நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு 4வது திட்டம்: தமிழகம் உட்பட 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்
Posted On:
13 JUL 2021 3:29PM by PIB Chennai
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு 4வது திட்டத்தின் கீழ், தமிழகம் உட்பட 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை எடுத்துச் சென்றன.
கொவிட்-19 தொற்று காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு நீண்ட கால, இலவச உணவு தானியங்கள் விநியோக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்புத் திட்டம் 2021 ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதமரின் ஏழைகள் நலன் 4வது திட்டத்தின் கீழ் 2021 ஜூலை முதல், நவம்பர் வரை 198.79 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், தத்ரா மற்றும் நகர் ஹவேலி / டாமன் மற்றும் டையு, தில்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 2021 ஜூலை 12ம் தேதி வரை, 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளன.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு 4வது திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் போதிய இருப்புகளை இந்திய உணவுக் கழகம் ஏற்கனவே வைத்துள்ளது. தற்போது, மத்திய தொகுப்பின் கீழ், 583 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 298 லட்சம் மெட்ரிக் டன் அரிசி (மொத்தம் 881 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்) உள்ளன.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு 3வது திட்டத்தின் கீழ் (மே-ஜூன் 2021) இந்திய உணவு கழகம், 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 78.26 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை வழங்கியது.
அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுமுகமான விநியோகத்தை உறுதி செய்ய, இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உணவு தானியங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், 4005 ரயில் பெட்டிகளில் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் ஏற்றியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735064
******
(Release ID: 1735064)
(Release ID: 1735086)
Visitor Counter : 294