நிதி அமைச்சகம்

சரக்குகள் மற்றும் ஆலோசனை அல்லாத இதர சேவைகளுக்காக மாதிரி டெண்டர் ஆவணங்களை (MTD) மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் வெளியிட்டார்


இ-கொள்முதல் தேவைகள் மற்றும் அரசுத்துறை கொள்முதல் நடவடிக்கைகள் மின்மயமாக்குதலை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு குறிப்பாக எம்டிடீ உதவுவதோடு டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைவதற்கும் உதவும்

Posted On: 29 OCT 2021 4:27PM by PIB Chennai

இந்த ஆண்டு சுதந்திரதின உரையின் போது மாண்புமிகு பிரதம மந்திரி தற்போதைய விதிகள் மற்றும் நடைமுறைகளை மீள்பரிசோதனை செய்து தொடர்ச்சியாக சீர்திருத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அதனையொட்டி சரக்குகள் மற்றும் ஆலோசனை அல்லாத சேவைகளுக்காக மாதிரி டெண்டர் ஆவணங்களை (MTD) இன்று மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் வெளியிட்டார்.

 

இ-கொள்முதல் தொடர்புடைய தேவைகளுக்கு குறிப்பாக எம்டிடீ-க்கள் உதவியாக இருக்கும். இதன் மூலம் இ-கொள்முதல் மேற்கொள்வதற்கான வழிமுறை எளிமையாகும்.  அரசின் எளிமையான மற்றும் திறன்மிக்க மின் ஆளுகை என்ற குறிக்கோள் மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும்.  அரசுத் துறை சார்ந்த கொள்முதல் நடைமுறைகளை மின்மயமாக்குதலை எளிமைப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் மூலம் டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைவதற்கு இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள் உதவியாக இருக்கும்.

 

தொழிற்சாலைகளோடு அரசு தொடர்பு கொள்வதற்கான முக்கிய சந்திப்புப் புள்ளியாக டெண்டர் ஆவணங்கள் இருக்கின்றன. களஅளவில் கொள்கை முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியமான வழிமுறையாக இவை அமைகின்றன. டெண்டர் ஆவணங்களின் ஒரே சீர்மையான தொகுப்புகள் அரசுக்கு தனது கொள்கைகளை திறம்படவும் தொடர்ச்சியாகவும் சீராகவும் வெளிப்படுத்த உதவும். ஆவண விளக்கங்களில் சீர்மை மற்றும் அரசுத்துறை கொள்கைகள் மற்றும் முன்னோடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியன விண்ணப்பத்தின் தெளிவை பிரதிபலிக்கும்.  இதன் மூலம் விதிகளை ஏற்று நடத்தல் சிறப்புற அமைவதோடு கொள்முதல் செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் அமையும்.  மேலும் மிகச் சிறந்த கொள்முதல் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதைத் தாண்டியும் இந்த ஒரே சீரான டெண்டர் ஆவணங்கள் பாலிசி முன்னெடுப்புகளின் சாதகமான தாக்கத்தை அதிகரிக்கும்.  இவை உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதோடு போட்டியை அதிகரிக்கவும் செய்யும்.  வரிசெலுத்துவோரின் பண மதிப்பை நியாயப்படுத்தும் வகையில் திறன்மிக்க சந்தை நிலைமைகளையும் உருவாக்கும். 

 

இதன்படி, இப்பொழுது சரக்குகள் மற்றும் ஆலோசனை சாராத சேவைகளை கொள்முதல் செய்வதற்காக மாதிரி டெண்டர் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.  இந்த மாதிரி டெண்டர் ஆவணங்களின் அமைப்பை சீரமைத்துள்ளதோடு எளிமைப்படுத்தியும் உள்ளன.  நுண் மற்றும் சிறு தொழில்கள் சார்ந்த கொள்கைகள், இந்தியாவில் தயாரியுங்கள் என்பதற்கு முன்னுரிமை, ஸ்டார்ட்-அப்புகளுக்கு பலன்கள் கிடைக்கச் செய்தல் போன்ற அரசின் பல்வேறு கொள்முதல் கொள்கைகளின் பிரிவுகளுக்கு ஒத்திசைந்ததாக இந்த எம்டிடீ-க்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான நடைமுறைகளை உள்ளடக்கி உள்ளது. அமைச்சகங்கள் / துறைகள் / பொதுத்துறை நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோருடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு இரண்டு கட்டங்களுக்குப் பிறகு மாதிரி டெண்டர் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

 

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள மாதிரி டெண்டர் ஆவணங்கள் வழிகாட்டும் முன்மாதிரிகளாக விளங்கும். அரசின் டிஜிட்டல் இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எம்டிடீ-க்கள் பயனாளர் துறைகள் தங்களுக்கு ஏற்றவாறு எளிமையாக வடிவமைத்துக் கொள்ளும் வகையில் மென் பொருள் முன்மாதிரிகளாக வழங்கப்படுகின்றன.  அமைச்சகங்கள் /  துறைகள் இந்த ஆவணத்தை தங்களது உள்ளூர் / குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சீரமைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மாதிரி டெண்டர் ஆவணங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று வழிகாட்டும் விரிவான தனிப்பட்ட வழிகாட்டி குறிப்புகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.  இவை கொள்முதல் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதிரி டெண்டர் ஆவணங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று புரிந்து கொள்ள உதவும். நிதி அமைச்சகத்தின் செலவின அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதிரி டெண்டர் ஆவணங்கள் வழிகாட்டும் டெம்ப்லேட்டுகளாக இருக்கும்.

 

அரசு நிறுவனங்கள் தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புடைமைகளுக்கு இசைந்தவாறு பல்வேறு சரக்குகள் மற்றும் ஆலோசனை சாராத சேவைகளை கொள்முதல் செய்கின்றன. அரசுத்துறை சார்ந்த கொள்முதல்களில் சிறப்பான ஆளுகை, வெளிப்படைத்தன்மை, நியாயம், போட்டி மற்றும் அளிக்கும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றை அதிகரிப்பதற்காக கடந்த காலங்களில் பொதுத்துறை கொள்முதல்களில் குறிப்பிடத்தக்க கொள்கை முன்னெடுப்புகள் பலவற்றை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.  விரிவான மீளாய்வுக்குப் பிறகு மார்ச் 2017ல் பொதுவான நிதிசார் விதிகள் வெளியிடப்பட்டன.  இதனோடு கூடுதலாக சரக்குகளை கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டி நூல் – 2017, ஆலோசனை மற்றும் இதர சேவைகளை கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டி நூல் – 2017 மற்றும் பணிகளை கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டி நூல் – 2019 ஆகிய என மூன்று கொள்முதல் வழிகாட்டி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

 

நடப்பில் உள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளை மீளாய்வு செய்து தொடர்ச்சியாக சீரமைத்தல் என்பதன் ஒரு அங்கமாக இந்த மாதிரி டெண்டர் ஆவணங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  இந்த நடவடிக்கையானது 2 அக்டோபர் 2021 முதல் 31 அக்டோபர் 2021 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் அமைச்சரவை செயலாளரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

*****

 



(Release ID: 1767591) Visitor Counter : 255