உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டினருக்கான இந்திய விசா அல்லது தங்கும் காலம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செல்லுபடியாகும்: உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted On: 04 JUN 2021 3:14PM by PIB Chennai

கொவிட் தொற்று காரணமாக விமானம் கிடைக்காமல், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசா அல்லது தங்கும் காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக செல்லுபடியாகும் விசா மூலம் இந்தியா வந்த வெளிநாட்டினர் பலர், கொவிட் தொற்று காரணமாக விமானம் கிடைக்காததால் இங்கேயே தங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, இவர்கள் தங்கள் விசா காலத்தை நீட்டிப்பதிலும் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 29ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 2020 ஜூன் 30ம் தேதியுடன் விசா காலம் முடிவடைந்த வெளிநாட்டினருக்கு, சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்கள் வரை விசா செல்லுபடியாகும் என கூறியிருந்தது.

அப்போது முதல் ஒவ்வொரு மாதமும், வெளிநாட்டினர் தங்கள் விசா மற்றும் தங்கும் காலத்தை மாதந்தோறும் நீட்டித்து வந்தனர்

இயல்பான விமான போக்குவரத்து இன்னும் தொடங்காததால், இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, வெளிநாட்டினருக்கான விசா அல்லது தங்கும் காலத்தை அபராதம் இன்றி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.  இது போன்ற வெளிநாட்டினர், தங்கள் விசா நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் (FRRO / FRO) விண்ணப்பிக்க தேவையில்லை.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன், அதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு விசா காலத்தைவிட கூடுதலாக தங்கிய காலத்திற்கு  அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724392

 

----



(Release ID: 1724434) Visitor Counter : 304