மத்திய அமைச்சரவை

இந்தியா, மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 FEB 2021 3:57PM by PIB Chennai

இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும். வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், சரக்கு வர்த்தகம், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், சேவைகள் வர்த்தகம், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகள், நபர்களின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பு இடம் பெறுகின்றன.

இரு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை மேம்படுத்துவதற்கான அமைப்புசார்ந்த செயல்முறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் வழிவகுக்கும். உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் (80 வரிசைகள்), வேளாண் பொருட்கள் (25 வரிசைகள்), ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் (27 வரிசைகள்), அடிப்படை உலோகங்கள் மற்றும் அவை சார்ந்த பொருட்கள் (32 வரிசைகள்), மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் (13 வரிசைகள்), நெகிழி மற்றும் ரசாயனங்கள் (20 வரிசைகள்), மரம் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் (15 வரிசைகள்) மற்றும் இதர பொருட்கள் என இந்தியாவுக்கான 310 ஏற்றுமதிப் பொருட்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்.

பதப்படுத்தப்பட்ட மீன், சிறப்பு சர்க்கரை, பிஸ்கட்டுகள், பண்ணை பசுமை பழங்கள், சாறுகள், மினரல் தண்ணீர், பீர், மது வகைகள், சோப்புகள், பைகள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட தனது 615 பொருட்களுக்கு இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையிலான சந்தை அணுகலை மொரீஷியஸ் பெறும்.

சேவைகள் வர்த்தகத்தைப் பொருத்த வரையில், நிபுணத்துவ சேவைகள், கணினி சார்ந்த சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இதர வர்த்தக சேவைகள், தொலைத்தொடர்பு, கட்டுமானம், விநியோகம், கல்வி, சுற்றுச்சூழல், நிதி, சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான சேவைகள், பொழுதுபோக்கு, யோகா, ஒலி-ஒளி சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றை மொரீஷியஸில் வழங்குவதற்கான அணுகலை இந்திய நிறுவனங்கள் பெறும்.

11 விரிவான சேவைப் பிரிவுகளில் இருந்து 95 துணைப்பிரிவுகளில் சேவைகளை இந்தியா வழங்கவிருக்கிறது. நிபுணத்துவ சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இதர வர்த்தக சேவைகள், தொலைத்தொடர்பு, நிதி, விநியோகம், உயர்கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த சேவைகள், பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

இரு நாடுகளுக்கும் வசதியான தேதி ஒன்றில் உரிய அதிகாரம் பெற்றவர்களால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, அதற்கடுத்த மாதத்தில் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.

*****************(Release ID: 1698715) Visitor Counter : 24