அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 21 DEC 2020 6:12PM by PIB Chennai

நாளை தொடங்கவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கவிருக்கிறார். இந்தத் திருவிழா குறித்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட் பெருந்தொற்று காலத்தில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மெய்நிகர் சூழலின் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.

இதன் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியும், வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்வார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் அறிவியல் துறை சார்ந்த வளர்ச்சி அதிகளவில் ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பெருவாரியான மக்களை அறிவியல் தொடர்பான விஷயங்களில் பங்கேற்க தூண்டும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

புதிய வடிவில் பரவும் கொவிட்-19 தொற்று குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “ வளர்ந்து வரும் புதிய சவால்களை தங்களால் எதிர்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளதோடு, மீண்டும்  நிரூபிப்பார்கள்என்று பதிலளித்தார்.‌மேலும்,  “பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சரியான நடத்தைமுறைகளை பின்பற்றுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வதன் வாயிலாக சுகாதார விஷயங்களும் மக்கள் இயக்கமாக தற்போது மாறியுள்ளதுஎன்று அவர் கூறினார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 காணொலி வாயிலாக நடைபெறுவதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகள், இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பங்கேற்கும் வகையில் புதிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். பெருந்தொற்றையும் பொருட்படுத்தாது, இந்தத் திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதன்மூலம் புதிய சாதனையை இந்த நிகழ்ச்சி படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2020-ஆம் ஆண்டை அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் ஆண்டாக' அழைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தின் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, ‘தற்சார்பு இந்தியா மற்றும் உலக நன்மைக்காக அறிவியல்' என்ற கருப்பொருளோடு  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.scienceindiafest.org/ என்ற இணையதளத்தையும், https://pib.gov.in/iisf/ என்ற பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் இணையதள பக்கத்தையும் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682422

**********************



(Release ID: 1682455) Visitor Counter : 203