பிரதமர் அலுவலகம்

அமைதி, வளமை, மக்கள் நலனுக்கான இந்தியா - வியட்நாம் கூட்டு தொலைநோக்குத் திட்டம்

Posted On: 21 DEC 2020 7:51PM by PIB Chennai

இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியும், வியட்நாம் பிரதமர் மாண்புமிகு நிகுயென் க்சுவான் பூக் -ம் 2020 டிசம்பர் 21 ஆம் தேதி காணொலி மூலமான  உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். பிராந்திய மற்றும் உலக அளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்தியா - வியட்நாம் இடையில் விரிவான ராணுவ பங்களிப்பை மேம்படுத்துவதற்கு அமைதி, வளமை, மக்கள் நலனுக்கான கூட்டு தொலைநோக்குத் திட்டத்தைப் பின்பற்றுவது குறித்து இதில் இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

அமைதி

1. விரிவான ராணுவ பங்கேற்பை மேலும் பலப்படுத்துவதில் பரஸ்பர விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்திய இரு தலைவர்களும், ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பிணைப்புகள், பகிர்ந்து கொண்டுள்ள மாண்புகள், நலன்கள், பரஸ்பர ராணுவ நம்பிக்கை மற்றும் சர்வதேச சட்டம் குறித்த புரிதல் மற்றும் ஒப்புக்கொண்டுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் உருவான அமைப்பு சார்ந்த பரிமாற்றங்களை உயர்நிலையில் அவ்வப்போது செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.  ஈடுபாடு கொள்ளும் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒததுழைப்புகளுக்கு புதிய விஷயங்களை அளித்து, உத்வேகம் அளிப்பதாக இது இருக்கும். பரஸ்பர தேச வளர்ச்சிக்கு உதவி செய்வதாகவும் இருக்கும். அமைதியான, நிலையான, பாதுகாப்பான, சுதந்திரமான, திறந்த நிலையிலான, பங்கேற்புடன் கூடிய, விதிகளின்படியான பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்ற பயணத்திற்கும் உதவியாக இருக்கும்.

2. இந்தப் பிராந்தியத்திலும், பிற பகுதிகளிலும் நிலவும் பூகோள ரீதியிலான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்களின் ஒத்துழைப்பு முக்கியத்துவமானது என இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை நீடிப்பதற்கு இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் இருவரும் குறிப்பிட்டனர். அந்த வகையில், ராணுவ அளவில் பரிமாற்றங்கள், பயிற்சி மற்றும் திறன் வளர்ப்புத் திட்டங்களை முப்படைப் பிரிவுகளிலும், கடலோரக் காவல் படையிலும் மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. வியட்நாமுக்கு அளிக்கப்படும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை கடன் திட்டங்களில் தங்களின் பாதுகாப்புத் துறை தொழில் உற்பத்தியில் கூட்டு முயற்சியை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பரஸ்பர தளவாடங்கள் உதவி, அவ்வப்போது கப்பல்கள் வருகை, கூட்டுப் பயிற்சிகள் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், தகவல் பகிர்தல், ஐ.நா. அமைதிகாப்பு பணியில் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்புத் துறை பரிமாற்றங்களை மேலும் நிறுவனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற விஷயங்கள் தொடர்பாக முறைப்படியான பேச்சுவார்த்தை நடைமுறைகள் பின்பற்றப்படும். கணினிசார் குற்ற அச்சுறுத்தல்கள், கடல்வழி அச்சுறுத்தல், பயங்கரவாதம், இயற்கைப் பேரழிவுகள், சுகாதாரப் பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, நாடு கடந்த குற்றங்கள் ஆகியவை குறித்தும் இதேபோல பேச்சு நடத்தப்படும். தேவையான சூழலில் சட்டபூர்வ மற்றும் நீதித் துறை ஒத்துழைப்புடனும் பேச்சு நடத்தப்படும்.

