பிரதமர் அலுவலகம்
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை பிரதமர் நடத்தினார்
தடுப்பூசி வழங்கலின் வேகம் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது முக்கியம் என்றார்
எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர்
கோவின் தளம் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்துள்ள தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு விருப்பமுள்ள அனைத்து நாடுகளுக்கும் உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
3.77 கோடி டோஸ்கள் கடந்த 6 நாட்களில் வழங்கப்பட்டுள்ளன. மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட இது அதிகமாகும்
Posted On:
26 JUN 2021 7:32PM by PIB Chennai
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் கொவிட் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மூத்த அதிகாரிகளுடனான கூட்டத்தை பிரதமர் நடத்தினார்.
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்த விரிவான விளக்கத்தை அதிகாரிகள் பிரதமருக்கு அளித்தனர். வயது வாரியாக வழங்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தின் எண்ணிக்கை குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
வரும் காலங்களில் தடுப்புமருந்து விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
கடந்த 6 நாட்களில் 3.77 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட இது அதிகமாகும் என்றும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் 128 மாவட்டங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும், 16 மாவட்டங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி வழங்கலின் வேகம் இவ்வாரத்தில் அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இதைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது முக்கியம் என்றார்.
தடுப்புமருந்து குறித்து மக்களை சென்றடைவதற்காக புதுமையான முறைகளை ஆராய்ந்து செயல்படுத்த மாநில அரசுகளுடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை ஈடுபடுத்துவதற்கான தேவை குறித்து பிரதமர் பேசினார்.
எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
கோவின் தளம் குறித்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் கூறினர். கோவின் தளம் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்துள்ள தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு விருப்பமுள்ள அனைத்து நாடுகளுக்கும் உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
(Release ID: 1730584)
Visitor Counter : 378
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada