பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டில் கோவையில் பல கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 25 FEB 2021 6:56PM by PIB Chennai

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களே, தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களே, துணை முதல்வர் .பி.எஸ். அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, தமிழக அமைச்சர் வேலுமணி அவர்களே, மரியாதைக்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

வணக்கம்.

இங்கே கோவைக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொழிற்சாலைகள் மற்றும் புதுமை சிந்தனை படைப்புகள் நிறைந்த நகரம் இது. இன்றைக்கு கோவை மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயன் தரக் கூடிய பல வளர்ச்சித் திட்டங்களை நாம் தொடங்கி வைக்கிறோம்.

நண்பர்களே,

பவானிசாகர் அணையை நவீனப்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் இதனால் பயன் பெறும். நமது விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பெரிய பயன்கள் தருவதாக இருக்கும். திருவள்ளுவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, விவசாயிகள் மட்டுமே உண்மையான வாழ்க்கையை வாழ்பவர்கள், மற்ற எல்லோரும் அவர்களின் வழியில் செல்பவர்கள், அவர்களை வணங்குபவர்கள் என அர்த்தம்.

நண்பர்களே,

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறது. தொடர்ந்து மின் விநியோகத்தை அதிகரித்துக் கொண்டிருப்பது, தொழில் துறையின் முக்கிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இன்றைக்கு இரண்டு பெரிய மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பதிலும், மேலும் ஒரு மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் என்.எல்.சி. சார்பில் 709 மெகாவாட் திறன் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேலான செலவில் நிறைவேற்றப் பட்டுள்ளது. 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் என்.எல்.சி. உருவாக்கியுள்ள 1000 மெகாவாட் திறன் உள்ள அனல்மின் நிலையமும், தமிழகத்துக்குப் பெரிதும் பயன் தருவதாக இருக்கும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் மேலான பங்கு தமிழகத்துக்கு அளிக்கப்படும்.

நண்பர்களே,

கடல் வணிகம் மற்றும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் தமிழகத்துக்குப் பெருமைக்குரிய வரலாறு உள்ளது. தூத்துக்குடி ..சிதம்பரனார் துறைமுகத்துடன் தொடர்புடைய பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பழம்பெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ..சி.யின் உழைப்பை நாம் நினைவுகூர்கிறோம். துடிப்பான இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் கடல்சார் வளர்ச்சி குறித்த அவருடைய தொலைநோக்கு சிந்தனை நமக்கு பெருமளவில் உத்வேகம் அளிக்கின்றன.

இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் மூலம், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை துறைமுக முன்முயற்சிக்கு ஆதரவானதாக இது இருக்கும். இதுதவிர, கிழக்கு கடலோரத்தில் பெரிய கப்பல் போக்குவரத்திற்கான துறைமுகமாக இதை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம். நமது துறைமுகங்கள் அதிக செயல்திறன் கொண்டிருந்தால், இந்தியா தற்சார்பு நிலை பெறுவதற்கு பங்களிப்பு செய்வதாகவும், உலக அளவில் வர்த்தகம் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகள் மேம்படுவதாகவும் இருக்கும்.

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் இந்திய அரசு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறது என்பதை, சாகர்மாலா திட்டத்தின் மூலம் அறியலாம். 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 துறைமுகத் திட்டங்களை 2015 முதல் 2035 வரையிலான காலத்தில் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. துறைமுகம் நவீனப்படுத்துதல், புதிய துறைமுக மேம்பாடு, துறைமுகத்துக்கு இணைப்பு போக்குவரத்து வசதி மேம்பாடு, துறைமுகத்துடன் தொடர்புள்ள தொழில்மயமாக்கல், கடலோர சமுதாயத்தினரின் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.

சென்னை மப்பேடு அருகே பல வகை போக்குவரத்து இணைப்பு வசதிகளுடன் கூடிய புதிய சேமிப்புக் கிடங்கு பூங்கா விரைவில் தொடங்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். `சாகர்மாலா திட்டத்தின்' கீழ் `கொரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலத்தை 8 வழிப் பாதையாக மாற்றும்' திட்டம் மேற்கொள்ளப் படுகிறது. துறைமுகத்தில் இருந்து வெளியில் செல்லும் மற்றும் துறைமுகத்துக்கு வரும் போக்குவரத்து தடையின்றி இயங்க இது வகை செய்யும். சரக்கு லாரிகள் வந்து, சரக்குகளை இறக்கிவிட்டு வெளியில் செல்லும் நேரமும் இதன் மூலம் குறையும்.

நண்பர்களே,

வளர்ச்சியும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் நெருக்கமான தொடர்பு கொண்டவை. ..சி. துறைமுகத்தில் கூரைகளுக்கு மேலே சூரியசக்தி மூலம் 500 கிலோ வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 140 கிலோ வாட் அளவுக்கு மேற்கூரை சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதிகள் தொடங்க பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 20 கோடி ரூபாய் செலவில், தரைப் பகுதியில் அமைந்துள்ள 5 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை மின் தொகுப்பு இணைப்பு வசதியுடன் உருவாக்க ..சி. துறைமுகம் பணிகள் மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. துறைமுகத்தின் மின் தேவையில் சுமார் 60 சதவீதத்தை இது பூர்த்தி செய்யும். இதுதான் உர்ஜா தற்சார்பு இந்தியாவுக்கு உண்மையான உதாரணமாக உள்ளது.

அன்பு நண்பர்களே,

ஒவ்வொரு தனி மனிதருக்கும் கண்ணியத்தை உறுதி செய்வது தான் வளர்ச்சியின் அடிப்படையான விஷயமாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் குடியிருக்க வீடு கிடைக்கச் செய்வது தான் அவர்களுக்குக் கண்ணியத்தை அளிப்பதாக இருக்கும். நமது மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டது.

நண்பர்களே,

4144 குடியிருப்புகளைத் திறந்து வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். திருப்பூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் அவை கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் ரூ.332 கோடி செலவில் நிறைவேற்றப் பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும், இதுவரை தனக்கென சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இவை வழங்கப்படும்.

நண்பர்களே,

தமிழகம் பெரும்பாலும் நகர்ப்புறமயமான மாநிலமாக உள்ளது. நகரங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பணிகளைச் செய்வதில் மத்திய அரசும், தமிழக அரசும் முனைப்பாக உள்ளன. தமிழகத்தின் ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரங்களில் பல்வேறு தேவைகளைக் கையாள்வதற்கு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த தீர்வுகளை அளிப்பதாக இந்த மையங்கள் இருக்கும்.

நண்பர்களே,

இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் நிச்சயமாக தமிழக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பெரிய உந்துதலைத் தரும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இன்றைக்குப் புதிய வீடுகள் பெறும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், தற்சார்பு இந்தியாவை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி.

மிக்க நன்றி.

வணக்கம்!!

 

 

 



(Release ID: 1700921) Visitor Counter : 250