பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தூதர் மாண்புமிகு டோனி அபாட் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு

Posted On: 05 AUG 2021 6:24PM by PIB Chennai

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தூதர் எனும் முறையில் 2021 ஆகஸ்ட் 2 முதல் 6 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு டோனி அபாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தி இந்திய-ஆஸ்திரேலிய விரிவான யுக்திசார்ந்த கூட்டின் முழுப் பலனையும் அடைவதற்கான வழிகளை இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு, நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கான பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள லட்சியத்தை அடைவதற்கு இரு நாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே சமீப காலங்களில் சிறப்பான முறையில் வளர்ந்து வரும் கூட்டு குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர் திரு மோடி, இந்த பயணத்தில் பிரதமர் திரு மோரிசன் மற்றும் முன்னாள் பிரதமர் திரு அபாட்டின் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் திரு மோரிசனுடன் கடந்த வருடம் தாம் மேற்கொண்ட காணொலி உச்சி மாநாட்டை நினைவுக் கூர்ந்த பிரதமர், நிலைமை சீரடைந்தவுடன் பிரதமர் திரு மோரிசனை இந்தியாவுக்கு வரவேற்க தாம் ஆவலுடன் உள்ளதாக கூறினார்.

2020 ஜூன் 4 அன்று பிரதமர் திரு மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் இடையே  நடைபெற்ற தலைவர்களுக்கான காணொலி உச்சி மாநாட்டில், இருதரப்பு உறவு யுக்திசார்ந்த கூட்டாக மேம்பட்டது. இதன் கீழ் பரஸ்பர நலனுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்த உறுதி எடுத்துக்கொண்ட இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், விரிவான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்தன. இந்த பகிரப்பட்ட லட்சியத்தின் பிரதிபலிப்பாக மாண்புமிகு டோனி அபாட்டின் தற்போதைய இந்தியப் பயணம் அமைந்துள்ளது.

 

---


(Release ID: 1742901) Visitor Counter : 230