பிரதமர் அலுவலகம்

ஹரிபுராவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி நேதாஜி போஸ் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்: பிரதமர்

Posted On: 22 JAN 2021 5:39PM by PIB Chennai

``பெருமைக்குரிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை ஒட்டி, நாளை இந்தியாவில் பராக்கிரம திவஸ் (#ParakramDivas) அனுசரிக்கப்படவுள்ளது. நாடு முழுக்க பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஹரிபுராவில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கும் அந்த நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள்'' என்று பிரதமர் திரு. மோடி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து இன்னும் சில பதிவுகளையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வில் ஹரிபுராவுக்கு விசேஷமான ஒரு தொடர்பு இருக்கிறது.  1938-ல் ஹரிபுராவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேதாஜி ஏற்றுக் கொண்டார். நாளை ஹரிபுராவில் நடைபெறும் நிகழ்ச்சி, நேதாஜி போஸ் இந்த தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு மரியாதை செய்வதாக இருக்கும்.

”நேதாஜி போஸ் பிறந்த தினத்தை ஒட்டி என் நினைவுகள் 2009 ஜனவரி 23 ஆம் தேதிக்குச் செல்கின்றன. அப்போது நாங்கள் இ-கிராம விஸ்வகிராம் திட்டத்தை ஹரிபுராவில் தொடங்கினோம். அந்தத் திட்டம் குஜராத்தில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் புரட்சிகரமான வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. மாநிலத்தின் தொலை தூரத்தில் உள்ள ஏழைகளுக்கும் தொழில்நுட்பத்தின் பயன்கள் சென்றடைய அத் திட்டம் வழிவகுத்தது.

1938 ஆம் ஆண்டில் நேதாஜி போஸ் அழைத்துச் செல்லப்பட்ட அதே சாலையில் என்னை பெரிய பேரணியாக அழைத்துச் சென்ற ஹரிபுரா மக்களின் அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவருடைய பேரணியில் 51 காளைகள் பூட்டப்பட்ட அலங்கார ரதம் பயன்படுத்தப்பட்டது. ஹரிபுராவில் நேதாஜி தங்கியிருந்த இடத்தையும் நான் பார்த்தேன்.

பலமான, நம்பிக்கை மிகுந்த, தற்சார்பு நிலைக்காக பெருமை கொள்ளும் வகையிலான இந்தியாவை உருவாக்குவதற்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய எண்ணங்களும், சிந்தனைகளும் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும். மக்களை மையமாகக் கொண்ட அவருடைய செயல்பாடுகள், வரக்கூடிய ஆண்டுகளில் இந்த உலகை இன்னும் நல்லதாக ஆக்கிட ஊக்குவிப்பதாக இருக்கட்டும்'' என்றும் தனது ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

------


(Release ID: 1691299) Visitor Counter : 318