பிரதமர் அலுவலகம்
அதிக பாதிப்புள்ள மாநில முதல்வர்களுடன் கொவிட் நிலவரம் குறித்த கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்
ஒரே நாடு என்ற உணர்வுடன் நாம் பணியாற்றினால், வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: பிரதமர்
ஆக்ஸிஜன் டேங்கர்களின் பயண நேரத்தை குறைக்க ரயில்வே மற்றும் விமானப்படை பயன்படுத்தப்படுகிறது: பிரதமர்
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகளின் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனை மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
மாநிலங்களுக்கு 15 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது: பிரதமர்
மருத்துவமனைகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்படக் கூடாது: பிரதமர்
மக்கள் பீதியில் பொருட்கள் வாங்குவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்
Posted On:
23 APR 2021 2:42PM by PIB Chennai
சமீபத்தில் கொவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கொவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலைக் கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
பல மாநிலங்கள் மற்றும் 2ம் நிலை மற்றும் 3 ம் நிலை நகரங்களில் தொற்று பாதிப்பை குறிப்பிட்ட பிரதமர், கூட்டு சக்தியுடன் தொற்றை எதிர்த்து போராட அழைப்பு விடுத்தார்.
தொற்றின் முதலாவது அலையின் போது, இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய அடிப்படையாக இருந்தது நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் யுக்திகள் என அவர் கூறினார். அதேபோல், இந்த சவாலையும் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு முழு ஆதரவை அளிக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், மாநிலங்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் விநியோகம் பற்றி, மாநிலங்கள் தெரிவித்த விஷயங்களை பிரதமர் மோடி குறித்துக் கொண்டார். ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன.
தொழிற்சாலை ஆக்ஸிஜன்களும், அவசர தேவையை எதிர்கொள்ள மாற்றிவிடப்படுகின்றன.
மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான தேவைகளை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுகிறதா, கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதை மாநிலங்கள் சோதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளும், தடுத்த நிறுத்தப்படக்கூடாது என்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பல மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல, உயர்நிலை ஒழுங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும் என மாநிலங்களை பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசின் ஒதுக்கீடு கிடைத்ததும், இந்த ஒருங்கிணைப்பு குழு, மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப உடனடியாக அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆக்ஸிஜன் விநியோகம் செய்பவர்களுடன் நேற்று ஒரு கூட்டத்துக்கு தாம் தலைமை தாங்கியதாகவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க இன்றும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளின் பயண நேரத்தை குறைக்க முடிந்த அளவு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்காக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே தொடங்கியுள்ளது. காலி ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லும் பயண நேரத்தை குறைக்க, விமானப்படை விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
வளங்களை மேம்படுத்துவதுடன், பரிசோதனையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். மக்களுக்கு எளிதில் கிடைக்கும் விதத்தில் கொவிட் பரிசோதனை அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில், நமது தடுப்பூசி திட்டம், தாமதமாகக் கூடாது என பிரதமர் குறிப்பிட்டார். உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க தொடங்கப்பட்ட பிரச்சாரம் அதே வழியில் தொடர்கிறது. மே 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
அதிகளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, நாம் திட்ட இலக்குடன் செயல்படுத்துவது அவசியம்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதுடன், மருத்தவமனைகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
சமீபத்தில் நடந்த ஆக்ஸிஜன் கசிவு, மருத்துவமனைகளில் நடந்த தீ விபத்து சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்காத வகையில், நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாடு முழுவதும் கொவிட் தொற்றின் இரண்டாவது அலையையும், நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என அவர் கூறினார்.
இந்த கூட்டத்துக்கு முன்பாக, புதிய தொற்று பாதிப்பை எதிர்கொள்ள செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து டாக்டர் வி.கே.பால் விளக்கினார். மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அதிகரிக்கும் திட்டத்தை டாக்டர் பால் விளக்கினார். மருத்துவ கட்டமைப்புகள், குழுக்கள் மற்றும் விநியோகங்கள், மருத்துவ மேலாண்மை, கட்டுப்பாடு, தடுப்பூசி போடுதல் ஆகியவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த கலந்துரையாடலின்போது, தற்போதைய 2ம் அலையில் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பிரதமரிடம், மாநில முதல்வர்கள் விளக்கினார்கள். பிரதமர் பிறப்பித்த உத்தரவுகள், ‘நிதி’ அமைப்பு தெரிவித்த திட்டங்கள் ஆகியவை நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட உதவும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
-------
(Release ID: 1713574)
Visitor Counter : 313
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam