பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது நிறுவக தினத்தில் பிரதமர் பங்கேற்றார்


இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கம் மற்றும் அதன் வரலாறு மனித உரிமைகளுக்கு மாபெரும் ஊக்க சக்தியாக இருக்கிறது : பிரதமர்

நமது பாபுவை உலகம் முழுவதும் மனித உரிமைகள் மற்றும் மனித மாண்புகளுக்கான அடையாளமாகக் காண்கிறது:பிரதமர்

மனித உரிமைகளின் கோட்பாடு ஏழைகளின் கண்ணியத்துடன் நெருங்கிய தொடர்புடையது: பிரதமர்

முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு புதிய உரிமைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்: பிரதமர்

கருவுற்ற பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 26 வாரங்கள் விடுப்பை இந்தியா உறுதி செய்துள்ளது, இந்த அரிய செயலை பல வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட எட்டமுடியவில்லை:பிரதமர்

மனித உரிமைகள் குறித்துத் தங்கள் விருப்பம்போல் விளக்கம் அளிப்பதற்கு எதிராக கவனம் வேண்டும்

அரசியல் மற்றும் அரசியல் லாப நஷ்டம் ஆகிய கண்ணாடியின் மூலம் பார்க்கும்போது மனித உரிமைகள் மீது மிகப்பெரிய விதிமீறல் ஏற்படுகிறது :பிரதமர்

மனித மேம்பாடு மற்றும் மனித மாண்பின் பயணம் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற இரண்டு தடங்களில் செல்கிறது:பிரதமர்

Posted On: 12 OCT 2021 12:53PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவக தின நிகழ்ச்சியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் விடுதலைப்போராட்ட இயக்கத்திலும் அதன் வரலாற்றிலும் இந்தியாவிற்கு மனித உரிமைகளும் மனித மாண்புகளும் மகத்தான ஊக்கசக்தியாக விளங்குகின்றன என்றார். “ஒரு நாடு என்ற முறையில், ஒரு சமூகம் என்ற முறையில் அநீதிகளையும், அராஜகங்களையும் நாம் எதிர்த்துள்ளோம். பல நூற்றாண்டுகளாக நமது உரிமைகளுக்கு நாம் போராடியிருக்கிறோம். ஒரு கட்டத்தில் முதலாம் உலகப்போரால் ஒட்டுமொத்த உலகமும் வன்முறையால் சூழப்பட்டிருந்தது. அப்போது ஒட்டுமொத்த உலகத்திற்கும் ‘உரிமைகள் மற்றும் அகிம்சை’ பாதையை இந்தியா காட்டியது. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் நமது பாபுவை மனித உரிமைகள் மற்றும் மனித மாண்புகளின் அடையாளமாகப் பார்த்தது” என்று மகாத்மா காந்தியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். பல தருணங்களில் மனித உரிமைகள் குறித்த விஷயத்தில் இந்தியா உறுதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருப்பதில் கூட உலகம் மயக்கத்தையும் குழப்பத்தையும் கொண்டிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

மனித உரிமைகளின் கோட்பாடு ஏழைகளின் கௌரவத்தோடு நெருக்கமான தொடர்புடையது என்று பிரதமர் கூறினார். அரசுத் திட்டங்களில் சமமான பங்கினைப் பரம ஏழைகள் பெறமுடியாத போது உரிமைகள் பற்றிய கேள்விகள் எழுகின்றன என்று அவர் கூறினார். ஏழைகளின் கௌரவத்தை உறுதி செய்வதற்கான  அரசின் முயற்சிகளைப் பிரதமர் பட்டியலிட்டார். ஏழை ஒருவர் கழிப்பறை வசதியைப் பெறும்போது திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து சுதந்திரம் உறுதி செய்யப்படுவதோடு அவருக்கு கௌரவமும் கிடைக்கிறது, அதேபோல் ஒரு வங்கிக்குள் செல்வதற்குத் தயங்கிய ஓர் ஏழை ஜன் தன் கணக்கினைப் பெறுவது அவரது கௌரவத்தை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். ரூபே அட்டை, உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் போன்ற நடவடிக்கைகளும் முழுமையான வீடுகளின் சொத்துரிமைகளைப் பெண்களுக்கு வழங்குவதற்கான பெரிய நடவடிக்கைகளும் இந்தத் திசையிலானவை.

கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு உரையைத் தொடர்ந்த பிரதமர் பல்வேறு தரப்பினருக்குப் பல்வேறு நிலைகளில் இழைக்கப்படும் அநீதிகளைக் களைவதற்கும் நாடு முயற்சிசெய்துள்ளது என்று பிரதமர் கூறினார். “பல பத்தாண்டுகளாக முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்தை முஸ்லீம் பெண்கள் கோரி வந்தனர். முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் முஸ்லீம் பெண்களுக்குப் புதிய உரிமைகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்” என்று பிரதமர் கூறினார். பெண்களுக்குப் பல துறைகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, இவை பாதுகாப்புடன் 24 மணி நேரமும் அவர்கள் பணி செய்ய முடியும் என்பதை உறுதிசெய்துள்ளன. கருவுற்ற பெண்களுக்கு 26 வார பேறுகால விடுப்பை இந்தியா உறுதிசெய்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட இந்த அரிய செயலை செய்யமுடியவில்லை என்று அவர் கூறினார். இதேபோல் மாறிய பாலினர், குழந்தைகள், நாடோடிகள், கால நிலைக்கேற்ப இடம்பெயரும் நாடோடிகள் போன்றவர்களுக்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் குறித்துப் பிரதமர் பட்டியலிட்டார்.

அண்மையில் நடைபெற்ற பேராலிம்பிக் போட்டிகளில் உள்ளம் கவர்ந்த செயல்பாடு பற்றி நினைவுகூர்ந்த பிரதமர் மாற்றுத் திறனாளி மக்களுக்கு அண்மை ஆண்டுகளில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவர்களுக்குப் புதிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக கட்டடங்கள் உருவாக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான மொழி தரப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் ஏழைகள், ஆதரவற்றோர், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டது என்று திரு மோடி கூறினார். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பதை அமலாக்கியதன் காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக சிரமத்திலிருந்து விடுபட்டனர்.

மனித உரிமைகள் பற்றி தங்கள் விருப்பம்போல் விளக்கம் அளிப்பதற்கும் மனித உரிமைகள் என்பதைப் பயன்படுத்தி நாட்டின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் எதிராகப் பிரதமர் எச்சரிக்கை செய்தார். சிலபேர் தங்களின் சுயநலன்களுக்காக மனித உரிமைகள் குறித்து தற்போது விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார். மனித உரிமைகளை சிதைத்த இதேபோன்ற சூழலில் செய்யாத ஒன்றை இப்போதைய சூழலில் செய்யும் மனப்போக்கைக் காணமுடிகிறது என்று அவர் கூறினார். அரசியல் மற்றும் அரசியல் லாப நஷ்ட கண்ணாடி கொண்டு அவர்கள் பார்க்கும்போது மனித உரிமைகள் மாபெரும் மீறல்களைக் காண்பதாகவும் அவர் கூறினார். “தங்கள் விருப்பம்போல் விளக்கமளிக்கும் இந்தப் போக்கு ஜனநாயகத்தை சிதைப்பதற்கு சமமானதாகும்” என்றும் பிரதமர் எச்சரித்தார்.

மனித உரிமைகள் என்பது உரிமைகளோடு மட்டும் தொடர்புடையது அல்ல நமது கடமைகளோடும் தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று பிரதமர் கூறினார். “மனித மேம்பாடு மற்றும் மனித கௌரவம் என்கிற பயணம், உரிமைகள், கடமைகள் என்ற இரண்டு தடங்களில் செல்கிறது, உரிமைகளுக்கு சமமாகக் கடமைகளும் முக்கியமானவை என்று அவர் வளியுறுத்தினார். ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் அவை தனியாக விவாதிக்கப்படக்கூடாதவை” என்று பிரதமர் கூறினார்.

எதிர்காலத் தலைமுறைகளின் மனித உரிமைகள் பற்றி குறிப்பிட்டுப் பிரதமர் உரையை நிறைவுசெய்தார். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி இலக்குகள், ஹைட்ரஜன் இயக்கம் போன்ற நடவடிக்கைகளை அவர் அழுத்தமாக சுட்டிக்காட்டினார். நீடித்த வாழ்வு, சூழலுக்கு உகந்த வாழ்க்கை என்ற திசையில் இந்தியா விரைவாக முன்னேறிவருகிறது என்று பிரதமர் கூறினார்.

•••


(Release ID: 1763267) Visitor Counter : 443