பிரதமர் அலுவலகம்

கோவாவில் கோவிட் தடுப்பூசி பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

வயது வந்த மக்கள் 100 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக கோவா மாநிலத்துக்கு பாராட்டு தெரிவித்தார்

மனோகர் பாரிக்கரின் சேவைகளை அவர் நினைவுகூர்ந்தார்

‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ இயக்கத்தை கோவா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது; பிரதமர்

நான் பல பிறந்த நாட்களைப் பார்த்துள்ளேன், அவற்றை லட்சியம் செய்வதில்லை, இத்தனை ஆண்டுகளிலும் நேற்று 2.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது; பிரதமர்

நேற்று ஒவ்வொரு மணியிலும் 15 லட்சம் டோஸ்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, ஒரு நிமிடத்துக்கு 26 ஆயிரத்துக்கும் அதிகமான டோஸ்கள், ஒரு வினாடிக்கு 425-க்கு மேல் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன; பிரதமர்

கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை உருவகப்படுத்தி என்னை மகிழ்ச்சியால் நிறைவிக்கிறது; பிரதமர்

கோவா நாட்டின் ஒரு மாநிலம் மட்டுமல்ல, இந்திய முத்திரையின் வலுவான அடையாளம் ; பிரதமர்


Posted On: 18 SEP 2021 12:40PM by PIB Chennai

கோவாவில் வயது வந்தோர் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து, பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

 

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் கலந்துரையாடல்

 

இந்தக் கலந்துரையாடலின் போது, கோவா மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் நிதின் துப்தாலேவிடம், கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு மக்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள் என்று பிரதமர் கேட்டார். முந்தைய பிரச்சாரம், கோவிட் தடுப்பூசி பிரச்சாரம் ஆகியவற்றுக்கு என்ன வேறுபாடு என்பது குறித்தும் அவர் விவாதித்தார். துப்தாலே இந்த பிரச்சாரத்தின் தீவிரம் குறித்து பாராட்டினார். எதிர்க்கட்சியை விமர்சித்த பிரதமர், 2.5 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும், எதிர்க்கட்சியிடம் இருந்து விமர்சனங்கள் வருவது குறித்து பிரதமர் வியப்பு தெரிவித்தார். கோவாவில் வயது வந்தோர் 100 சதவீத அளவுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்காக மருத்துவர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களை பிரதமர் பாராட்டினார். உலகம் முழுவதற்கும் இது முன்மாதிரியாக இருக்கும் என அவர் கூறினார்.

 

கோவிட் பயனாளியும், ஆர்வலருமான திரு நஸீர் ஷேக்- உடன் கலந்துரையாடிய பிரதமர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மற்றவர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள் என்று விசாரித்தார். தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வருவதில் திரு. நஸீர்  எதிர்கொண்ட சிரமங்கள் என்ன என்றும் அவர் கேட்டறிந்தார். தடுப்பூசி இயக்கம் குறித்த அனுபவங்கள் குறித்தும் திரு நஸீரிடம் அவர் கேட்டார். சப்கா பிரயாஸ் சேர்ப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான பிரச்சாரம் சாதனை படைத்துள்ளதற்கு திரு நஸீர் ஷேக்கின் முயற்சி மிகப் பெரிய அம்சம் என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள சமூக உணர்வு கொண்ட ஆர்வலர்களை பிரதமர் பாராட்டினார்.

 

திருமதி ஸ்வீமா பெர்ணான்டஸ் உடன் கலந்துரையாடிய போது, மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும்போது என்னென்ன விசாரிப்பீர்கள் என்று பிரதமர் கேட்டார். அவர் தடுப்பூசியை சரியான வெப்பநிலையில் பராமரிப்பது பற்றி விளக்கினார். தடுப்பூசிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை அவர் கேட்டறிந்தார். தடுப்பூசிகள் சிறிது கூட வீணாகாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பது பற்றியும் அவர் விசாரித்தார். குடும்ப சிரமங்களுக்கு இடையே கடமையைச் செய்துவரும் அவரை பிரதமர் பாராட்டியதுடன், அனைத்து முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

திரு. சசிகாந்த் பகத்துடன் கலந்துரையாடிய போது, நேற்று தமது பிறந்தநாளின் போது,பழைய நண்பருடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்தார். அவரது வயதை கேட்டபோது, இன்னும் 30 ஆண்டுகள் உள்ளதாக கூறியதை பிரதமர் விவரித்தார். 75 வயது பகத், சென்றதை மறந்து, அடுத்த 25ஆண்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறு திரு மோடி அறிவுரை கூறினார். தடுப்பூசி போட்டுக் கொண்டபோது ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா என அவர் விசாரித்தார். மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது பற்றி திரு பகத் திருப்தி தெரிவித்தார். தான் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்த போதிலும், தனக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், பக்க விளைவுகள் குறித்த அச்சத்தை அகற்றினார். ஓய்வு பெற்ற விற்பனை வரி அதிகாரியான திரு பகத்தின் சமூக சேவையை பிரதமர் பாராட்டினார். வரி விதிப்பு உள்ளிட்ட வளையத்தில் சிரமமின்றி வாழ்வதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

 

திருமதி ஸ்வீட்டி வெங்குர்லேக்கர் தொலைதூரப் பகுதிகளில் எவ்வாறு டிக்கா உத்சவை ஏற்பாடு செய்தார் என பிரதமர் வினவினார். உத்சவ் குறித்த திட்டமிடல் பற்றி அவர் கேட்டறிந்தார். பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீது கவனம் செலுத்துவது இதனை எளிதாக்கும் என பிரதமர் தெரிவித்தார். இந்தப் பெரும் நடைமுறையில் முறையான ஆவணங்கள், போக்குவரத்து பரவல் ஆகியவை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

 

பார்வையற்ற பயனாளி திருமதி சுமேரா கானிடம், தடுப்பூசி குறித்த அனுபவத்தை பிரதமர் விசாரித்தார். அவரது கல்வி சாதனைகள் பற்றி பாராட்டிய பிரதமர், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற அவரது விருப்பத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக திரு மோடி புகழ்ந்துரைத்தார்.

