பிரதமர் அலுவலகம்

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அழைப்பு விடுத்தார்

மிகுந்த தேவை உள்ள துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பொம்மை துறையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார்

உள்நாட்டு பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்: பிரதமர்

இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்துகொள்ள உலக நாடுகள் விரும்புகின்றன, பொம்மைகள் அதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம்: பிரதமர்

மின்னணு விளையாட்டுகளுக்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன: பிரதமர்

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு, பொம்மை துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பாக அமைந்துள்ளது: பிரதமர்

Posted On: 24 JUN 2021 1:10PM by PIB Chennai

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று  கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல் மற்றும் திரு சஞ்சய் தோத்ரே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 5-6 ஆண்டுகளாக ஹேக்கத்தான் தளங்கள் வாயிலாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுடன் இளைஞர்கள் இணைந்திருப்பதாகக் கூறினார். நாட்டின் திறன்களை ஒழுங்குப்படுத்துவதும், அவர்களுக்கு ஓர் தளத்தை உருவாக்குவதும் இதன் பின்னணியில் உள்ள எண்ணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் முதல் நண்பன் என்ற முக்கியத்துவத்தையும் கடந்துடாய்கானமிஎன்று அவர் குறிப்பிட்ட பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளின் பொருளாதார அம்சங்களையும் பிரதமர் வலியுறுத்தினார். சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருப்பதாகவும் ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். எண்ணிக்கைகளையும் கடந்து சமுதாயத்தின் தேவைகள் அதிகம் உள்ள துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆற்றலை இந்தத் துறை பெற்றிருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார். ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு தொழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். இந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் நிதி ஆதரவு அளிக்குமாறு பிரதமர் அழைப்புவிடுத்தார்.

புதிய எண்ணங்கள் மேம்படவும், புதிதாக தொடங்கப்படும்  நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லவும், புதிய சந்தையை உருவாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. டாய்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இதுவே உந்துசக்தியாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

குறைந்த கட்டணம் மற்றும் இணைய வளர்ச்சியுடன் கூடிய ஊரக இணைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவில் மெய்நிகர், மின்னணு மற்றும் இணையதள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது உள்ள பெரும்பாலான இணையதள மற்றும் மின்னணு விளையாட்டுகள், இந்திய எண்ணங்களின் அடிப்படையில்  இல்லாமல் ஏராளமானவை வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அதில் பொம்மைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கலாம். மின்னணு விளையாட்டிற்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன. இந்தியாவின் திறன்கள் மற்றும் எண்ணங்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிப்படுத்துகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களும் புதிய நிறுவனங்களும் தங்களது பொறுப்புணர்ச்சியைக் மனதில் கொண்டு செயல்படுமாறும் திரு மோடி கேட்டுக்கொண்டார்.

பொம்மை தொழில்துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திரம் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களது வீரம் மற்றும் தலைமைப் பண்பு முதலியவை விளையாட்டு கருத்துருக்களாக உருவாக்கப்படலாம். ‘சாமானிய மக்களை எதிர் காலத்துடன்' இணைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பெற்றுள்ளார்கள். ‘ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி' ஆகியவற்றை அளிக்கும் ஆதரவைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு அவசியம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

-------

 


(Release ID: 1730014) Visitor Counter : 273