சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் கொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 29-வது உயர் நிலைக் கூட்டம்

Posted On: 28 JUN 2021 2:48PM by PIB Chennai

கொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 29-வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே. பால் காணொலிக் காட்சி வாயிலாக இதில் பங்கேற்றார்.

கொவிட் தடுப்பூசித் திட்டம் பற்றிப் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையாக அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. ஆனால் இந்தியாவிலோ, இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தான் இந்தத் திட்டம் துவங்கியது. கொவிட் தடுப்பூசியின் புதிய கொள்கையின் கீழ்  உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக விநியோகிக்கிறது. இன்று காலை 8 மணி வரையில் 32,36,63,297 தடுப்பூசிகள் பல்வேறு பிரிவினருக்கும் போடப்பட்டுள்ளது”, என்று கூறினார்.

இந்த கொவிட்-19 காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மியூகோர்மைகாசிஸ் நோய்த்தொற்றின் நிலவரம் குறித்தும் அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்களிடம் அவர் எடுத்துரைத்தார். மொத்த பாதிப்பான 40,845-இல் 31,344 பேருக்கு மூளையைக் தாக்கும் தன்மை வாய்ந்த மியூகோர்மைகாசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சரியான நடத்தை விதி முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் குழு மிகக் கடுமையாக வலியுறுத்தியது. இதுதொடர்பாக தொடர்ந்து  விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது மற்றும் கை சுத்தத்தைப் பராமரிப்பதன் அவசியத்தை டாக்டர் வி கே பால் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730873

*****************(Release ID: 1730977) Visitor Counter : 366