இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் பாராட்டு

Posted On: 08 SEP 2021 5:50PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஐந்து தங்கம் மற்றும் எட்டு வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் இன்று பாராட்டு தெரிவித்தார்.

மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமாணிக், விளையாட்டு துறை செயலாளர் திரு ரவி மிட்டல், இளைஞர் நலத்துறை செயலாளர் திருமதி உஷா சர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அனைத்து வீரர்களுக்கும் அவர்களது சிறப்பான பங்களிப்பிற்காக வாழ்த்து தெரிவித்த திரு அனுராக் தாகூர், “2016 பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய குழுவின் எண்ணிக்கையே 19 ஆகத் தான் இருந்தது. ஆனால் இந்த முறை நாடு 19 பதக்கங்களையே வென்றுள்ளது. மனித உணர்வே அனைத்தையும் விட மேலானது என்று நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். நமது பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார்.

சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதற்கான அரசின் ஆதரவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் பாராலிம்பிக் வீரர்கள் தொடர்ந்து சிறந்து விளங்க அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான லட்சியத்தை அடைவதில் இதுவும் ஒரு நடவடிக்கை என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற அனைவருமே நமது உண்மையான நாயகர்கள். கனவு கண்டால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்,” என்றார்.

அரசின் ஆதரவால் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாக கூறிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திரு நிசித் பிரமாணிக், ஒவ்வொரு வீரர் வெற்றி பெற்ற பின்னரும் அவர்களுடன் பிரதமர் நிகழ்த்திய காணொலி உரையாடல் உண்மையிலேயே அவர்களுக்கு ஊக்கமளித்ததாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753234

-----


(Release ID: 1753349) Visitor Counter : 242