பிரதமர் அலுவலகம்

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்


75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதுடன், எதிர்கால இந்தியாவிற்கான தெளிவான தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கும் சுதந்திர தின விழா ஒரு வாய்ப்பாக அமையும் : பிரதமர்

பரப்பளவு, தொழில்நுட்பம் மற்றும் நிதிப் பிணைப்புகளால் சுருங்கிவரும் உலகில், நமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்காக, உலகம் முழுவதும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன : பிரதமர்

நமது பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கவனத்தில் கொண்டு பார்த்தால், நமது உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை ஏற்றுமதி வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன : பிரதமர்

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், நமது உற்பத்தியின் அளவை அதிகரிப்பது மட்டுமின்றி, உலகளவிலான தரம் மற்றும் திறனையும் அதிகரிக்கச் செய்யும் : பிரதமர்

முன் தேதியிட்டு வரி வசூலிப்பதை கைவிடுவது என்ற இந்தியாவின் முடிவு, நமது வாக்குறுதி மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிப்பதோடு, இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வலிமையும் உள்ளது என்பதை முத

Posted On: 06 AUG 2021 8:48PM by PIB Chennai

ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார்.  மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர்.   இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இதுவே சரியான தருணம் என்றார்.  75-வது சுதந்திர தின விழாவுடன், எதிர்கால இந்தியாவிற்கான, தெளிவான தொலைநோக்கு மற்றும் செயல்திட்டத்தை வகுக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.   இதில், நமது ஏற்றுமதி லட்சியங்களும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.   நில அமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி இணைப்புகள் காரணமாக, தற்போது உலகம் நாளுக்குநாள் சுருங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.   அதுபோன்ற ஒரு சூழலில், நமது ஏற்றுமதிகளை விரிவுபடுத்த, உலகெங்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருவோரைப் பாராட்டிய அவர், உற்சாகம், நம்பிக்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பான லட்சியம், குறிக்கோள்களை அடைய அனைத்துத் தரப்பினரும் காட்டிவரும் உறுதிப்பாட்டையும் அவர் பாராட்டினார்.   உலகளாவிய பொருளாதாரத்தில் நமது முந்தைய பங்களிப்புகளை மீண்டும் அடைய ஏதுவாக,  நமது ஏற்றுமதிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  

கோவிட்டிற்கு பிந்தைய உலகில், உலகளாவிய வினியோகச் சங்கிலியால் ஏற்படுத்தப்படும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பலன் அடையுமாறும் வர்த்தகத் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.    நமது பொருளாதார அளவு மற்றும் கண்ணுக்குப் புலப்படாத வளம், நமது உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் கட்டமைப்பு போன்றவற்றைக் கருத்தில் கொள்வோமானால், ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.   நாடு, சுயசார்பு இந்தியா இயக்கத்தை நோக்கிச் செல்லும் வேளையில், இந்தியாவின் ஏற்றுமதியைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டியதும் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும்.  

ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான நான்கு காரணிகளையும் பிரதமர் பட்டியலிட்டார்.    நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அது தரமான போட்டியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.     இரண்டாவதாக, போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையினர் தொடர்ந்து பாடுபட வேண்டும்.   மூன்றாவதாக, அரசு ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதோடு, இறுதியாக, இந்தியப் பொருட்களுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் அவசியம்.   இந்த நான்கு அம்சங்களையும் ஒருங்கிணைந்து மேற்கொண்டால்,  இந்திய உற்பத்திப் பொருட்களுக்கு உலகில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவதென்ற இலட்சியத்தை அடையலாம்.  

வர்த்தக உலகின் தேவைகளைப் புரிந்துகொண்டு,  மத்திய – மாநில அரசுகள் முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.   குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க , சுயசார்பு இந்தியா இயக்கத்தின்கீழ்  அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், அவசரகாலக் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.3லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.    உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், நமது உற்பத்தி அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, உலக அளவிலான தரம் மற்றும் திறனையும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.   இது சுயசார்பு இந்தியாவிற்கு புதிய சூழலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   7 ஆண்டுகளுக்கு முன்பு வரை 8 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.  7 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா 0.3பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்களே ஏற்றுமதி செய்த நிலையில்,  தற்போது அது 3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதையும் பிரதமர் விவரித்தார். 

நாட்டில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான நேரம் மற்றும் செலவைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.   இதற்காக, பன்னோக்குப் போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதற்கான பணிகள் அனைத்து மட்டத்திலும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொரொனா பெருந்தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக பிரதமர் தெரிவித்தார்.   தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.   தடுப்பூசி செலுத்தும் பணியும் நாட்டில் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    நாட்டு மக்கள் மற்றும் தொழில் துறையினரின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

வர்த்தக நடவடிக்கைகளில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.   முன்தேதியிட்டு வரி வசூலிப்பதைக் கைவிடுவதென்ற இந்தியாவின் முடிவு, நமது வாக்குறுதி மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிப்பதோடு, இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வலிமையும் உள்ளது என்பதை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

ஏற்றுமதி இலக்குகளை அடைவதிலும், சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் மற்றும் கடைக்கோடி வரை சிறந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் மாநில அரசுகளின் பங்களிப்பின் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.    ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஏதுவாக, கட்டுப்பாடுகளால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கவும் மத்திய அரசு, மாநிலங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.  மாநிலங்களில் ஏற்றுமதி வளாகங்களை உருவாக்க, மாநில அரசுகளிடையே ஆரோக்கியமான போட்டி ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.    மாவட்டத்திற்கு ஒரு பொருளையாவது உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு, மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.   

முழுமையான மற்றும் விரிவான செயல்திட்டத்தால் மட்டுமே நமது ஏற்றுமதி இலக்குகளை அடைய முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.     எனவே, புதிய பொருட்கள் உற்பத்தி, புதிய இலக்கு மற்றும் சந்தைகளை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  

வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள், தாங்கள் எந்த நாட்டில் பணியாற்றுகிறோமோ அந்த நாட்டின் தேவைகளைக் கண்டறிவது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  இந்தியத் தொழில் துறை மற்றும் வர்த்தகத் துறையினருக்கு ஒரு பாலமாக  வெளிநாட்டுத் தூதர்கள் திகழ வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.    வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஏற்றுமதியாளர்கள் தொடர்புகொள்வதற்கான நிலையான நடைமுறைகளை வகுக்குமாறும் வர்த்தக அமைச்சகத்தை அவர் கேட்டுக் கொண்டார்.   

நமது ஏற்றுமதிகள் வாயிலாக நமது பொருளாதாரம் அதிகப் பலனை அடைவதற்கு, தடையற்ற, உயர்தரம் வாய்ந்த வினியோகச் சங்கிலியை உள்நாட்டிலும் உருவாக்குவது அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.    இதற்காக, புதிய பங்குதாரர்களுடன் புதிய உறவுகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.   இந்திய ஏற்றுமதியாளர்கள், நாட்டின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நமது மீனவர்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புதிய தொழில்களை ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

தரம் மற்றும் நம்பகத்தன்மையில் புதிய அடையாளத்தைத் தோற்றுவிக்குமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.    உயர் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான தேவையை இயற்கையாகவே உருவாக்குவது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.     தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.    சுயசார்பு இந்தியா மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதென்ற இலட்சியத்தை அடைய தொழில் துறையினர் பாடுபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.  

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில்,  இந்த நிகழ்ச்சியின் தனித்துவத்தை எடுத்துரைத்தார்.   உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உலகளவில் எடுத்துச் செல்வது தான் நோக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில நாடுகளின் தேவைக்கேற்ப நமது உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டியது இந்தியத் தூதரங்களின் கடமை என்றும் அவர் கூறினார்.  மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில்,  உலகளாவிய சூழல் நமக்கு சாதகமாக உள்ள நிலையில்,   நமது ஏற்றுமதியை அதிகரிக்க பாடுபட வேண்டும் என்றார்.  

இந்தியாவின்  ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய, இந்தியத் தூதர்களும் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளைத் தெரிவித்தனர்.    நாடுகளின் தேவைக்கேற்ப நமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.   

*******************

 


(Release ID: 1743534) Visitor Counter : 519