தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத் துறை சீர்திருத்தங்கள்: கேஒய்சி நடைமுறைகளை எளிதாக்கும் ஆணைகள் பிறப்பிப்பு

Posted On: 21 SEP 2021 8:03PM by PIB Chennai

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தவாறு, “விளிம்பு நிலையில் உள்ள பிரிவினருக்கு உலகத்தரம் வாய்ந்த இணையம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பை வழங்குவதே தொலைதொடர்பு சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.” இதனை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) நடைமுறையை எளிதாக்குவதற்கான பல்வேறு ஆணைகளை அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

புதிய செல்பேசி இணைப்பை வாங்குவதற்காகவோ அல்லது போஸ்ட் பெய்ட், ப்ரீபெய்ட் இடையே இணைப்பை மாற்றுவதற்காகவோ,  தேவையான அடையாள சான்றுகள் மற்றும் இருப்பிட சான்றை, சந்தாதாரர் நேரில் சென்று சமர்ப்பிக்கும் நிலை தற்போது உள்ளது.

அண்மை காலங்களில், இணையதளம் வாயிலான சேவை விநியோகம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.‌ சந்தாதாரர்களின் வசதிக்காகவும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காகவும் கொவிட் காலத்தில் தொடர்பற்ற சேவைகளை ஊக்கப்படுத்துவது அவசியமாகிறது.

எனவே, தொடர்பில்லாத, நுகர்வோரை மையமாகக் கொண்ட, பாதுகாப்பான கேஒய்சி நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்துமாறு தொலைதொடர்புத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் பின்வருமாறு:

1.     புதிய செல்பேசி இணைப்புகளை வழங்குவதற்கு ஆதாரை அடிப்படையாகக் கொண்ட மின்னணு கேஒய்சி நடைமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து நுகர்வோர் பற்றிய தகவல்களை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

2.     செயலி/ இணையதளத்தை அடிப்படையாகக்கொண்ட நடைமுறையின் மூலம் செல்பேசி இணைப்புகள் நுகர்வோருக்கு அளிக்கப்படும். இதன்படி புதிய இணைப்பைப் பெற இணையதளம் வாயிலாக நுகர்வோர் விண்ணப்பிக்கலாம். நுகர்வோர் சமர்ப்பித்த மின்னணு ஆவணங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அல்லது டிஜிலாக்கர் மூலம் சரிபார்க்கப்பட்டு சிம் அட்டை நுகர்வோரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

3.     ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் இடையே சேவையை  எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் (https://dot.gov.in/relatedlinks/telecom-reforms-2021) விரிவான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756812

******

(Release ID: 1756812)


(Release ID: 1757288) Visitor Counter : 278