நிதி அமைச்சகம்
உள்கட்டமைப்புக்கான வருங்கால திட்டங்கள் குறித்த கூட்டத்திற்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்
Posted On:
11 JUN 2021 7:17PM by PIB Chennai
உள்கட்டமைப்புக்கான வருங்கால திட்டங்கள் குறித்து மூத்த அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். உள்கட்டமைப்புக்கான வருங்கால திட்டங்கள் குறித்து அமைச்சகங்கள்/துறைகளுடன் நிதி அமைச்சர் நடத்தும் ஐந்தாவது ஆய்வு கூட்டம் இதுவாகும்.
அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதன செலவின திட்டங்கள், பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதன் நிலைமை மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.
நிதி, பொருளாதார விவகாரங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், தொலை தொடர்பு மற்றும் அணு சக்தி செயலாளர்கள், மூன்று அமைச்சகங்கள்/துறைகளை சேர்ந்த மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள்/தலைமை செயல் அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதன செலவின செயல்பாடுகளை ஆய்வு செய்த நிதி அமைச்சர், பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரத்திற்கு புத்தாக்கம் அளிப்பதில் மூலதன செலவுகள் முக்கிய பங்காற்றும் எனவும், மூலதன செலவின இலக்குகளை அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 34.5 சதவீதம் அதிகமான அளவில் ரூ 5.54 லட்சம் கோடி மூலதனத்தை 2021-22 பட்ஜெட் வழங்கியுள்ளதாகவும், இந்த முயற்சிகளுக்கு மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் வலு சேர்க்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உள்கட்டமைப்பு செலவினம் என்பது மத்திய அரசு மட்டுமே செய்ய வேண்டிய ஒன்றல்ல என்று கூறிய திருமதி நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளும், தனியார் துறையும் இதில் பங்காற்ற வேண்டும் என்றார். தனியாருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அமைச்சகங்கள் வழங்க வேண்டுமென்றும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்களை அமைச்சகங்கள் திட்டமிட வேண்டும் என்றும் அவர் கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை விரைந்து செலுத்துமாறு அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் மத்திய பொதுத் துறை நிறுவனங்களை நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726312
*****************
(Release ID: 1726371)
Visitor Counter : 294