3. வளமை மற்றும் பாதுகாப்புக்கு இடையே உள்ள தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டிய தலைவர்கள், அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தெற்கு சீனா கடலில் சுதந்திரமான கடல் பயணம் மற்றும் வான்வெளியில் விமானம் பறப்பதை பராமரிக்க வேண்டியன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினர்.  சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு, குறிப்பாக 1982 ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட கூட்டமைப்பு (UNCLOS) விதிகளின்படி, படை பலத்தை பயன்படுத்தும் அச்சுறுத்தல் இல்லாத வகையில் அமைதி வழியில் தீர்வு காண முயற்சிக்கும் அதே நேரத்தில் மேற்படி விஷயங்களை பராமரிக்க உறுதி அளிக்கப்பட்டது. தொடர்புடைய அரசுகள், அனைத்து வகையான நடவடிக்கைகளின் போதும், ராணுவத்தை நிறுத்தாமல் இருப்பது, சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது, நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் அல்லது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் வகையில் பிரச்சினையை தீவிரப்படுத்தாமல் தவிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர். கடல் பகுதி உரிமை கோருதல், இறையாண்மை உரிமைகள், எல்லைகள் மற்றும் கடல் பகுதி மண்டலங்களின் சட்டபூர்வ விஷயங்களை UNCLOS வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டு அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை இருவரும் வலியுறுத்தி குறிப்பிட்டனர். தென் சீனா கடலில் தொடர்புடைய தரப்பினரின் செயல்பாடு குறித்த அறிவிக்கையை (DOC) முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு ஏற்புடைய மற்றும் செயலூக்கம் கொண்ட தென் சீன கடல் பகுதி நடத்தை வழிமுறைகளை விரைவில் உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். குறிப்பாக, இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத தரப்பார் உள்பட எந்த நாட்டின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களுக்கும் ஊறு விளைவிக்காத வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

4.இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் வளமைக்கு ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட அவர்கள், முக்கிய துறைகளில் ஆசியான் அமைப்பிற்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை வரவேற்றனர். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பங்களிப்பை மேலும் அதிகரித்தல், ஆசியானை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு, இந்திய - பசிபிக் குறித்த ஆசியான் பார்வை (AOIP) மற்றும் இந்தியாவின் இந்திய - பசிபிக் பெருங்கடல் பகுதிகள் முன்முயற்சி (IPOI) ஆகியவற்றின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின்படி இவை அமைய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பிராந்தியத்தில் அனைவரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நீலப் பொருளாதாரம், கடல்பகுதி பாதுகாப்பு, கடல் பகுதி சுற்றுச்சூழல், கடல் வளங்களை நீண்ட காலம் பயன்படுத்துதல், கடல் வழி இணைப்பு வசதி ஆகியவற்றை உருவாக்குவதில் புதிய மற்றும் நடைமுறை சாத்தியமான கூட்டுமுயற்சிகளைக் கண்டறியவும் முடிவு செய்யப்பட்டது.

5. பிராந்திய மற்றும் உலக அளவிலான விஷயங்களில் பிராந்திய விஷயங்களில் பொதுவான  அணுகுமுறைகள், சர்வதேச சட்டம் மற்றும் விதிகளின் படியான ஒழுங்கில் பரஸ்பர மரியாதை, உலக அளவிலான செயல்பாட்டில் பங்கேற்பு மற்றும் சமத்துவ நிலை இருப்பதில் உள்ள நம்பிக்கை ஆகியவற்றைப் போல, ஐ.நா., ஆசியான் தலைமையிலான நடைமுறைகளிலும், மெகாங் துணை பிராந்திய ஒத்துழைப்பிலும் பன்முக மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துவது என்று இரு தலைவர்களும் முடிவு செய்தனர். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில், கூடுதல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி, தற்காலத்துக்கு ஏற்றதாக, தற்கால சவால்களை கையாளும் திறன் கொண்டதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைத் தீவிரமான முன்னெடுக்கவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கோவிட் - 19 பெருந்தொற்று சூழலைக் கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, சுகாதார அலுவலர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிப்பதில் உதவுதல், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நிறுவன அளவிலான ஒத்துழைப்புகளை உருவாக்குதல், திறந்தநிலை வழங்கல் தொடர்புகளை ஊக்குவித்தல், அவசியத்தின் அடிப்படையில் மக்கள் எல்லைகளைத் தாண்டி பயணிக்க வசதி ஏற்படுத்துதல், உலக சுகாதார நிறுவனம் போன்ற பன்முக அமைப்புகளில் நெருக்கமான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பராமரிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

6. பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தால் உலக அமைதிக்கும், மனித குலத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றிப் பேசிய இரு தலைவர்களும், எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் ஒழிப்பது என்றும், எல்லை கடந்த பயங்கரவாதம், தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்கச் செய்யும் தொடர்புகளை அழிப்பது, தீவிரவாதிகளுக்கு புகலிடம் கிடைக்காமல் தடுப்பது ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட முடிவு செய்யப்பட்டது. இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவிலான முயற்சிகள் மூலம் பெரிய அளவிலான ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான ஒப்பந்தம் (CCIT) குறித்து விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கு கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

வளமை

7. கோவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் கிடைத்துள்ள வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்ட அவர்கள், நம்பகமான, செயல் திறன்மிக்க, நீடித்து செயல்படக் கூடிய வழங்கல் தொடர்புகளை உருவாக்க இரு தரப்பும் பாடுபடுவது என்றும், மக்களை மையமாகக் கொண்டு இதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூடிய விரைவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தக விற்றுமுதல் நிலையை எட்டுவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். உறுதியான செயல் திட்டத்தின் அடிப்படையிலும், இரு நாடுகளிலும் புதிய வழங்கல் தொடர்புகள் உருவாக்குவதன் மூலமும் இருதரப்பு வர்த்தகத்திற்கு உயர் அளவிலான இலக்கு நிர்ணயிக்கப்படும்.

8. இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை மிகப் பெரியதாக இருப்பது, தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வை ஆகியவற்றையும், வியட்நாமின் வளரும் பொருளாதார துடிப்பு மற்றும் திறன்கள் குறித்தும் சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது. பரஸ்பர பொருளாதாரத்தில் இரு நாடுகளும் நீண்டகால முதலீடுகளை அதிகரிப்பது, கூட்டு முயற்சிகளை அதிகரிப்பது, புதிய மதிப்பு உருவாக்கல் சங்கிலித் தொடர்புகளில் பங்கேற்பது, பொருள் அளவில் மற்றும் டிஜிட்டல் தொடர்பு ஏற்படுத்துதல், மின்னணு வணிகம், வணிக முறை பயணங்களுக்கு வசதி செய்தல், பிராந்திய வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்துதல், பரஸ்பரம் பெரிய சந்தை அணுகல் வசதி செய்து தருதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் தொடர்ந்து கவனம் செலுத்தும். 2024 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார செயல்பாடு உள்ள நாடாக வளர்வது என்ற இந்தியாவின் இலக்கு, 2045-க்குள் உயர் வருவாய் பொருளாதார நாடாக வளர்வது என்ற வியட்நாமின் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள வாய்ப்புகள் குறித்து முழுமையாக ஆராயப்படும். இரு நாடுகளிலும் உள்ள எம்.எஸ்.எம்.இ.கள், வேளாண்மைத் துறை வசதிகளும் இதில் அடங்கும்.

9. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கொண்ட இரண்டு வளரும் பொருளாதார நாடுகளும் முன்னேற்றம் மற்றும் வளமைக்கான முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மேம்பாட்டு பங்களிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமை சிந்தனை படைப்புகள், நல்ல நிர்வாகம் அளிப்பதில் டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்துதல், மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்தல், நீடித்த மற்றும் பங்கேற்புடன் கூடிய முயற்சிகள் மூலமாக நடைபெறுவதாக இருக்கும். அந்த வகையில், இந்தியாவின் ``டிஜிட்டல் இந்தியா'' தொலைநோக்குத் திட்டம் மற்றும் வியட்நாமின் ``டிஜிட்டல் சமூகம்'' தொலைநோக்குத் திட்டத்தில் பொதுவான அம்சங்களை சிறப்பாக ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அணுசக்தியை அமைதி வழிகளில் பயன்படுத்துதல், விண்வெளி தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிலைமாற்றம் உருவாக்கும் தொழில்நுட்பங்கள், கடல்வள அறிவியல்கள், நீடித்த செயல்திறன் கொண்ட வேளாண்மை வழிமுறைகள், நீர்வள மேலாண்மை, முழுமையான சுகாதார வசதி, தடுப்பூசிகள் மற்றும் பார்மசூட்டிகல்ஸ், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் ஒத்துழைப்பை தீவிரமாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

10. நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான செயல்பாட்டில் உள்ள உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்ட இரு தலைவர்களும், வளரும் நாடுகள் என்ற வகையில் எரிசக்தி தேவைக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களை உருவாக்குதல், எரிசக்தி சிக்கனம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் எதிர்காலத்தில் வியட்நாம் சேரும்போது, சூரியசக்தி மின்சார உற்பத்தி வளர்ச்சியில் ஒத்துழைப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும். அதே சமயத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில், நீண்டகாலமாக இருந்து வரும் பங்களிப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ளும். மூன்றாம் உலக நாடுகளில் வளங்களைக் கண்டறிதல், இதுதொடர்பான திட்டங்களில் கூட்டாக செயல்படுதல் ஆகியவை இதற்கான நடைமுறைகளில் அடங்கும். பருவநில மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்வதில் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்ளும். அந்த வகையில், பேரழிவைத் தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் கூட்டமைப்பில் வியட்நாம் விரைவில் சேரும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

11. உள்ளூர் சமுதாயங்களுக்கு உறுதியான, பன்முக பயன்கள் கிடைக்கச் செய்வது மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் உள்ள பங்களிப்புகளின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிடப்பட்டது. வியட்நாமில் இந்தியாவின் வளர்ச்சி உதவி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் தீவிரப்படுத்தப்படும். மெகாங்க் - கங்கா விரைவு தாக்கம் திட்டங்கள், ஐ.டி.இ.சி., இ-ஐ.டி.இ.சி. திட்டங்கள் பல துறைகளுக்கு விரிவுபடுத்துவதும் இதில் இடம் பெறும்.

மக்கள்

12. இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்றுபூர்வ பிணைப்புகள் உள்ளதை வலியுறுத்திய தலைவர்கள், இரு நாடுகளின் கலாச்சார, நாகரிக பாரம்பர்யங்களின் புரிதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நினைவுகூறுதல் செயல்பாடுகளில் ஈடுபட முடிவு செய்தனர். புத்தமத  மற்றும் சாம் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் தொன்மையான சுவடிகளின் ஆய்வுகளும் இதில் அடங்கும். இரு நாடுகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாப்பது பங்கேற்பின் முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் 2 மற்றும் 3 ஆம் நிலை நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் முக்கிய இடம் பெறும். பல ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ள நிலையில், ஆயுர்வேதம் மற்றும் வியட்நாம் பாரம்பர்ய மருத்துவம் போன்ற பாரம்பர்ய மருத்துவ முறைகளில் ஆரோக்கியத்துக்கு நிறைய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக யோகா உருவாகியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை உருவாக்குவதாகவும் யோகா உள்ளது. பாரம்பர்ய மருத்துவ முறைகளை பலப்படுத்தி, ஆதார ஆவணங்களின் அடிப்படையில் மக்கள் நலனுக்கான சிகிச்சை முறைகளில் அதை சேர்ப்பதில் ஒத்துழைக்க இரு நாடுகளும் உறுதி தெரிவித்தன. இந்தியா - வியட்நாம் கலாச்சார மற்றும் நாகரிக உறவுகள் குறித்த தகவல் களஞ்சியத்தை வெளியிடுவதில் இரு நாடுகளும் தீவிரமாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையில் தூதரக உறவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி 2022-ல் இது வெளியிடப்படும்.

13. இரு நாட்டு மக்களின் பரஸ்பர நட்புணர்வுகளை பலப்படுத்துதல் மற்றும் ஆதரவு அளிப்பது பற்றிக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், நேரடி விமானப் போக்குவரத்து வசதி மூலம் மக்களுக்கு இடையில் நெருக்கமான பரிமாற்றங்களை ஊக்குவித்தல், எளிமையான விசா நடைமுறைகளுடன் பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட ஒப்புக்கொண்டனர். நாடாளுமன்ற பரிமாற்றங்கள் போன்றவை மூலம் அமைப்பு ரீதியிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய மாநிலங்கள் மற்றும் வியட்நாம் மாகாணங்களுக்கு இடையிலான உறவுகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், நட்புணர்வு குழுக்கள், இளைஞர் அமைப்புகளுக்கு இடையில் பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்படும். கல்வி நிலையங்களுக்கு இடையில் கூட்டு முயற்சிகள், சிந்தனையாளர்கள் ஈடுபாடு, கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள், ஊடக, திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுத் துறை பரிமாற்றங்களும் அதிகரிக்கப்படும். இந்தியா - வியட்நாம் உறவுகள் தொடர்பான விஷயங்களையும், தங்கள் பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றுத் தொடர்புகள் குறித்த விஷயங்களையும் ஊக்குவிக்க இரு தரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

