பிரதமர் அலுவலகம்

ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் வெளியிட்டார்


பாரதத்தின் மிகச்சிறந்த பக்தராகவும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் திகழ்ந்தார்: பிரதமர்

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் மீதான நமது ஞானத்தில் இருந்து உலகம் பயன்பெற வேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது: பிரதமர்

பக்தி இயக்கத்தின் சமூக புரட்சி இல்லாது இந்தியாவின் நிலை மற்றும் அமைப்பை கற்பனை செய்ய கடினமாக உள்ளது: பிரதமர்

பக்தி வேதாந்தத்தை உலகத்தின் உணர்வோடு இணைத்தவர் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள்

Posted On: 01 SEP 2021 5:36PM by PIB Chennai

ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று வெளியிட்டார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாடிய பிரதமர், ஜென்மாஷ்டமியும், ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆன்மிக கற்றலின் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை ஒரே சமயம் அடைந்தது போல் இருக்கிறது என்று அவர் கூறினார். விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் சமயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். “ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களை பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கானோர் மற்றும் பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் இன்றைக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்,” என்று பிரதமர் கூறினார்.

பகவான் கிருஷ்ணரின் மீது பிரபுபாதா சுவாமி கொண்டிருந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட பக்தி குறித்து பேசிய பிரதமர், பாரதத்தின் மிகச்சிறந்த பக்தராகவும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் திகழ்ந்தார் என்றார். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்காட்லாந்து கல்லூரியில் இருந்து பட்டயத்தை பெற அவர் மறுத்தார் என்று பிரதமர் கூறினார்.

நமது யோகா அறிவு, இந்தியாவின் நீடித்த வாழ்க்கைமுறை, ஆயுர்வேதம் போன்ற அறிவியல் ஆகியவை உலகெங்கும் பரவியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இவற்றில் இருந்து உலகம் பயன்பெற வேண்டும் என்பதே நமது எண்ணமாக உள்ளது என்று அவர் கூறினார். நாம் ஏதாவது வெளிநாட்டுக்கு செல்லும் போது, அங்குள்ளவர்கள் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கூறும் போது நமக்கு பெருமையாக உள்ளது என்று திரு மோடி கூறினார். மேக் இன் இந்தியா பொருட்கள் அத்தகைய அங்கீகாரத்தை பெறும் போது அதே மாதிரியான உணர்வு தோன்றும் என்று பிரதமர் கூறினார். இது தொடர்பாக இஸ்கானிடம் இருந்து நாம் நிறைய கற்கலாம்.

அடிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியா எனும் உணர்வை பக்தி அணையாமல் வைத்தது. பக்தி இயக்கத்தின் சமூக புரட்சி இல்லாது இந்தியாவின் நிலை மற்றும் அமைப்பை கற்பனை செய்ய கடினமாக உள்ளது என்று அறிஞர்கள் இன்றைக்கும் கூறுவதாக அவர் கூறினார். நம்பிக்கை, சமூக படிநிலைகள் மற்றும் வசதிகள் ஆகிய பாகுபாடுகளை களைந்து படைப்புகளை இறைவனுடன் பக்தி இணைத்தது. அத்தகைய கடினமான காலகட்டத்தில் கூட, சைதன்ய மகாபிரபு போன்ற துறவிகள் சமுதாயத்தை பக்தியுடன் பிணைத்து நம்பிக்கை எனும் மந்திரத்தை அளித்தனர்.

வேதாந்தத்தை மேற்கு நோக்கி ஒரு கட்டத்தில் சுவாமி விவேகானந்தர் எடுத்து சென்றாரென்றால், ஸ்ரீல பிரபுபாதாவும் இஸ்கானும் சரியான நேரத்தில் பக்தி யோகாவை உலகத்திடம் எடுத்து செல்லும் சிறப்பான பணியை செய்தனர் என்று பிரதமர் கூறினார். பக்தி வேதாந்தத்தை உலகத்தின் உணர்வோடு இணைத்தவர் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் என்று பிரதமர் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான இஸ்கான் கோவில்கள் இருப்பதாகவும், குருகுலங்கள் இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவை பொருத்தவரை நம்பிக்கை என்றால் லட்சியம், உற்சாகம், கொண்டாட்டம் மற்றும் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கை என்று உலகத்திடம் இஸ்கான் எடுத்துரைத்துள்ளது. கட்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், உத்தரகாண்ட் சோகத்தின் போதும், ஒடிஷா மற்றும் வங்கத்தில் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட போதும் இஸ்கான் செய்த சேவைகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். பெருந்தொற்றின் போது இஸ்கான் எடுத்த முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். 

 



(Release ID: 1751167) Visitor Counter : 234