பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 நிலவரம் பற்றி மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


நாட்டின் இதர பகுதிகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும்படி அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தல்

Posted On: 18 MAY 2021 2:26PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று வழிநடத்துவதற்காக பிரதமருக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் பாதிப்பு அதிகரிப்பை சமாளிக்க, மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கைகள் பற்றி தங்கள் அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். ஊரகப் பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் தெரிவித்தனர். சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தொகுக்கும்படி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் இவைகளை நாட்டின் பிற பகுதிகளில் பயன்படுத்தலாம்.  

கலந்துரையாடலுக்குப்பின் அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர், இந்த சிக்கலான நேரத்தில் அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்ட சுகாதார ஊழியர்களையும், முன்களப் பணியாளர்களையும், நிர்வாகிகளையும் பாராட்டினார். இதே வீரியத்துடன் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.   நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் வித்தியாசமாகவும்தனித்துவமான  சவால்களும் உடையதாக உள்ளது என பிரதமர் கூறினார். ‘‘உங்கள் மாவட்டத்தின் சவால்களை, நீங்கள் நன்கு புரிந்து கொள்கிறீர்கள். ஆகையால், உங்கள் மாவட்டம் வெற்றி பெறும்போது, நாடும் வெற்றியடைகிறது. உங்கள் மாவட்டம் கொரோனாவை வீழ்த்தும் போது, நாடும் கொரோனாவை வீழ்த்துகிறது’’ என அவர் கூறினார். கொவிட் தொற்று ஏற்பட்டபோதிலும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய அதிகாரிகளை அவர் பாராட்டினார். அவர்கள் பலருக்கு ஊக்குவிப்பாக உள்ளதாகவும், அவர்கள் செய்த தியாகங்களை தான் புரிந்து கொள்வதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

போர்களத்தில் தலைமை அதிகாரி போல, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில்அனைத்து அதிகாரிகளுக்கும்  முக்கிய பங்கு உள்ளது என பிரதமர் கூறினார். உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தீவிர பரிசோதனை, மக்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல் ஆகியவை இந்த தொற்றுக்கு எதிரான ஆயுதங்கள் என அவர் குறிப்பிட்டார்இந்த நேரத்தில், சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது தேபோல், பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஆகையால், தொற்று குறைந்து வரும் வேளையில், அதிகம் விழிப்புடன் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதுதான் இந்த போராட்டம் எனவும், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். தொற்று பாதிப்பை நிறுத்த வேண்டும்  என்றும் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும், பிரதமரின் நல நிதி மூலம் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும், பல மருத்துவமனைகளில் இந்த ஆலைகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

நோய் பாதிப்பின் தீவிரம், மருத்துவமனையில் சேர்த்தல், உயிரிழப்பு ஆகியவற்றை குறைப்பதில் தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் பிரதமர் பேசினார். கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் கூறினார்தடுப்பூசி முறையை சுகாதாரத்துறை அமைச்சகம் ஒழுங்குபடுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மாநிலங்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கான அட்டவணையை முன்கூட்டியே வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் நிலவரம் குறித்த தகவல் எளிதாகக் கிடைக்கும் போது, அது மக்களின் சவுகரியத்தை அதிகரிக்கிறது என அவர் கூறினார். அதேபோல், கள்ளச்சந்தை விற்பனையும் தடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு முன்களப் பணியாளர்களை அணிதிரட்ட வேண்டும்.

வயல்களில், கிராம மக்கள் சமூக இடைவெளியை பராமரிப்பதை பிரதமர் பாராட்டினார்கிராமங்கள் தகவலைப் பெற்று, தங்களின் தேவைகளுக்கு தகுந்தபடி மாற்றுகின்றன என அவர் கூறினார். இதுதான் கிராமங்களின் பலம். கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். புதுமையான கருத்துக்கள் தெரிவிப்பது, கொள்கை மாற்றங்களை பரிந்துரைப்பதில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம் என பிரதமர் கூறினார். கொவிட் பாதிப்புகள் குறைந்தாலும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், பல மாநிலங்களின் முதல்வர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்), சுகாதாரத்துறை செயலாளர், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

------

 

 



(Release ID: 1719624) Visitor Counter : 226