இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டிக்கு, 2 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பதிவு: விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
Posted On:
14 SEP 2021 11:23AM by PIB Chennai
பள்ளிக் குழந்தைகளுக்கான, இந்தியாவின் முதல் உடல் தகுதி மற்றும் விளையாட்டுத்துறை வினாடி வினா போட்டியான, ‘ஃபிட் இந்தியா வினாடி வினா’, பங்கேற்பாளர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, முக்கிய அதிர்ஷ்ட அறிவிப்பாக, ஒரு லட்சம் பள்ளிகள் பரிந்துரைக்கும், முதல் 2 லட்சம் மாணவர்களை இந்த தேசியளவிலான வினா வினா போட்டியில் இலவசமாகப் பதிவு செய்வதற்கான அறிவிப்பை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும், இந்த இலவச வினாடி வினா போட்டிக்கு 2 மாணவர்களைப் பரிந்துரைக்க முடியும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
பள்ளிக் குழந்தைகளிடையே உடல் தகுதி மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, இந்த முடிவு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூரால் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் தொலை நோக்கான ‘ஃபிட் இந்தியா இயக்கத்தின்’ ஒரு பகுதியாக இந்த ‘ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டியில், அதிக மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, முதல் 1 லட்சம் பள்ளிகள் பரிந்துரைக்கும் 2 லட்சம் மாணவர்களுக்கான பதிவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் கூறினார்.
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில், நாட்டின் முதல் விளையாட்டு மற்றும் உடல் தகுதி பற்றிய ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், கடந்த 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். தேசிய அளவிலான இந்த வினாடி வினா போட்டியில் ரூ.3.25 கோடி பரிசுத் தொகை உள்ளது. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், நாடு முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த வினாடி வினா போட்டியில் நாட்டின் ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவமும் இருக்கும் மற்றும் ஆன்லைன் மற்றும் ஒளிபரப்புச் சுற்றுகளின் கலவையாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள பள்ளிக்குழந்தைகள் தங்களின் உடல் தகுதி மற்றும் விளையாட்டு அறிவை, தங்கள் சக மாணவர்களுடன் சோதித்தறியும் வாய்ப்பை பெறும் வகையில் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபிட் இந்தியா வினாடி வினா போட்டியில் பங்குபெறுபவர்களின் விவரங்கள், ஃபிட் இந்தியா இணையதளத்தில் கிடைக்கிறது.
-----
(Release ID: 1754776)
Visitor Counter : 258
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam