பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மாரிசன் இடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 07 MAY 2021 2:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு. ஸ்காட் மாரிசனுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.

கொவிட்-19 தொற்றின் இரண்டாவது லைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சரியான தருணத்தில் உதவிகளை வழங்கிய ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு மோடி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சர்வதேச அளவில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும், மருந்துகளும் அனைவருக்கும் சமமாகவும், எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை  இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக, டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் விதிமுறைகளில் தற்காலிகத் தளர்வை மேற்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தருமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

2020-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற மெய்நிகர் உச்சிமாநாடு முதல், இந்திய - ஆஸ்திரேலிய விரிவான கேந்திரக் கூட்டணியின் வளர்ச்சி குறித்துத் தலைவர்கள் கேட்டறிந்ததோடு, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பான ஆலோசனைகளிலும் ஈடுபட்டனர்.

பிராந்திய விஷயங்கள் குறித்து ஆலோசித்த தலைவர்கள், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஆணை, இந்திய - பசிபிக் பகுதியில் தடையற்ற திறந்தவெளிப் போக்குவரத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

*****************


(Release ID: 1716804) Visitor Counter : 204