மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நிபுண் பாரத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 05 JUL 2021 4:17PM by PIB Chennai

மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்துகொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை (நிபுண் பாரத்) மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாடிய அமைச்சர், 3 முதல் 9 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை நிபுண் பாரத் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடிப்படை மொழியறிவு, எண்ணறிவு மற்றும் எழுத்தறிவுக்காக ஒவ்வொரு குழந்தை மீதும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் சிறந்த படிப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களாக குழந்தைகள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். கல்வி கற்பதை முழுமையான, ஒருங்கிணைந்த, மகிழ்ச்சியான மற்றும் ஈடுபாடு நிறைந்த அனுபவமாக மாற்றுவது  நிபுண் பாரத்தின் லட்சியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவின் முக்கியமான விஷயங்களை இத்திட்டம் கருத்தில் கொள்வதாக தெரிவித்த திரு  பொக்ரியால், தேசிய, மாநில, மாவட்ட, வட்ட மற்றும் பள்ளி அளவில் இதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடிப்படை அளவில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2021-22-ம் ஆண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூபாய் 2,688.18 கோடி ரூபாய் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, தேசத்தை கட்டமைப்பதில் தரமான கல்வி முக்கிய பங்காற்றுவதாகவும், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு அதன் மிக முக்கிய அங்கமாக திகழ்வதாகவும் கூறினார். இத்திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வி குறித்த எண்ணம் வரும் காலங்களில் மாறி 21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கூறினார்.

நிபுண் பாரத் குறித்த விளக்க காட்சியை காண கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தவும்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc20217531.pdf

நிபுண் பாரத் வழிகாட்டுதல்களை இங்கே காணலாம்: https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/NIPUN_BHARAT_GUIDELINES_EN.pdf 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732830

*****************


(Release ID: 1732915) Visitor Counter : 484