பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 நிலைமை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

முதல் அலையின் உச்சத்தை நாடு கடந்து விட்டது; முன்பை விட பரவல் விகிதம் அதிவிரைவாக உள்ளது : பிரதமர்
நமக்கு நல்ல அனுபவம், ஆற்றல் உள்ளதுடன் தற்போது தடுப்பூசியும் உள்ளது : பிரதமர்
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய சரியான கொவிட் நடைமுறைகள், கொவிட் மேலாண்மை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர்
மெத்தனம் காரணமாக நமது முயற்சிகளில் எந்தத் தளர்ச்சியும் இருக்கக் கூடாது : பிரதமர்
உயர் கவன மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் இலக்கு எட்டப்படவேண்டும் : பிரதமர்
ஜோதிபாய் புலே, பாபாசாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்களுக்கு இடையே ( ஏப்ரல் 11-14) தடுப்பூசி விழா கடைப்பிடிக்க அழைப்பு

Posted On: 08 APR 2021 9:36PM by PIB Chennai

கொவிட்-19 நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார்.

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கினார். நாட்டில் தடுப்பூசி செலுத்துதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். நாட்டில் தற்போது நிலவும் கொவிட் நிலைமை, தற்போது மிக அதிகமாக பரவும் மாநிலங்கள் மீது செலுத்தப்படும் கவனம் ஆகியவை பற்றி விளக்கிய மத்திய சுகாதாரத்துறை செயலர், இந்த மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தடுப்பூசி உற்பத்தி மற்றும் நாட்டில் அதன் விநியோகம்  குறித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தலைமை ஏற்று அளித்து வரும் வழிகாட்டுதலுக்காக பிரதமருக்கு முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். தங்கள் மாநிலங்களில் கொவிட் நிலை குறித்த விவரங்களை அவர்கள் அளித்தனர். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி முயற்சிகளால், லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம், தடுப்பு மருந்து வீணாதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சில தெளிவான உண்மைகள் குறித்து பிரதமர், முதலமைச்சர்கள் முன்னிலையில் விளக்கினார். முதலாவதாக, முதல் அலையின் உச்சத்தை நாடு கடந்து விட்டது; முன்பை விட பரவல்  விகிதம் அதிவிரைவாக உள்ளது. இரண்டாவதாக, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் முதல் அலையின் உச்சம் கடந்து விட்டது. பல மாநிலங்கள் அந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அவர் கூறினார். மூன்றாவதாக, மக்கள் தற்போது நிலைமையை மிகவும் எளிதாகக் கடந்து செல்கின்றனர், சில மாநிலங்களில் நிர்வாகமும் அவ்வாறே உள்ளது. இத்தகைய சூழலில், தொற்று பரவல் அதிகரித்திருப்பது சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், இந்த சவால்களுக்கு இடையில், நமக்கு சிறந்த அனுபவம், ஆற்றல் வளங்கள் ஆகியவற்றுடன் தடுப்பூசியும் உள்ளது என்பதை  பிரதமர் உறுதிபடச் சுட்டிக்காட்டினார்மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் கடின உழைப்புடன் பொது மக்களின் ஈடுபாடும் நிலைமையைச் சமாளிப்பதில் பெரும்பங்காற்றியுள்ளது. அவர்கள் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

‘’ ‘பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல்ஆகிய சரியான கொவிட் நடைமுறைகள், கொவிட் மேலாண்மை குறித்து  நாம் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று  பிரதமர் வலியுறுத்தினார்தொற்றுபரவக் காரணமான மனிதர்கள் கூட்டமாக கூடுதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பரிசோதனை மூலம் தொற்றைக் கண்டறிதல் இதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்தார். பரிசோதனை மூலம் சமுதாயத்தில் தொற்று பரவலைக் கண்டுபிடிப்பதுடன், தொற்றைப் பரப்பக் கூடியவர்களையும் கண்டறிய முடியும் என்றும், இது மிகவும் முக்கியமாகும் என்றும் பிரதமர் விளக்கினார். தொற்று உறுதி செய்யப்படுவதை 5% அல்லது அதற்கும் குறைவாக ஆக்கும் வகையில், தினசரி அடிப்படையில் பரிசோதனைகள் நடத்துவது கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்கள், கொத்துக் கொத்தாக தொற்று பரவும் இடங்களைக் கண்டுபிடிக்க இது மிகவும் அவசியமாகும். ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகரிப்பதன் மூலம், மொத்த சோதனையில் குறைந்தபட்சம் 70% அளவுக்கு அந்த சோதனைகளை மேற்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், தொற்று பாதித்த ஒவ்வொருவரும், மற்றவர்களுக்கு அதனைப் பரப்பும் வாய்ப்புகள் அதிகம் என்பது பற்றி  விவாதிக்கப்பட்டது. சமுதாயத்தில் தொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தொற்று பாதித்தவர்களைக் கண்டறிதல் அவசியம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் தொற்று பாதித்தவர்களின் 30 தொடர்பாளர்களையாவது கண்டறிதல், பரிசோதனை நடத்துதல், 72 மணி நேரத்துக்குள் தனிமைப்படுத்துதல் அவசியம் என பிரதமர் கூறினார். இதேபோல, கட்டுப்பாட்டு மண்டலத்தின் எல்லையும் தெளிவாக இருக்க வேண்டும். தொற்றால் ஏற்படும் சோர்வு காரணமாக நமது முயற்சிகளில் எந்தத் தளர்ச்சியும் இருக்கக் கூடாது என பிரதமர் வலியுறுத்தினார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இறப்புகள் குறித்த முழுமையான பகுப்பாய்வுடன் கூடிய விரிவான தரவுகள் அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில்  தில்லி எய்ம்ஸ் நடத்தும் வெபினார்களில் பங்கேற்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

உயர் கவன மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் இலக்கு எட்டப்படவேண்டும் என்று மாநிலங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். ஜோதிபாய் புலே, பாபாசாகிப் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த நாள்களான ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 14 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி விழா கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த விழா காலத்தில் அதிகபட்ச எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துவதில், இளைஞர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மெத்தனமாக இருக்க வேண்டாம் என பிரதமர் எச்சரித்தார். தடுப்பூசி உள்ள போதிலும், தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தக்கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், முறையான முன்தடுப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘தவாய்பி-கடாபிஎன்னும் தமது மந்திரத்தை சுட்டிக்காட்டிய  பிரதமர், கொவிட் போக்கு குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

**************

 



(Release ID: 1710590) Visitor Counter : 241