பிரதமர் அலுவலகம்

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் துவக்க உரையாற்றினார்


ஓர் வலிமையான, உறுதியான அரசு பங்குதாரர்கள் அவர்களது ஆற்றலை உணர்ந்துகொள்ள உதவும்: பிரதமர்

நம் தொழில்துறைக்கு வேண்டியது பாலங்கள், சுவர்கள் அல்ல: பிரதமர்

நிதி, நியாத் போன்ற திட்டங்களால் விவசாயிகளின் நலனில் முழு ஈடுபாடு கொண்டு உள்ளது: பிரதமர்

கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் தொழில்துறைத் தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டுகோள்

Posted On: 12 DEC 2020 1:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு துவக்க உரை வழங்கினார். உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், உலக அளவில் இந்தியாவின் வலுவான தூதர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் வகையில் திறன் படைத்துள்ள இந்திய தனியார் துறையை பிரதமர் பாராட்டினார். தற்சார்பு இந்தியாவை அடைய ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண்டிருப்பது, தனியார் துறையின் மேல் நாடு கொண்டுள்ள நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

வாழ்க்கையிலும், ஆளுகையிலும் ஓர் தன்னம்பிக்கையான நபர் பிறருக்கு இடம் தர தயங்க மாட்டார் என்று பிரதமர் குறிப்பிட்டார். மிகப்பெரிய ஆணையின் ஆதரவுடன் ஓர் வலிமையான அரசு இந்த தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாட்டை வெளிக் கொண்டுவருகிறது. ஓர் உறுதியான அரசு, பிறரின் தடைகளை நீக்க அரும்பாடு படுவதுடன், தேசம் மற்றும் சமுதாயத்திற்காக எப்போதும் தனது பங்களிப்பை அளிக்கும். அப்படிப்பட்ட ஓர் அரசு கட்டுப்பாடு மற்றும் முயற்சிகளை தன்னகத்தே கொள்ள விரும்பாது. அனைத்து துறைகளிலும் அரசு ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்தியதையும், அதனால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். மறுபுறம் தொலைநோக்குப் பார்வையுடன் உறுதித் தன்மை கொண்ட அரசு, பங்குதாரர்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும். கடந்த ஆறு வருடங்களாக அனைத்துத் துறைகளிலும் பங்குதாரர்களை அரசு ஊக்குவித்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டார்.உற்பத்தி முதல் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை; வேளாண் முதல் உள்கட்டமைப்பு வரை; தொழில்நுட்பத் துறை முதல் வரிவிதிப்பு வரை மற்றும் ரியல் எஸ்டேட் முதல் எளிமையாக்கப்பட்ட ஒழுங்குமுறை வரை அனைத்துத் துறைகளின் ஒட்டுமொத்த சீர்திருத்தங்களிலும் இது வெளிப்படுவதாக அவர் கூறினார்.

தொழில் துறைக்கு தேவையானது பாலங்கள், சுவர்கள் அல்ல என்று பங்கேற்பாளர்களிடம் பிரதமர் தெரிவித்தார். பல்வேறு துறைகளின் பொருளாதாரத்தை பிரிக்கும்  சுவர்களை நீக்குவதன் வாயிலாக அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கு புதிய விருப்பத்தேர்வுகள் கிடைக்கும். தொழில்நுட்பம், குளிர்பதனம் மற்றும் வேளாண் துறைகளின் முதலீடுகளால் விவசாயிகள் பயனடைவார்கள். எரிசக்தியை மூலதனமாகக் கொண்டு வேளாண்மை, சேவை, உற்பத்தி மற்றும் சமூகம் போன்ற துறைகளை வளர்க்க பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த முயற்சியில் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் பாலமாகவும், உந்து சக்தியாகவும் செயல்படலாம். உள்நாட்டு மதிப்பு மற்றும் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டும், உலக விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாம் செயல்பட வேண்டும். “சந்தை, மனித உழைப்பு மற்றும் இயக்க சக்தியாக செயல்படுவதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது”, என்று திரு மோடி தெரிவித்தார்.

ஜன்தன்-ஆதார்-மொபைல் (ஜாம்) திட்டத்தின் மூலம் நிதித்துறையின் உள்ளார்ந்த வெற்றியை சிறந்த திட்டமிடல் மற்றும் இந்த அரசின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் எடுத்துக்காட்டாக பிரதமர் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய நேரடியாக கணக்கில் செலுத்தும் நடைமுறை பெருந்தொற்றுக் காலத்தில் கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளில் சுலபமாக பணத்தை செலுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் உதவும் வகையிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். “கொள்கைகள் மற்றும் எண்ணங்களின் வாயிலாக விவசாயிகளின் நலனை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது”, என்று திரு மோடி தெரிவித்தார். வேளாண்துறையில் அதிகரித்துவரும் ஆற்றலை சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்வதற்கு உள்ள மாற்று வழிமுறைகள், மண்டிகளை நவீனமயமாக்குவது, மின் தளத்தில் வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு போன்றவை குறித்தும் பேசினார். இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் விவசாயிகளை நேரடியாக வளப்படுத்துகிறது என்றும் வளமான விவசாயி என்பது வளமான நாட்டைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண் துறையில் தனியார் முதலீடுகள் போதுமான அளவு இல்லை என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். விநியோக சங்கிலி, குளிர்பதனம் உரம் போன்ற துறைகளில் தனியார் துறையின் ஆர்வமும் முதலீடும் தேவை என்று அவர் வலியுறுத்தினார். ஊரக வேளாண் சார்ந்த தொழில்துறைக்கு அபரிமிதமான வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த கொள்கையும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி மேலும் கூறினார்.

ஊரக, ஊரகம் சார்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், மூத்த வர்த்தக மற்றும் தொழில் துறைத் தலைவர்கள் இந்த பகுதிகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நகரங்களை விட ஊரகப் பகுதிகளில் அதிகரித்திருப்பதாகவும், இந்தியாவில் செயல்படும் புது நிறுவனங்களில் (ஸ்டார்ட் அப்) 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்பொது வைஃபை நெட்வொர்க் சேவைகளை வழங்குவதற்காக அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிஎம்- வானி சேவையைக் குறிப்பிட்ட பிரதமர், ஊரக இணைப்பு நடவடிக்கைகளில் தொழில் முனைவோரும் பங்குபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “21வது நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியில் கிராமங்களும் சிறிய நகரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை  உங்களைப் போன்ற தொழில் முனைவோர் இழந்து விடக்கூடாது. உங்களது முதலீடுகள் ஊரக பகுதிகள் மற்றும் வேளாண் துறையில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு புதிய வாயில்களை திறக்கும்”, என்று பிரதமர் கூறினார்.

கொவிட் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு தொழில்துறை மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். குடிமக்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் அதன்மூலம் நல்ல முடிவு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றின்போது சூழ்நிலை எவ்வளவு பாதிக்கப்பட்டதோ, அதே அளவில் அதிலிருந்து மீண்டது என்று திரு மோடி கூறினார்.

சுதந்திர போராட்டத்தில் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பங்களிப்பை நினைவுகூர்ந்ததோடு விரைவில் நூற்றாண்டை கொண்டாடவிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பில் தனது பங்கை இந்த அமைப்பு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

-----


(Release ID: 1680285) Visitor Counter : 277