பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின விழாவில் பிரதமர் பங்கேற்றார்


பாபாசாஹேப் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாதுக்குத் தலைவணங்கினார்

பாபுவுக்கும், விடுதலைப் போராட்டத்தில் தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினார்

26/11 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்

"குடும்ப அடிப்படையிலான கட்சிகளின் வடிவத்தில் ஒருவகையான நெருக்கடியை நோக்கி இந்தியா செல்கிறது, இது அரசியல் சட்டத்திற்கு விசுவாசமான மக்களுக்குக் கவலைதரும் விஷயமாகும்"

"தங்களின் ஜனநாயகத் தன்மையை இழந்துவிட்ட கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும்?"

"நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் கடமை வலியுறுத்தப்பட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். இந்த 75ஆவது சுதந்திர ஆண்டுப் பெருவிழாவில் கடமையின் பாதையில் முன்னோக்கிச் செல்வது நமக்கு அவசியமாக இருக்கிறது; இதனால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும்"

Posted On: 26 NOV 2021 12:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் இன்று அரசியல்சட்ட தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் மாண்புமிகு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோர் உரையாற்றினர். மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின் அரசியல் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதில் நேரலையில் அவருடன் நாட்டுமக்கள் இணைந்தனர். அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் டிஜிட்டல் வடிவத்தையும், இந்திய அரசியல் சட்டத்தின் கையெழுத்துப் பிரதியின் டிஜிட்டல் வடிவத்தையும், இந்நாள்வரை செய்யப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் உள்ளடக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் தற்காலபடுத்தப்பட்ட வடிவத்தையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் வெளியிட்டார். 'அரசியல் சட்டப்படியான ஜனநாயகம் குறித்த இணையதள வினாடி வினாவை' அவர் தொடங்கிவைத்தார்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், பாபாசாகேப் அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், பாபு போன்ற தொலைநோக்குப் பார்வைகொண்ட மகத்தான ஆளுமைகளுக்கும், விடுதலைப் போராட்டத்தின்போது தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்கான நாள் இதுவாகும் என்றார். இந்த நாள் இந்த அவைக்கு வணக்கம் செலுத்தும் நாளாகும். இத்தகைய மாமனிதர்களின் தலைமையின் கீழ் விவாதங்களில் கடைந்தெடுத்த பின் நமது ஜனநாயகத்தின் அமிர்தம் உருவானது என்று அவர் கூறினார். ஜனநாயகத்தின் அவையான இதற்கும் தலைவணங்கும் நாளாக இந்நாள் இருக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார். 26/11 தியாகிகளுக்கும் பிரதமர் வணக்கம் செலுத்தினார். "இன்று 26/11 நமக்கு மிகவும் சோகமான நாளாகும். நாட்டின் எதிரிகள் நாட்டின் உள்ளே வந்து மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர். பயங்கரவாதிகளை எதிர்த்த போராட்டத்தில் நாட்டின் தீரமிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தனர்" என்று பிரதமர் கூறினார்.

நமது அரசியல் சட்டம் பல பகுதிகளின் தொகுப்பு மட்டுமல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், பல ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான பாரம்பரியமாக நமது அரசியல் சட்டம் இருக்கிறது என்றார். தடைபடாத அந்த நீரோட்டத்தின் நவீன வெளிப்பாடாக இது உள்ளது என்றார். சரியோ அல்லது தவறோ நமது பாதை தொடர்ந்து இதன் மூலமே உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசியல் சட்ட தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

'அரசியல்சட்ட தினம் கொண்டாடுவதன் பின்னணியிலுள்ள உணர்வை விவரித்த பிரதமர், பாபாசாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது, "பாபாசாகேப் அம்பேத்கர் இந்த நாட்டுக்குப் பரிசளித்த புனிதமான நிகழ்வைவிட மகத்தானது எதுவாக இருக்க முடியும் என்பதால் நினைவுப் புத்தகம் (ஸ்மிரித் கிரநத்) என்ற வடிவத்தில் அவரது பங்களிப்பை நாம் எப்போதும் நினைவுகூர வேண்டும்" என்று நாங்கள் உணர்ந்தோம். அந்த சமயத்தில், குடியரசு தினம் ஜனவரி 26 என்று நிறுவப்பட்டுள்ள பாரம்பரியத்துடன் நவம்பர் 26 அரசியல் சட்ட தினமாக நிறுவப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திக்கும் என்று அவர் கூறினார்.

குடும்ப அடிப்படையிலான கட்சிகளின் வடிவத்தில் ஒருவகையான நெருக்கடியை நோக்கி இந்தியா செல்கிறது, இது அரசியல் சட்டத்திற்கு விசுவாசமான மக்களுக்குக் கவலைதரும் விஷயமாக இருக்கிறது, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போருக்கும் கவலைதரும் விஷயமாக இருக்கிறது என்று பிரதமர் கூறினார். "ஒரு குடும்பத்திலிருந்து ஒன்றுக்கும் அதிகமான நபர் தகுதி அடிப்படையில் கட்சியில் இணைந்திருந்தால் அது அந்தக் கட்சியைக் குடும்பக் கட்சியாக உருவாக்காது; ஒரே குடும்பம் தலைமுறை தலைமுறையாக கட்சியை நடத்தும்போது பிரச்சனைகள் உருவாகின்றன" என்று அவர் கூறினார். அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக குணாம்சத்தை இழக்கும்போது அது அரசியல் சட்டத்தை ஊனப்படுத்துகிறது, அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் கூட ஊனப்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார். "தங்களின் ஜனநாயக குணத்தை இழந்துவிட்ட கட்சிகள் எவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளை மறந்துவிடுவது, புகழ்பாடுவது என்ற போக்கிற்கு எதிராகவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். சீர்திருத்தத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்போது, பொதுவாழ்க்கையில் இத்தகைய நபர்களைப் புகழ்வதிலிருந்தும் நாம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் உரிமைகளுக்காக போராடியபோதும் கூட கடமைகளுக்காக நாட்டு மக்களைத் தயார்செய்ய மகாத்மா காந்தி முயற்சி செய்தார் என்று பிரதமர் கூறினார். "நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் கடமை வலியுறுத்தப்பட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். 75ஆவது சுதந்திரதனப் பெருவிழா காலத்தில் கடமையின் பாதையில் முன்னேறி செல்வது நமக்கு அவசியமாகும், இதனால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும்" என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

***



(Release ID: 1775318) Visitor Counter : 219