பிரதமர் அலுவலகம்

முக்கியமான எண்ணெய், எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

அசாமில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; திறந்து வைக்கிறார்

22 பிப்ரவரி அன்று பிரதமர் அசாம், மேற்கு வங்கம் பயணம்

Posted On: 20 FEB 2021 1:51PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திரமோடி அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு 22 பிப்ரவரி 2021 அன்று பயணம் மேற்கொள்கிறார். காலை சுமார் 11.30 மணியளவில் அசாமில் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் பிரதமர் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் போது பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார். மாலை சுமார் 4.30 மணியளவில் மேற்கு வங்கத்தில் ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்; தொடங்கி வைக்கிறார்.

அசாமில் பிரதமர்

இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேமாஜி பொறியியல் கல்லூரியைத் அவர் தொடங்கி வைப்பார். சுவல்குச்சி பொறியியல் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

இந்தத் திட்டங்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு புதிய ஒளிமயமான வாய்ப்புகளை அளிக்கும். எரிசக்தி பாதுகாப்பு, செழுமை ஆகியவற்றில் புதிய சகாப்தத்தைக் கொண்டுவரும். பிரதமரின் தொலை நோக்குப் பார்வையான 'பூர்வோதயா' திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ள இந்தத் திட்டங்கள் கிழக்கு இந்தியாவில் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அசாம் ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைக்கான மத்திய அமைச்சர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையின் இந்த்மாக்ஸ் யூனிட் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தீவனங்களிலிருந்து அதிக அளவிலான எல்பிஜி மற்றும் அதிக ஆக்டேன் காசலின் பெற முடியும். இந்த யூனிட் இயங்குவதன் மூலம் ரிஃபைனரியின் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் திறன் 2.35 எம் எம் டி பி (ஆண்டொன்றுக்கு மில்லியன் மெட்ரிக் டன்) என்ற அளவிலிருந்து 2.7 எம் எம் டி பி வாக அதிகரிக்கும். இது இயக்கப்படுவதால் எல்பிஜி உற்பத்தி 50 டி எம் டி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்) என்ற அளவிலிருந்து 257 டிஎம்டி அளவிற்கு அதிகரிக்கும். மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்) உற்பத்தி 210 டி எம் டி என்ற அளவிலிருந்து 533 டிஎம்டி யாக அதிகரிக்கும்.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம், சுமார் 40,000 கிலோ லிட்டர் கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்கவும், வெட் குரூட் ஆயிலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஃபார்மேஷன் வாட்டர் ஆகியவற்றுக்காகவும் கட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10,000 கிலோ லிட்டர் இயக்கத் திறன் கொண்ட டி ஹைடிரேசன் யூனிட்டும் இந்த 490 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தில் உள்ளது.

டின்சுக்கியாவில் உள்ள மாகுமில்  கேஸ் கம்ப்ரஸர் நிலையம் அமைக்கப்படுவதையடுத்து நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தித்திறன் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 16 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அதிகரிக்கும். 132 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்நிலையம் 3 குறைந்த காற்றழுத்த பூஸ்டர் கம்ப்ரஸர்கள் மற்றும் மூன்று உயர்ந்த காற்றழுத்த லிஃபட்டர் கம்ப்ரஸர்கள் கொண்டதாகும்.

தேமாஜி பொறியியல் கல்லூரி 276 பிஹாக்கள் கொண்ட நிலத்தில் 45 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் அமைக்கப்படும் ஏழாவது அரசு பொறியியல் கல்லூரி இதுவாகும். இக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளுக்கான பிடெக் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சுவால்குச்சி பொறியியல் கல்லூரி 116 பிஹாக்கள் கொண்ட நிலத்தில்,55 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்படும்.

மேற்கு வங்கத்தில் பிரதமர்

நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில்வே விரிவாக்கத் திட்டத்தை, பிரதமர் துவக்கி வைப்பார். இந்த வழித்தடத்தில் அவர் முதலாவது சேவையைக் கொடியசைத்து, துவக்கி வைப்பார். 4.1 கிலோமீட்டர் தொலைவிலான இந்த விரிவாக்க வழித்தடம் 464 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த வழித்தட விரிவாக்கத்தையடுத்து சாலைப்போக்குவரத்து சீரடையும். நகர்ப்புற மக்கள் பயணம் செய்வது எளிதாகும். காளிகாட் மற்றும் தக்ஷினேஷ்வர் ஆகிய இடங்களில் உள்ள உலகப்புகழ் வாய்ந்த காளி கோயில்களுக்கு, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பயணம் மேற்கொள்வதை இந்த வழித்தடம் எளிதாக்கும். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பர நகர் மற்றும் தக்ஷினேஷ்வர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் சுவர் சித்திரங்கள், புகைப்படங்கள், சிலைகள், சிற்பங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கலைக்குண்டா மற்றும் ஜர்கிராம் ஆகிய இடங்களுக்கிடையே 3-வது தடத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். தென் கிழக்கு ரயில்வேயின் மூன்றாவது இணைப்புத் திட்டமான காரக்பூர் ஆதித்யாபூர் ஆகிய இடங்களுக்கிடையே 132 கிலோ மீட்டர் தொலைவிலான வழித்தடத்தில், இந்த வழித்தடம் 30 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும். இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை 1312 கோடி ரூபாயாகும். கலைக்குண்டா, ஜர் கிராம் ஆகிய இடங்களுக்கிடையே நான்கு ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு இடங்களிலும் 4 புதிய ரயில் நிலையக் கட்டிடங்கள், 6 புதிய பாலங்கள்,11 புதிய நடைமேடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஹவுரா -மும்பை டிரங்க் வழித்தடத்தில் இயங்கும் சரக்குப் போக்குவரத்து ரயில்களின் இயக்கத்திற்கும், பயணிகள் நடமாட்டத்திற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன.

அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது கிழக்கு இந்தியாவின் ஹவுரா-பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஹவுரா-பர்தமான் கார்டு வழித்தடத்தில் டான் குனி மற்றும் பருயிபரா ( 11.28 கிலோமீட்டர்) வழித்தடம் நான்காவது இணைப்பு, ஹவுரா பர்தமான் மெயின் இணைப்பு வழித்தடத்தில் ரசுல்பூர் மற்றும் மக்ரா ஆகிய இடங்களுக்கு இடையே (42.42 கிலோமீட்டர்) மூன்றாவது இணைப்பு வழித்தடம் திட்டம் ஆகியவற்றையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது கொல்கத்தாவிற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. ரசுல்பூர் மற்றும் மக்ரா ஆகிய இடங்களுக்கு இடையேயான 3வது இணைப்பு 759 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. டான் குனி மற்றும் பருயிப்பரா ஆகிய இடங்களுக்கு இடையே ஆன நான்காவது இணைப்பு 195 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டங்கள் மூலமாக பயண நேரம் குறைவாகும். ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவது அதிகரிக்கும்இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.



(Release ID: 1699649) Visitor Counter : 178