பிரதமர் அலுவலகம்

இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 DEC 2020 11:42AM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், தொலைத்தொடர்புத் துறையின் தலைவர்கள் மற்றும் மதிப்புமிக்க பங்கேற்பாளர்களே,

இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் சிறந்த சிந்தனையாளர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள். சமீப ஆண்டுகளில் மிக முக்கியப் பங்காற்றி வருபவர்களும், இந்தியாவின் வளமையான எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் வகையிலான திறமைகளைக் கொண்டுள்ள துறையின் முக்கியமான செயற்பாட்டாளர்களுமானவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நண்பர்களே,

          தொலைத் தொடர்பு வசதியின் வேகம் மேம்பட்டு வருவதை நாம் உணர்ந்துள்ள போதிலும், வளர்ச்சியின் வேகம் இப்போது தான் தொடங்கியுள்ளது என்பதை அறிந்திருக்கிறோம். முதலாவது தொலைபேசி அழைப்பு செய்யப்பட்ட காலத்தில் இருந்து நாம் நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். உண்மையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட நமது நாட்டில், சமூகத்தில், உலக அளவில் இப்போதுள்ள செல்போன் புரட்சி பற்றி கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. நமக்கு இருக்கும் எதிர்கால வாய்ப்புகள், இப்போதுள்ள வசதிகளை ஆரம்ப காலத்துக்கானவையாக ஆக்கிவிடும். வரக்கூடிய தொழில்நுட்பப் புரட்சியில் வாழ்க்கையை நாம் எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்ற வகையில் சிந்தித்து, திட்டமிட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. நல்ல ஆரோக்கியம், நல்ல கல்வி, நல்ல தகவல், விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கு நல்ல சந்தைப்படுத்தல் வசதி ஆகியவை நாம் கவனம் செலுத்த வேண்டிய சில துறைகளாக உள்ளன.

நண்பர்களே,

உங்களுடைய புதுமை சிந்தனை படைப்புகளால், முயற்சிகளால்தான், பெருந்தொற்று காலத்திலும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய முயற்சிகள் காரணமாகத்தான், ஒரு நகரில் இருக்கும் மகன், வேறு நகரில் இருக்கும் தாயுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. ஒரு மாணவர் வகுப்பறைக்குச் செல்லாமலே, ஆசிரியரிடம் இருந்து பாடம் கற்க முடிகிறது. ஒரு நோயாளி தன் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற முடிகிறது. வர்த்தகர் ஒருவர் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நுகர்வோருடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

          உங்களின் முயற்சிகள் காரணமாகத்தான் அரசாங்கம் என்ற முறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய பிற சேவை வழங்குநர் வழிகாட்டுதல்கள், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை புதிய உச்சங்களை எட்டுவதற்கு உதவியாக இருக்கும். பெருந்தொற்று நோய் பாதிப்பு நீங்கிய பிறகும் நீண்ட காலத்துக்கு இந்தத் துறை வளர்ச்சி காண இது உதவியாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப சேவைகள் தொழிலை ஜனநாயகமயமாக்க இந்த முன்முயற்சி உதவும். அத்துடன் நமது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இச் சேவையை கொண்டு போய் சேர்க்கும்.

