருக்கும்

ஷாஜஹான்பூர் விரைவுப் பாதையில், அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீள ஓடுப்பாதை அமைக்கப்படவுள்ளது

Posted On: 16 DEC 2021 2:12PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் 2021 டிசம்பர் 18 அன்று பிற்பகல் 1 மணியளவில் கங்கை விரைவுப் பாதைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்த விரைவுப் பாதைக்கு பின்னால் உள்ள ஊக்கம் என்பது நாடு முழுவதும் அதிவேகமாக போக்குவரத்துத் தொடர்பை வழங்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். 594 கி.மீ. நீள ஆறு வழி விரைவுப்பாதை ரூ.36,200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ளது. மீரட்டில் உள்ள பிஜவ்லி கிராமத்திற்கு அருகே தொடங்கும் இந்த விரைவுப் பாதை பிரயாக்ராஜில் உள்ள ஜூடாப்பூர் தண்டு வரை நீடிக்கும். இது மீரட், ஹாப்பூர், புலந்ஷார், அம்ரோஹா, சம்பல், பூதான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கட், பிரயாக்ராஜ் ஆகியவற்றின் வழியாக செல்லும். இந்தப் பணி நிறைவடையும் போது உத்தரப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களை இணைக்கின்ற இம்மாநிலத்தின் மிகநீண்ட எக்ஸ்பிரஸ் பாதையாக இது இருக்கும்.

ஷாஜஹான்பூர் விரைவுப் பாதையில் அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீள ஓடுப்பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுப்பாதை அமைக்கப்படுவதோடு தொழில்துறை வழித்தடத்திற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை மேம்பாடு, வர்த்தகம், வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்ட பலதுறைகளுக்கும் இந்த விரைவுப்பாதை ஊக்கமளிக்கும். இந்த பிராந்தியத்தின் சுமுக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

********



(Release ID: 1782206) Visitor Counter : 203