பிரதமர் அலுவலகம்

உஜ்வாலா 2.0 திட்டத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 08 AUG 2021 4:56PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 10, 2021 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அறிமுகப்படுத்துவார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடி, நாட்டு மக்களுக்கும் பிரதமர் உரையாற்றுவார்.

உஜ்வாலா 1.0 முதல் உஜ்வாலா 2.0 வரையிலான பயணம்:

கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது. மேலும், திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல்  எட்டப்பட்டது.

நிதியாண்டு 21-22-க்கான‌ நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா  திட்டத்தின் முதற்கட்டத்தில்  கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க (உஜ்வாலா 2.0 கீழ்) திட்டமிடப்பட்டுள்ளது.

வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்புடன், பயனாளிகளுக்கு முதல் மறு நிரப்புதல் மற்றும் சூடேற்றும் தட்டும் உஜ்வாலா 2.0 திட்டத்தில் இலவசமாக வழங்கப்படும். மேலும், இதில் சேர்வதற்கான நடைமுறைகளுக்கு குறைந்தபட்ச காகித பயன்பாடே தேவைப்படும். உஜ்வாலா 2.0 திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சேர்வதற்கு ரேஷன் அட்டைகள் அல்லது முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. குடும்ப உறுதி ஆவணம்' மற்றும் முகவரி ஆதாரத்திற்குசுய வாக்குமூலமே போதுமானது. உலகளாவிய சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான அணுகலை வழங்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைய உஜ்வாலா 2.0 திட்டம் உதவிகரமாக இருக்கும்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், உத்தரப் பிரதேச முதல்வர் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

*****************


(Release ID: 1743832) Visitor Counter : 4321