பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தொற்றின் நிலவரம் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு ஏற்றவகையில், குறிப்பிடத்தக்க வழிமுறைகளில் பணியாற்றுவதற்கான உத்தியை அதிகாரிகள் பின்பற்றுமாறு வலியுறுத்தல்

Posted On: 20 MAY 2021 1:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்றின் நிலவரம் குறித்து மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை ஏற்கும் பிரதமருக்கு கலந்துரையாடலின் போது அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். தங்களது மாவட்டங்களில் கொவிட் தொற்றின் நிலவரம் மேன்மை அடைந்து வருவதை அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர். தற்போதைய நிலவரத்தைக் கண்காணிப்பதற்கும், திறன் மேலாண்மைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மக்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தங்களது மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று, பணிகளை மேலும் கடினமானதாகவும், சவாலானதாகவும் மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற புதிய சவால்களுக்கு இடையே புதிய உத்திகளும், தீர்வுகளும் தேவை. கடந்த சில நாட்களாக நாட்டில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் மிகக் குறைந்த அளவில் இந்தத் தொற்று ஏற்பட்டாலும், அதன் சவால் நீடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிவரும் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களது அனுபவங்கள் மற்றும் கள பணியின் மூலம் பெறப்படும் தகவல்களால், நடைமுறைக்குத் தகுந்த மற்றும் தரமான கொள்கைகளை தயாரிப்பதற்கு உதவிகரமாக இருந்ததாகக் கூறினார். அனைத்து நிலைகளிலும் மாநிலங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களை உள்ளடக்கி தடுப்பூசி உத்திகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் அனுபவங்களை பயன்படுத்துவதன் அவசியத்தையும், ஒரே நாடாக அனைவரும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். 

பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், கிராமங்களிலிருந்து கொரோனாவை அகற்றுவது, கொவிட் சரியான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவது குறித்தத் தகவல்களை பரப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஊரக மற்றும் நகர் பகுதிகளுக்கு ஏற்றவகையில் குறிப்பிடத்தக்க வழிமுறைகளில் தங்களது உத்திகளை வகுக்குமாறும், ஊரக இந்தியாவில் கொவிட் தொற்று இல்லாத நிலையை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஒவ்வொரு தொற்று நோயும், தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும், தொற்று நோயை எதிர்கொள்ளும் முறைகளில் மாற்றத்தையும்  நாம் ஏற்படுத்தவும், நமக்குக் கற்றுத் தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். உருமாற்றம் செய்வதிலும், வடிவத்தை மாற்றுவதிலும் தொற்று சிறந்து விளங்குவதால், பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான முறைகளும், உத்திகளும் மாறும் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உருமாற்றம் அடைந்துள்ள தொற்று, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை பாதிப்பதாக அவர் தெரிவித்தார். தடுப்பூசித் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தேவையை அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி வீணாவது பற்றிப் பேசிய பிரதமர், ஒரு டோஸ் தடுப்பூசி வீணாவது, என்பது, ஒரு நபருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க இயலவில்லை என்பது அர்த்தம் என்று கூறினார். எனவே தடுப்பூசி வீணாவதை நிறுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாக்கும் அதே வேளையில் அவர்களுக்கு எளிதான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள், இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், கருப்பு சந்தைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் வெற்றியடைந்து, முன்னேறுவதற்கு இந்த நடவடிக்கைகளும் அவசியம் என்று அவர் கூறினார்.

 *****************



(Release ID: 1720258) Visitor Counter : 232