பிரதமர் அலுவலகம்

மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் ரெவாரி- மதார் பிரிவை பிரதமர் ஜனவரி 7-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

Posted On: 05 JAN 2021 3:51PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர  ரெவாரி மதார் பிரிவை 2021 ஜனவரி 7-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், அரியானா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின்  ரெவாரி மதார் பிரிவு

மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு ரயில் பாதையில் அரியானா மற்றும் ராஜஸ்தானில் முறையே  ரெவாரி மதார் பிரிவு அமைந்துள்ளது. (தோராயமாக ரெவாரி மாவட்டம் மகேந்திரகரில் இருந்து 79 கி.மீ) , (தோராயமாக ஜெய்ப்பூர், அஜ்மீர், சிகார், நாகாவூர், ஆள்வார் மாவட்டங்களில் இருந்து 227 கி.மீ). இதில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது புதிய சரக்கு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் புதிய தப்லா, புதிய பகேகா, புதிய ஶ்ரீமாதோப்பூர், புதிய பச்சார் மாலிக்பூர், புதிய சகுன், புதிய கிஷன்கர் ஆகிய இடங்களில் கிராசிங்குகள் அமைந்துள்ளன. ரெவாரி, புதிய அட்டலி, புதிய புலேரா ஆகிய நிலையங்கள் சந்திப்புகளாகும்.

இந்தப் பிரிவு திறக்கப்படுவதன் மூலம், ராஜஸ்தான் மற்றும் அரியானாவின் ரெவாரி-மனேசர், நர்னாவுல், புலேரா, கிஷன்கர்க் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குப் பெரும் பயன் கிடைக்கும். கத்துவாசில் உள்ள கன்கார் சரக்குப் பெட்டக முனையத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் காண்ட்லா, பிப்பாவாவ், முந்த்ரா, தாகெஜ் துறைமுகங்களுடனான இணைப்பை இது உறுதி செய்யும்.

இந்தப் பிரிவு தொடங்கப்படுவதன் மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும். முன்னதாக, 2020 டிசம்பர் 29-ம்தேதி கிழக்கு சரக்கு ரயில் பாதையின் புதிய பாவ்பூர்-புதிய குஜ்ரா பிரிவை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இரட்டை அடுக்கு நீள பெட்டக ரயில் இயக்கம்

இரட்டை அடுக்கு பெட்டக ரயிலை இயக்குவதன் மூலம் கூடுதலாக 25 டன் சுமையைக் கொண்டு செல்ல முடியும். இதனை டிஎப்சிசிஐஎல்-லுக்காக ஆர்டிஎஸ்ஓ-வின் ரயில் பெட்டி துறை வடிவமைத்தது. இதற்கான பிஎல்சிஎஸ்-, பிஎல்சிஎஸ்-பி மாதிரி ரயில்களின் வெள்ளோட்டம் நிறைவடைந்தது. இந்த வடிவமைப்பு அதிக அளவிலான  சுமையை, சீரான வகையில்  ஏற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரட்டை அடுக்கு பெட்டக ரயில், தற்போதைய இந்திய ரயில்வே போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு எண்ணிக்கையில் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது.

டிஎப்சிசிஐஎல் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில்களை இயக்கும். தற்போது இந்திய ரயில்வே பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 75 கி.மீ வேகத்திலேயே சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சராசரி சரக்கு ரயில்களின் வேகமும் மணிக்கு 26 கி.மீ என்ற அளவிலிருந்து பிரத்யேக சரக்குப் பாதையில் மணிக்கு 70 கி.மீ ஆக உயர்த்தப்படும்.

                                                              *****(Release ID: 1686279) Visitor Counter : 235