பிரதமர் அலுவலகம்
எரிசக்தி மாற்றத்தில் இத்தாலி-இந்தியா இடையே நீடித்த ஒத்துழைப்பு பற்றிய கூட்டறிக்கை
Posted On:
30 OCT 2021 2:24PM by PIB Chennai
இத்தாலி அக்டோபர் 30-31ம் தேதிகளில் நடத்திய ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் மேதகு திரு மரியோ டிராகி, பிரதமர் திரு நரேந்திர மோடி இடையே இருதரப்பு கூட்டம் நடந்தது.
இந்தியா-இத்தாலி இடையே மேம்படுத்தப்பட்ட கூட்டுறவுக்கான செயல் திட்ட தீர்மானம் கடந்த 2020 நவம்பர் 6ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ரோமில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சிமாநாடு மற்றும் கிளாஸ்கோவில் நடைபெறும் சிஓபி 26 உச்சிமாநாடு ஆகியவற்றில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான சுத்தமான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் உட்பட செயல்திட்டத்தில் கூறியபடி முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
கடந்த மே 8ம் தேதி, போர்டோவில் நடந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அதில் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு ஆகியவற்றில் உள்ள சவால்களை தீர்ப்பதன் அவசியத்தை ஐரோப்பிய யூனியனும், இந்தியாவும் வலியுறுத்தியது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒத்துழைப்பு, பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு, எரிசக்தி திறனை ஊக்குவித்தல், ஸ்மார்ட் மின் தொகுப்புகளை உருவாக்குதல், சேமிப்பு தொழில்நுட்பங்கள், மின்சந்தையை நவீனப்படுத்துவது ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டன.
மேலும், சுத்தமான எரிசக்தி மாற்றத்துக்கு அந்தந்த நாடுகளின் மின் உற்பத்தி முறைகளில் அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்த ஒருங்கிணைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இது வேலை வாய்ப்பு, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்கும். இது எரிசக்தி பற்றாக்குறையை போக்குவதோடு, உலகளாவிய எரிசக்தி அனுகலை வலுப்படுத்தும்
இந்த நோக்கில், 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைக்க இந்தியாவின் தீர்மானத்தை இரு பிரதமர்களும் பாராட்டினர். அதேபோல், சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு இத்தாலியின் தீவிர ஆதரவுக்கும் பாராட்டு தெரிவித்தனர். எரிசக்தி மாற்றத்துக்கான களத்தில் இருதரப்பு நீடித்த ஒத்துழைப்பை தொடங்கவும் ஒப்புக் கொண்டனர்.
இதுபோன்ற கூட்டுறவால், இத்தாலியின் சூழலியல் மாற்ற அமைச்சகம் மற்றும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின்துறை அமைச்சகம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை அமைச்சகம் இடையே தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகளை மேம்படுத்த முடியும்.
எரிசக்தி மாற்றத்தில் தங்கள் கூட்டுறவை மேம்படுத்துவதற்காக, இத்தாலி மற்றும் இந்தியா ஆகியவை கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ளும்:
நவீன நகரங்கள், போக்குவரத்து, நவீன மின்தொகுப்பு, மின் விநியோகம், மின் சேமிப்பு தீர்வுகள், எரிவாயு போக்குவரத்து, இணைப்பு எரிபொருளாக இயற்கை எரிவாயுவை ஊக்குவிப்பது, ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மற்றும் பசுமை எரிசக்திகள் (பசுமை ஹைட்ரஜன்; இயற்கை எரிவாயுக்கள், பயோ-மீத்தேன்; பயோ-சுத்திகரிப்பு, இரண்டாம் தலைமுறை எத்தனால், விளக்கெண்ணை, உயிரி எரிபொருள் கழிவை எரிபொருளாக மாற்றுதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆராய எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இதன் படி அமைக்கப்பட்ட கூட்டு செயற் குழு செயல்படுத்தப்படும்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை இந்தியாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
இந்தியாவில் மிகப் பெரிய பசுமை வழித்தட திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க இணைந்து செயல்படுவது பற்றி பரிசீலிக்கப்படும். இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இயற்கை எரிவாயு துறை, கார்பன் நீக்கத்துக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, நவீன நகரங்கள் மற்றும் நகர்ப்புற போக்குவரத்தை மின்மயமாக்குதல் போன்ற திட்டங்களை இணைந்து மேற்கொள்ள இந்திய மற்றும் இத்தாலிய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
எரிசக்தி மாற்றம் தொடர்பான துறைகளில் இந்தியா மற்றும் இத்தாலி நிறுவனங்களின் கூட்டு முதலீடுகளை ஊக்குவித்தல்.
சுத்தமான எரிசக்திக்கான மாற்றம் மற்றும் வர்த்தகத்துக்கு சாத்தியமான எரிபொருள்கள் / தொழில்நுட்பங்கள், நீண்டகால மின்தொகுப்பு திட்டம், புதுப்பிப்பதற்கான ஊக்குவிப்பு திட்டங்கள், திறன்மிக்க நடவடிக்கைகள், தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான நிதி உட்பட கெகாள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு துறையில் பயனுள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது.
***
(Release ID: 1767945)
Visitor Counter : 276
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam