பிரதமர் அலுவலகம்

புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், புரட்சியாளர்களின் வசிப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது: பிரதமர்

இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான உத்வேகத்தை அதிகப்படுத்துவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்: பிரதமர்

Posted On: 25 FEB 2021 12:41PM by PIB Chennai

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கும், காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மெர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் புதிய வளாகத்தின் முதல் பகுதிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  மேலும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 

புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஜிப்மெர்) ரத்த மையத்தையும், பெண் தடகள வீரர்களுக்கு  புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் திரு மோடி தொடங்கிவைத்தார். மீண்டும் கட்டப்பட்ட பாரம்பரிய மேரி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

 

மகாகவி சுப்ரமணிய பாரதி, ஸ்ரீ அரவிந்தர் போன்ற ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், புரட்சியாளர்களின் வசிப்பிடமாக புதுச்சேரி திகழ்வதாக நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார். பன்முகத் தன்மையின் சின்னமாக புதுச்சேரி விளங்குவதாகப் பாராட்டிய அவர், இங்கு வசிக்கும் மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசி, வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ள போதும் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார்.

 

மீண்டும் கட்டப்பட்ட மேரி கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர், இந்தக் கட்டிடம் புரோமனேட் கடற்கரைக்கு மேலும் அழகூட்டுவதுடன், அதிக சுற்றுலாப் பயணிகளையும் கவரும் என்று குறிப்பிட்டார்.

 

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை எண் 45-ஏ, காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்குவதுடன், புனித சனீஸ்வரன் ஆலயத்திற்குச் செல்லும் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, ஆரோக்கிய மாதா தேவாலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு செல்வதற்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பையும் எளிதாக்கும் என்று பிரதமர் கூறினார். ஊரக மற்றும் கடல்சார் இணைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதன் வாயிலாக விவசாயத்துறை பயனடையும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளின் வேளாண் பொருட்கள் உரிய காலத்திற்குள் நல்ல சந்தைகளை சென்றடைவதை உறுதி செய்வது அரசின் கடமை என்றும், இந்த இலக்கை அடைவதில் தரமான சாலைகள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.   நான்கு வழிச்சாலைகள் திட்டம், பொருளாதார நடவடிக்கைகளுக்கான உத்வேகத்தை அதிகப்படுத்துவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

பொருளாதார வளத்திற்கும், நல்ல உடல்நலனிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதால், உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நோக்கத்தோடு கேலோ இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு வளாகத்தில், 400 மீட்டர் தூரத்திற்கான சிந்தடிக் ஓடு தளத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறமை மேம்படும். புதுச்சேரியில் சிறந்த விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் வாயிலாக, இந்தப் பகுதியின் இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். லாஸ்பேட்டையில் இன்று தொடங்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும் ஹாக்கி, கைப்பந்து, பளுதூக்குதல், கபடி, எரிந்து பிடிக்கும் கைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளின் வீரர்கள் தங்குவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

வரும் ஆண்டுகளில் சுகாதாரம் முக்கிய துறையாக செயல்படும் என்று பிரதமர் கூறினார். அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கும் நோக்கத்தோடு ஜிப்மெரில் ரத்த மையம் தொடங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ரத்தம், ரத்தம் சார்ந்த பொருட்கள், குருத்தணுக்களை சேமிக்கும் வங்கிகளுக்கு நீண்டகால சிறந்த வசதிகள் கிடைக்கும். இந்த மையம், ஆராய்ச்சி ஆய்வகமாகவும், ரத்த மாற்றத்துடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களில் பயிற்சி பெறுவோருக்கான பயிற்சி மையமாகவும் விளங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

தரமான சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்கு, தரமான மருத்துவப் பணியாளர்கள் நமக்குத் தேவை என்று பிரதமர் கூறினார். காரைக்கால் புதிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி கட்டிடத்தின் முதல் பகுதி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், மருத்துவ மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்குத் தேவையான அனைத்து நவீன  வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

 

சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி சிறு துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டுகையில், இந்தத் திட்டம் நிறைவடைந்த பிறகு கடலில் மீன் பிடிப்பதற்காக இந்தத் துறைமுகத்தை பயன்படுத்தும் மீனவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அதிகத் தேவையையுடைய சென்னையை இணைக்கும் கடல்வழி போக்குவரத்தையும் இந்தத் திட்டம் வழங்கும். இந்தத் திட்டம், புதுச்சேரியில் உள்ள தொழில்துறைகளின் சரக்குப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதுடன், சென்னை துறைமுகத்தின் சரக்கு சுமையையும் குறைக்கும். கடல்சார் நகரங்களில் பயணிகள் போக்குவரத்துக்கான வாய்ப்புகளையும் இந்தத் திட்டம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

 

நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறை, ஏராளமான நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளதாக பிரதமர் கூறினார். மக்கள் தங்களது விருப்பங்களுக்கு ஏற்றவாறு தேர்வுசெய்யும் அதிகாரத்தை இது வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் புதுச்சேரியில் இயங்குவதால் சிறந்த மனித வளங்களை இந்தப்பகுதி பெற்றிருப்பதாக அவர் கூறினார். ஏராளமான வேலைகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதற்கு ஏதுவான பல்வேறு தொழில்களையும் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆற்றலையும் புதுச்சேரி பெற்றுள்ளது. புதுச்சேரியின் மக்கள் திறமையானவர்கள். இது மிகவும் அழகான பகுதி. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எனது அரசின் சார்பாக அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்ற உறுதியை தனிப்பட்ட முறையில் வழங்குவதற்காக இங்கு வந்துள்ளேன்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.



(Release ID: 1700767) Visitor Counter : 227