 

பிரதமரின் உரை

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், புனிதமான கணேச உத்சவ் பருவத்தில், பாதுகாப்பு பெற்ற கோவா மக்களைப் பெரிதும் பாராட்டினார். கோவாவில் தகுதியுள்ள மக்கள் அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார். ‘’ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய மைல்கல் ஆகும். கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் கருத்தைப் பறைசாற்றுவது என்னை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளது’’ என்றார் அவர்.

இந்தப் பெரும் சாதனை தினத்தில் திரு மனோகர் பாரிக்கரின் சேவைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

கடந்த சில மாதங்களில், பலத்த மழை, புயல்கள், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்த்து கோவா துணிச்சலுடன் போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இந்த இயற்கைப் பேரிடருக்கு இடையிலும், கொரோனா தடுப்பூசி வேகத்தைப் பராமரித்த கோவா குழுவினரை அவர் புகழ்ந்து பாராட்டினார்.

சமூக, புவியியல் சவால்களைச் சமாளிப்பதில் கோவா காட்டிய ஒருங்கிணைப்பை பிரதமர் பாராட்டினார். மாநிலத்தின் தொலைதூரத்தில் உள்ள கோனாகோனா உப பிரிவில், தடுப்பூசி செலுத்தும் வேகம், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்-ன் பயன்களை கோவா காட்டியுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.

நான் பல பிறந்த நாள்களைப் பார்த்திருக்கிறேன். நான் எப்போதும் அவற்றை லட்சியம் செய்வதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளிலும், நேற்றைய தினம் என்னை பெரிதும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டது என்று உணர்வுபூர்வமாக பிரதமர் குறிப்பிட்டார். நேற்றைய நிகழ்வு, நாட்டின் முயற்சிகள் மற்றும் கொரோனா வாரியர்களுக்கு கூடுதல் சிறப்பை அளித்துள்ளது. 2.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்களின் கருணை, சேவை, கடமை உணர்வு ஆகியவற்றை அவர் பாராட்டினார். ‘’ இதனுடன் தொடர்புள்ள அனைவரும் சேவை மனப்பான்மையுடன் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இது அவர்களது கருணை, கடமை காரணமாக ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது ‘’, என உணர்ச்சிப் பெருக்குடன் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல், நாட்டு மக்களுக்கு உதவுவதில்  ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை மக்களின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், அவர்களால்தான் நேற்று இது சாத்தியமானதாக கூறினார். சேவை உணர்வு கொண்ட மக்களின் கருணை மற்றும் கடமை உணர்வால், 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிந்துள்ளது. இமாச்சலம், கோவா, சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவை தகுதியுள்ளோருக்கு 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சிக்கிம், அந்தமான் நிக்கோபார், கேரளா, லடாக், உத்தரகாண்ட், தாத்ரா நாகர் ஹவேலி ஆகியவை இந்த சாதனைக்கு பக்கத்தில் உள்ளன.

இந்தியா தனது சுற்றுலா தளங்களில் தடுப்பூசி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இது பற்றி இதுவரை வெளியில் பேசப்படவில்லை. நமது சுற்றுலா இடங்கள் திறக்கப்படுவது முக்கியமாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அண்மையில் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குதல், சுற்றுலா துறையுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு அரசின் உத்தரவாதத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வசதி, பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

இரட்டை எஞ்சின் அரசு, கோவா சுற்றுலா துறையை மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஆற்றல் மிக்கதாக மாற்றியுள்ளதாக கூறிய பிரதமர், மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அதிக வசதிகளை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மோபா கிரீன்பீல்டு விமான நிலையம், ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 6 வழிச்சாலை, அடுத்த சில மாதங்களில் திறக்கப்படவுள்ள வடக்கு, தெற்கு கோவாவை இணைக்கும் சுவாரி பாலம் ஆகியவை மாநிலத்தின் இணைப்பு தொடர்பை அதிகரித்து வருகின்றன.

அம்ரித் கால் தன்னிறைவை அடைய சுயம் பூர்ண கோவா என்ற உறுதியை கோவா எடுத்துக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய திரு மோடி, 50-க்கும் மேற்பட்ட பாகங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். கழிப்பறை வசதி, முழுமையான மின்சாரமயமாக்கல், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் பெரு முயற்சி ஆகிய கோவாவின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். நாட்டில் இரண்டு ஆண்டுகளில் 5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கோவா மேற்கொண்ட முயற்சிகள், சிறந்த நிர்வாகத்துக்கான தெளிவான முன்னுரிமையைக் காட்டுகிறது. ஏழை குடும்பங்களுக்கு ரேசன் வழங்குதல், இலவச எரிவாயு சிலிண்டர், பிரதமர் சம்மான் நிதி விநியோகம், பெருந்தொற்று காலத்திலும் கிசான் கடன் அட்டைகள் விரிவாக்கம், தெருவோர வியாபாரிகளுக்கு ஸ்வநிதி வழங்கல் போன்ற கோவா மாநிலத்தின் முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். எல்லையற்ற வாய்ப்புகளின் மாநிலம் கோவா என்று கூறிய பிரதமர், ‘’ கோவா நாட்டின் வெறும் மாநிலம் மட்டுமல்ல, இந்தியா முத்திரையின் வலுவான அடையாளம்’’ என்று கூறினார்.

***

 



(Release ID: 1756057) Visitor Counter : 263