14. இந்திய - வியட்நாம் விரிவான பாதுகாப்புத் துறை பங்களிப்பில் புதிய காலக்கட்டத்தில், மேற்கூறிய தொலைநோக்குத் திட்டங்கள் திருப்புமுனையாக இருக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, உறுதியான செயல் திட்டங்களை இரு தரப்பினரும், 2021-2023ல் இருந்து தொடங்கி அவ்வப்போது உருவாக்குவார்கள்.

பயன்கள்:

(a) இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கையில் கையெழுத்திட்ட இரு தலைவர்களும், 2021-23 காலக்கட்டத்திற்கான செயல்திட்டம் கையெழுத்திடப் படுவதை வரவேற்றனர்.

(b) வியட்நாம் எல்லை கடலோர கமாண்ட் பிரிவுக்கு, இந்தியா அளிக்கும் 100 மில்லியன் டாலர் கடன் திட்டத்தில் அதிவிரைவு கடல் பாதுகாப்புப் படகு (HSGB) தயாரிப்புத் திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுவது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பணி நிறைவுபெற்ற படகுகளை வியட்நாமிடம் ஒப்படைத்தல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படகுகளின் சேவையை தொடங்குதல், வியட்நாமில் தயாரிக்கப்பட்ட இந்த ரக படகுகளுக்கு அடித்தளம் அமைத்தல் ஆகியவை குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

(c) இந்தியாவின் `கடன் உதவி' திட்டத்தில் வியட்நாமில் நின்ஹ் துவான் மாகாணத்தில் அந்தப் பகுதி மக்களுக்காக 1.5 மில்லியன் டாலர் அளவிலான ஏழு வளர்ச்சித் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர்.

(d) கீழே பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள் / அமலாக்க ஏற்பாடுகள் மற்றும் அறிவிப்புகள் கையெழுத்திடப்பட்டது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள்:

1. பாதுகாப்புத் தொழில் துறை ஒத்துழைப்புக்கு அமலாக்க ஏற்பாடு

2. நிஹா ட்ராங்கில் தேசிய தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவிற்கு இந்தியாவின் சார்பில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தம்

3. ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்பு பணிகளில் ஒத்துழைப்புக்கு CUNPKO-VNDPKO  இடையில் அமலாக்க ஏற்பாடு

4. இந்தியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் மற்றும் வியட்நாம் கதிரியக்க ஏஜென்சி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

5. சி.எஸ்.ஐ.ஆர். - இந்திய பெட்ரோலிய இன்ஸ்டிடியூட் மற்றும் வியட்நாம் பெட்ரோலிய இன்ஸ்டிடியூட் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. இந்தியாவின் தேசிய சூரியசக்தி சம்மேளனத்துக்கும் வியட்நாமின் தூய்மையான எரிசக்தி சங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7. டாடா மெமோரியல் மையம் மற்றும் வியட்நாம் தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அறிவிப்புகள்:

1. விரைவான தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களை 2021-22 நிதியாண்டு முதல் இப்போதுள்ள ஆண்டுதோறும் 5 திட்டங்கள் என்பதில் இருந்து 10 திட்டங்களாக அதிகரித்தல்.

2. வியட்நாமில் கலாச்சார பாதுகாப்பில் புதிய வளர்ச்சி பங்களிப்புத் திட்டம் (F-block of Temple at My Son; Dong Duong Buddhist Monastery in Quang Nam and Nhan Cham Tower in Phu Yen).

3. இந்தியா - வியட்நாம் நாகரிக மற்றும் கலாச்சார உறவுகள் குறித்த தகவல் களஞ்சியம் தயாரிக்க இருதரப்பு திட்டம் தொடக்கம்.

*******************



(Release ID: 1682665) Visitor Counter : 679