பிரதமர் அலுவலகம்

புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 10 DEC 2020 4:57PM by PIB Chennai

மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு பிரகலாத் ஜோஷி, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளே, காணொலி மூலம் கலந்து கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்களே, இங்கு பங்கேற்றுள்ள பல நாடுகளின் தூதர்களே, எனது நாட்டு மக்களே, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இன்று இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல்கல். இந்திய சிந்தனையுடன் இந்தியர்களால் கட்டப்படும் இந்திய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமானம் துவக்கம் நமது ஜனநாயக பாரம்பரியத்தின் மிக முக்கிய மைல்கற்களுள் ஒன்றாகும். இந்திய மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்கு உறுதி ஏற்போம்.

நண்பர்களே, இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில்,  நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதைவிட, மென்மேலும் அழகு சேர்க்கக் கூடிய அல்லது மேலும் பரிசுத்தமான வேறு செயல் ஏதும் இருக்க முடியாது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

நண்பர்களே, புதிய நாடாளுமன்ற கட்டுமானம் பழமையும், புதுமையும் கொண்ட ஒரு எடுத்துக்காட்டாக திகழும். காலத்துக்கும், அவசியத்துக்கும் ஏற்ற வகையில், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி இது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, முதன்முதலில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது,  தலைவணங்கி இந்த ஜனநாயகக் கோவிலுக்கு மரியாதை செலுத்தி, அதற்குள்ளே நுழைந்தேன். நமது இப்போதைய  நாடாளுமன்ற கட்டிடம், விடுதலைப் போராட்ட காலத்திலும், சுதந்திரத்துக்குப் பின்பும் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் அரசு இங்குதான் அமைந்தது. முதல் நாடாளுமன்றக் கூட்டம் இங்குதான் நடைபெற்றது. இந்தக் கட்டிடத்தில் நமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு, ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டது. பாபா சாகிப் அம்பேத்கரும், மற்ற மூத்த அறிஞர்களும் மைய மண்டபத்தில் அமர்ந்து விரிவாக விவாதித்து அரசியல் சாசனத்தை நமக்கு வழங்கினர். தற்போதைய நாடாளுமன்றம் சுதந்திர இந்தியாவின் பல்வேறு ஏற்ற, இறக்கங்களின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தக் கட்டிடத்தில் இயற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமும், இந்தச் சட்டங்களை இயற்றும் போது நடைபெற்ற விவாதங்களும் நமது ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுபவையாகும்.

நாடாளுமன்ற வரலாற்றை அறிந்து கொள்வதுடன், எதார்த்த நிலையை ஏற்றுக் கொள்வதும் அவசியமாகும். தற்போதைய கட்டிடம் 100 ஆண்டு பழமையானதாகும். கடந்த காலங்களில் தேவைக்கு ஏற்ப இது புதுப்பிக்கப்பட்டு வந்தது. புதிய வசதிகளை ஏற்படுத்தும் போது, சுவர்கள் பல முறை சேதம் அடைந்துள்ளது. மக்களவையில் இருக்கைகளை அதிகரிப்பதற்காக சுவர்கள் இடிக்கப்பட்டன. அனைத்திற்கும் மேலாக இந்தக் கட்டிடத்துக்கு இப்போது ஒரு ஓய்வு தேவை. புதிய நாடாளுமன்றத்தின்  தேவை பல ஆண்டுகளாக உணரப்பட்டதை மக்களவை தலைவரும் எடுத்துக் கூறினார். எனவே, 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்காக புதிய நாடாளுமன்றத்தை உருவாக்குவது நமது பொறுப்பாகும். இந்த நோக்கத்தில் இன்று கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய வளாகத்தின் ஆயுளை நீட்டித்து புத்துயிர் ஊட்டப்படும்.

உறுப்பினர்களின் செயல் திறனை அதிகரிப்பது மற்றும் அவர்களது பணிக் கலாச்சாரத்தை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.  தற்போது நிலவும் இடப்பற்றாக்குறைக்கு முடிவு கட்டப்படும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களைச் சந்தித்து பேசுவதற்கு உரிய வசதிகள் புதிய கட்டிடத்தில் இருக்கும்.   

தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்தது போல, புதிய கட்டிடம், ‘சுயசார்பு இந்தியா‘-விற்கு அடையாளமாகத் திகழும்.   பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்,  நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுபோல, 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக புதிய கட்டிடம் அமையும். சுதந்திர இந்தியாவில் கட்டப்படும் புதிய கட்டிடம் வரும் தலைமுறையினரைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்.

நண்பர்களே, நமது ஜனநாயகத்தின் ஆற்றல் என்பது நாடாளுமன்றத்தின் சக்தியாகும். எழுத்தறிவின்மை, வறுமை, சமூகப் பிளவு, அனுபவமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி இந்தியாவில் ஜனநாயகம் தழைக்காது என கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்புகளை நாம் இன்று பொய்யாக்கியுள்ளோம். 21-ம் நூற்றாண்டில் இந்தியா மாபெரும் ஜனநாயக சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை ஒவ்வொரு தலைமுறையும் தெரிந்து கொள்வது அவசியமாகும். 13-ம் நூற்றாண்டில் வகுக்கப்பட்ட மகா சாசனம் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஜனநாயகத்தின் அடிப்படை என சில அறிஞர்கள் கூறுவதுண்டு. இதற்கு முந்தி 12-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் ஜனநாயகம் இருந்ததாக பசவேஸ்வராவின் அனுபவ மண்டபா கூறுகிறது.

