பிரதமர் அலுவலகம்

100-வது விவசாயிகள் ரயிலை பிரதமர் துவக்கி வைத்தார்


வேளாண் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டும் பதப்படுத்துதல் தொழில்களுக்கு முன்னுரிமை: பிரதமர்

வேளாண்துறையில் தனியார் முதலீடு விவசாயிகளுக்கு உதவும்: பிரதமர்

Posted On: 28 DEC 2020 5:49PM by PIB Chennai

நூறாவது விவசாயிகள் ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான இந்த ரயிலை காணொலி மூலம் பிரதமர் துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் திரு.பியூஷ் கோயல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

விவசாயிகள் ரயில் என்பது நாட்டிலுள்ள விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான முக்கியமான நடவடிக்கை என்று நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில் கூட, கடந்த நான்கு மாதங்களில் 100 விவசாயிகள் ரயில்கள் தொடங்கப்பட்டதைக் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வேளாண் தொடர்பான பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தச் சேவை கொண்டு வரும் என்றும், நாட்டின் குளிர்ப்பதன விநியோகச் சங்கிலியின் வலிமையை இது அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சிறிய அளவிலான வேளாண் பொருள்களும் முறையான வகையில், குறைந்த செலவில் பெரிய சந்தைகளை சென்றடையும் வகையில், கிசான் ரயில் வாயிலாக செய்யப்படும் சரக்குப் போக்குவரத்துக்கு குறைந்தபட்ச அளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

விவசாயிகள் ரயில் திட்டம் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்கான அரசின் உறுதியை மட்டும் காட்டவில்லை என்றும், நமது விவசாயிகள் புதிய வாய்ப்புகளுக்கு எத்தனை சீக்கிரமாகத் தயாராகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். விவசாயிகள் தற்போது தங்களது பொருள்களை இதர மாநிலங்களிலும் விற்கலாம் என்றும், விவசாயிகள் ரயிலும், வேளாண் விமானங்களும் இதில் பெரும் பங்காற்றுகின்றன என்றும் அவர் கூறினார். பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதி தான் விவசாயிகள் ரயில் என்று அவர் கூறினார். “சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல் இருந்தது. குளிர்பதனச் சேமிப்பு வசதியும் முன்பே இருந்தது. தற்போது விவசாயிகள் ரயில் மூலம் இந்த பலம் முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது,” என்று பிரதமர் மேலும் கூறினார்.

மேற்கு வங்கத்தில் இருக்கும் பல இலட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய வசதியை விவசாயிகள் ரயில் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு இந்த வசதி கிடைக்கும். வேளாண் நிபுணர்களும், இதர நாடுகளின் அனுபவமும், புதிய தொழில்நுட்பமும் இந்திய விவசாயத்துறையில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

 

விவசாயிகள் தங்கள் பொருள்களைச் சேமித்து வைக்கும் வகையில் அழுகக்கூடிய ரயில் சரக்கு மையங்கள் ரயில் நிலையங்களுக்கு அருகில் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு எந்த அளவு முடியுமோ அந்த அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பொருள்கள் சாறு, ஊறுகாய், சாஸ், சிப்ஸ் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தொழில்முனைவோரை சென்றடைய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

சேமிப்பு சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வேளாண் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டும் பதப்படுத்துதல் தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் கிருஷி சம்பதா திட்டத்தின் கீழ் மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள், குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பு, வேளாண் பதப்படுத்துதல் குழுமம் ஆகியவற்றின் கீழ் இத்தகைய சுமார் 6500 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத் தொகுப்பின் கீழ் குறு உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு ரூ 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தான் அரசின் முயற்சிகளை வெற்றியடைய செய்வதாக திரு மோடி கூறினார். வேளாண் தொழில் மற்றும் வேளாண் உள்கட்டமைப்பில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற கூட்டுறவுக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சமீபத்திய சீர்திருத்தங்கள் வேளாண் தொழிலின் விரிவாக்கத்திற்கு வழி வகுத்து, இக்குழுக்களை மிகப்பெரிய பயனாளிகளாக ஆக்கும். இந்தக் குழுக்களுக்கு உதவுவதற்கான அரசின் முயற்சிக்கு வேளாண் துறையில் செய்யப்படும் தனியார் முதலீடு ஆதரவளிக்கும். “இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்கான பாதையில் முழு அர்ப்பணிப்புடன்  நாங்கள் முன்னேறி செல்வோம்,” என்று பிரதமர் கூறினார்.

-----

 



(Release ID: 1684224) Visitor Counter : 270