பிரதமர் அலுவலகம்

வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்துக்கு பிரதமர் டிசம்பர் 15-ஆம் தேதி பயணம்

Posted On: 13 DEC 2020 6:19PM by PIB Chennai

வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட, குஜராத்தின் கட்ச் மாவட்டம் தோர்டோ பகுதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 15-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பண்ணை ஆகிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் கலந்து கொள்கிறார். ஒயிட் ராண் பகுதிக்குச் செல்லும் பிரதமர், அதன் பின் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்கிறார். 

குஜராத்தின் பரந்த கடற்கரையை பயன்படுத்துவதற்காக, கட்ச் மாண்ட்வி பகுதியில்கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை குஜராத் மேற்கொள்கிறது. நர்மதா மின் தொகுப்பு, சவுனி நெட்வொர்க் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை  பூர்த்தி செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும்  இந்தத் திட்டம், குஜராத்தின் நீர் பாதுகாப்பை வலுப்படுத்தும்.  நாட்டின் நீடித்த மற்றும் மலிவான நீர் ஆதாரத்துக்கு, இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்.  இதன் மூலம் முந்த்ரா, லக்பத், அப்தசா மற்றும் நாகத்ரானா தாலுக்காக்களைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். கூடுதல் நீரை பாசாவ், ராபர் மற்றும் காந்திதாம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பவும் உதவும்.  இது, குஜராத்தில் வரவிருக்கும் 5  கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களில் ஒன்று.  தாஹேஜ் (நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர்), துவாரகா (நாள் ஒன்றுக்கு 70 மில்லியன் லிட்டர்), கோகா பாவ்நகர் ( நாள் ஒன்றுக்கு 70 மில்லியன் லிட்டர்), கிர் சோம்நாத் ( நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர்) ஆகியவை இதர திட்டங்களாகும்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் விகாகோட் கிராமத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, நாட்டின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவாக இருக்கும்.  இது 30 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். 72,600 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில், காற்று மின்சக்தி மற்றும் சூரிய மின் சக்தியை சேமிக்கும் பிரத்யேக மண்டலம், அதேபோல் காற்று எரிசக்தி நடவடிக்கைகளுக்கான தனிப்பட்ட மண்டலமும் அமைக்கப்படுகிறது.

கட்ச் மாவட்டத்தின்  அன்ஜர் பகுதியில் உள்ள சர்கத் பால்  கூட்டுறவு சங்கத்தில், தானியங்கி பால் பண்ணைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த பால் பண்ணை ரூ.121 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதுநாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறன் வாய்ந்தது.

**********************



(Release ID: 1680428) Visitor Counter : 150