நண்பர்களே, தமிழகத்தில் சென்னைக்கு 80,85 கி.மீ தூரத்தில் உள்ள உத்திரமேரூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இந்தக் காலத்திற்கு முன்பே ஜனநாயகம் இருந்ததற்கான மிக முக்கியமான வரலாற்று ஆதாரம் காணப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசில் பஞ்சாயத்து முறை இருந்ததாக கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ் மொழி குறிப்புகள் கூறுகின்றன. இன்று வார்டு எனப்படும் குடும்பு அப்போது வழக்கத்தில் இருந்துள்ளது. பல்வேறு குடும்பு பிரதிநிதிகள் கொண்ட பொது சபை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜனநாயக நடைமுறையில், பொது சேவகரை தேர்தலில் நிற்க தகுதி நீக்கம் செய்யும் முறையும் தமிழ் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது சேவகர் தனது சொத்து கணக்கை காட்டத் தவறினால், அவரது வாரிசுகள், உறவினர்களும் தேர்தலில் நிற்க முடியாது என்ற நடைமுறை இருந்துள்ளது. இதை வைத்து அன்றைய ஜனநாயகத்தின் மாண்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜனநாயகம் என்றால், அனைத்து இடங்களிலும், தேர்தல் நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிர்வாகத்தைத் தான் குறிக்கிறது.  ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது, வாழ்வியல் நற்பண்புகள், வாழ்க்கைக்கான வழி மற்றும் தேசத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது.  இந்திய ஜனநாயகம், பல நூற்றாண்டு கால அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.   இந்தியாவில், ஜனநாயகம் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சமாக மட்டுமின்றி, ஒழுங்கு நடைமுறையாகவும், வாழ்க்கை மந்திரமாகவும் பின்பற்றப்படுகிறது.   இந்தியாவின் ஜனநாயக வலிமை என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.   இந்திய ஜனநாயகம், தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருவதுடன்,  ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

 

நண்பர்களே, இந்திய ஜனநாயகம், எப்போதுமே, ஆளுகையுடன், கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைக்கும் வழிமுறையாக இருந்து வருகிறது.  மாறுபட்ட கருத்துக்கள்,  மாறுபட்ட சிந்தனைகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அதிகாரமளிப்பதாக அமையும்.   நடைமுறைகளிலிருந்து முழுமையாக விடுபடாதவரை, மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்திய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்கிறது.  கொள்கைகளும், அரசியலும் மாறுபட்டாலும்,  நாம் அனைவரும் மக்களுக்கு சேவையாற்றத் தான் வந்திருக்கிறோம் என்ற குறிக்கோளில், எவ்விதக் கருத்து வேறுபாட்டிற்கும் வாய்ப்பளிக்கக் கூடாது.   நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ விவாதங்கள் நடைபெற்றாலும், அதில், நாட்டுக்கு தொண்டாற்றும் உறுதிப்பாடும், நாட்டு  நலன் சார்ந்த அர்ப்பணிப்பும், தொடர்ந்து பிரதிபலிக்கும்.

 

நண்பர்களே, நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்படுவதற்கு ஜனநாயகம் அடிப்படை என்பதோடு,  சந்தர்ப்பவாதங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.  நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ஒவ்வொரு உறுப்பினரும்,  பொதுமக்களுக்கும், அரசியல் சாசனத்திற்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஜனநாயகக் கோவிலை புனிதப்படுத்த இதைவிட வேறு எந்த சடங்கும் இல்லை.   மக்களின் பிரதிநிதிகளாக இந்த ஆலயத்திற்குள் உறுப்பினர்கள் நுழைவதே, அதனை புனிதப்படுத்தும்.   அவர்களது அர்ப்பணிப்பு, அவர்களது சேவை, செயல்பாடு, சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்கள், இந்த ஆலயத்தின் உயிர்மூச்சாகத் திகழும்.  இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அவர்களது முயற்சிகள், இந்த ஆலயத்திற்கு உயிரளிக்கும் சக்தியாக மாறும்.   மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், தத்தமது அறிவாற்றல், திறமை, கல்வி மற்றும் அனுபவத்தை முழுமையாக வழங்கினாலே, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புனிதமடையும். 

நண்பர்களே, நாட்டு மக்கள் அனைவரும், இந்தியாவை முதன்மையான நாடாகத் திகழச் செய்வதற்கு உறுதியேற்க வேண்டும். அத்துடன்,  இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி மட்டுமே பிார்த்தனை செய்வதோடு, ஒவ்வொரு முடிவும் நாட்டின் வலிமையை அதிகரிப்பதுடன், நாட்டின் நலனே தலையாயது என்ற உணர்வோடு இருக்க வேண்டும்.   நாட்டு நலனைவிட, தங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று, நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.   சுய நலனைவிட, நாட்டு நலன் பற்றிய சிந்தனையே மேலானது என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.  நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைவிட, வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது.   கண்ணியம் மற்றும் நாட்டின் அரசியல் சாசன அம்சங்களை நிறைவேற்றுவது தான், வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியமாக இருக்க வேண்டும்.

நண்பர்களே, 1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர், அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்தார். 2047-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடும்போது, மேற்கொள்வதற்கான உறுதி மொழியை இன்று நாம் ஏற்க வேண்டும். 2047-ம் ஆண்டை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து மக்களும் முன்னேற பீடு நடை போட வேண்டும் என கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும் நன்றிகள்

-------(Release ID: 1680653) Visitor Counter : 348