பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஒற்றை நிறுத்த மையங்கள்: 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 701 மையங்களின் வாயிலாக 3 லட்சம் பெண்களுக்கு ஆதரவு

Posted On: 22 MAY 2021 2:04PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஒற்றை நிறுத்த மையங்கள் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3 லட்சம் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒரே இடத்தில் மருத்துவ சிகிச்சை, காவல் துறை விசாரணை, சட்ட உதவி, மனநல ஆலோசனைகளின் மூலம் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்து போராடுவதற்கு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவித் திட்டமாக மாநில அரசுகள்/ யூனியன் பிரதேச நிர்வாகத்தின் மூலம் கடந்த 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இதுநாள்வரையில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 701 ஒற்றை நிறுத்த மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தமிழகத்தில் 34 மையங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 ஒற்றை நிறுத்த மையங்களும் செயல்படுகின்றன.

கொவிட் பெருந்தொற்றின் தற்போதைய காலகட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட அல்லது துயர நிலையில் உள்ள பெண்கள், துரிதமான உதவி மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக அருகில் உள்ள ஒற்றை நிறுத்த மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான கிருமிநாசினி, சோப், முகக் கவசங்கள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பொது முடக்கக் காலத்தில் ஒற்றை நிறுத்த மையங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களின்  ஆட்சியர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திட்ட வழிமுறைகளின் படி மையங்களை சுமூகமாக இயக்குவதற்கு பணியமர்த்தல்/ ஆள்சேர்ப்பு/ முகமைகளைத்  தேர்ந்தெடுத்தல்/ சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு தனிநபர்கள்/ மருத்துவ உதவி/ உளவியல்- சமூக ஆலோசனை முதலியவற்றில் ஈடுபடுவது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

701 ஒற்றை நிறுத்த மையங்கள் பற்றிய தகவல்களுக்கு: https://wcd.nic.in/schemes/one-stop-centre-scheme-1

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720843

*****************



(Release ID: 1720886) Visitor Counter : 665