நண்பர்களே,

சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் செல்போன் செயலிகள், பல தசாப்த காலங்களாக இருந்து வந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை மிஞ்சிவிட்ட காலக்கட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம். இது இந்தியாவுக்கும், நமது இளம் புதுமை சிந்தனையாளர்களுக்கும் நல்ல அறிகுறியாக உள்ளது. உலக அளவில் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய பல பொருட்களை உருவாக்க நமது இளைஞர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறியீடு தான் ஒரு பொருளை விசேஷமானதாக ஆக்குகிறது என்று நிறைய இளம் தொழில் நுணுக்க நிபுணர்கள் என்னிடம் கூறுகின்றனர். கான்செப்ட் தான் முக்கியம் என்று சில தொழில்முனைவோர் என்னிடம் கூறுகின்றனர். ஒரு பொருள் உற்பத்தியை அதிகரிக்க மூலதனம் தான் முக்கியம் என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மன உறுதி தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது, அதைத்தான் இளைஞர்கள் தங்கள் புதிய உருவாக்கத்தில் காட்டுகின்றனர். சில நேரங்களில் ஒருமித்த நிலைக்கும் லாபகரமான நிலைக்கும் இடையில் உறுதிப்பாடு தான் இருக்கிறது. எனவே, இளைஞர்கள் தங்களுடைய திறன் மீதும், தாங்கள் உருவாக்கும் பொருள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்றைக்கு நூறு கோடிக்கும் அதிகமான செல்போன்களைப் பயன்படுத்தும் நாடாக நாம் இருக்கிறோம். இன்றைக்கு நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தனிப்பட்ட டிஜிட்டல் அடையாளங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்போது 750 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இன்டர்நெட் எந்த அளவுக்கு மக்களிடம் பரவியுள்ளது என்பது பின்வரும் விஷயங்கள் மூலம் தெரிய வருகிறது: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பாதி பேர் கடந்த 4 ஆண்டுகளில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பாதி பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். நமது டிஜிட்டல் அளவும், தேவையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. உலகில் கட்டணங்கள் மிகக் குறைவாக நாம் கொண்டிருக்கிறோம். உலகில் செல்போன் செயலி வளர்ச்சி அதிகமாக இருக்கும் நாடாக நாம் இருக்கிறோம். நமது நாட்டின் டிஜிட்டல் திறனுக்கு இணை கிடையாது. அநேகமாக மனித வரலாற்றில் கூட இதற்கு இணை கிடையாது.

செல்போன் தொழில்நுட்பம் உள்ள காரணத்தால் தான் நாம் பல மில்லியன் பேருக்கு, பல பில்லியன் டாலர் அளவுக்கான ஆதாயங்களை அளிக்க முடிந்துள்ளது. செல்போன் தொழில்நுட்பம் இருக்கிற காரணத்தால் தான், பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கும், பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளவர்களுக்கும் நம்மால் உதவிகளை அளிக்க முடிந்தது. செல்போன் தொழில்நுட்பம் இருப்பதால் தான் பல பில்லியன் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை செய்ய முடிகிறது, அது பரிவர்த்தனைகளை முறைப்படுத்துபவையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கச் செய்துள்ளது. செல்போன் தொழில்நுட்பம் காரணமாகத்தான் சுங்கச்சாவடிகளில் மனித உதவிகள் இல்லாத சேவையைப் பெற முடிகிறது. இதே செல்போன் தொழில்நுட்பம் மூலமாகத்தான் கோவிட்-19 தடுப்பு மருந்து அளிக்கும் உலகின் மிகப் பெரிய முயற்சியை நாம் மேற்கொள்ளப் போகிறோம்.

நண்பர்களே,

இந்தியாவில் செல்போன் உற்பத்தியில் நாம் அதிக வெற்றியை பெற்றிருக்கிறோம். செல்போன் தயாரிப்புக்கு, மிகவும் உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். தொலைத்தொடர்பு சாதனம், வடிவமைப்பு, மேம்படுத்தல் மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை நாம் உருவாக்குவோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் எல்லா கிராமங்களிலும் அதிவேக பைபர் ஆப்டிக் தொடர்பு வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் அமல் செய்து வருகிறோம். ஏற்கெனவே அந்தமான் நிகோபர் தீவுகளை பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணைத்துவிட்டோம். இதுபோன்ற தொடர்பை சிறப்பாக செயல்படுத்தக் கூடிய பகுதிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறோம். வளரத் துடிக்கும் மாவட்டங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம். பிக்சட் லைனில் பிராட்பேண்ட் இணைப்பு தருதல் மற்றும் பொது இட வை-பை ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, செல்போன்கள் மற்றும் சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. மின்னணுக் கழிவுகளை கையாள்வதற்கும், மறுசுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நல்ல வழிமுறைகளைக் காண்பதற்கும் ஒரு பணிக்குழுவை நியமிப்பது பற்றி இந்தத் துறையினர் யோசிக்க முடியுமா?

நண்பர்களே,

நான் முன்பு கூறியதைப் போல, இது வெறும் தொடக்கம் தான். தொழில்நுட்பம் வேகமாக வளரும்போது, எதிர்காலத்தில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எதிர்கால தேவையில் நாம் வேகமாக முன்னேறி, பல மில்லியன் இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக, உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இந்த முக்கியமான கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு, இதுபோன்ற விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

**********



(Release ID: 1679059) Visitor Counter : 291