மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

புயலை எதிர்கொள்ள தயார்நிலை: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 23 NOV 2020 3:12PM by PIB Chennai

தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழல் உள்ளதால், அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படி தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரப் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், புயலாக உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம், மத்திய அமைச்சரவை செயலாளர் திரு.ராஜீவ் கவுபா தலைமையில் இன்று நடைபெற்றது.

வங்க கடலில் உருவாகியுள்ள தாழ்வு நிலையின் தற்போதைய நிலவரம் குறித்தும், இது புயலாக மாறி தமிழகம், புதுவை, ஆந்திர கடலோர பகுதிகளில் நவம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய வானிலை துறையின் தலைமை இயக்குநர் விளக்கினார்.

இதில் கலந்து கொண்ட தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார்நிலையில் இருப்பதாக தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவிடம் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து, இந்த புயல் சவாலை எதிர்கொள்வோம் என அவர்கள் தெரிவித்தனர்

இந்த புயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படக் கூடாது என்றும், பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் குறிப்பிட்டார். மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற அறிவுறுத்தலை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிலைமைக்கேற்ப தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய உள்துறை, மின்சாரம், தொலைதொடர்பு, விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர்கள், ரயில்வே வாரியத் தலைவர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குநர் மற்றும் பாதுகாப்பு அமைச்சக பிரதிநிதிகள் ஆகியோர், 3 மாநிலங்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும், உதவிகளை அளிப்பதாகவும் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675076

 

**********************


(Release ID: 1675091) Visitor Counter : 276