பிரதமர் அலுவலகம்

ஜே.என்.யு வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

தேசிய நலனுக்கு முன்னால் சித்தாந்தத்துக்கு ஒருபோதும் இடமில்லை-பிரதமர்
கருத்து பகிர்வு, புதிய யோசனைகள் பெருக இடையூறு கூடாது

Posted On: 12 NOV 2020 8:09PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், சுவாமி விவேகானந்தர் சிலையை இன்று காணொளலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாட்டின் இளைஞர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், தேசிய நலனுக்கு முன்பாக சித்தாந்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தமது கருத்தைத் தெரிவித்தார். நமது நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு இந்த ஒரு விஷயம் பெரும் தீமையை விளைவிப்பதாக அவர் கூறினார். ‘’ தேச நலன் சார்ந்த விஷயங்களில், எனது சித்தாந்தம் கூறும்  வரம்புக்குள்தான் நான் யோசிப்பேன், அதே அளவுகோலில்தான்  நான் பணியாற்றுவேன் என்று கூறுவது  தவறு’’ என்று திரு மோடி கூறினார். ஒருவரது சித்தாந்தம் குறித்து பெருமை கொள்வது இயல்புதான் என்று கூறிய அவர், தேசிய நலன் சார்ந்த விஷயங்களில், நமது சித்தாந்தம் அதற்கு துணையாக நிற்கவேண்டுமே தவிர, அதற்கு எதிராக அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் வரலாற்றில், எப்போதெல்லாம் நாட்டுக்கு சோதனையான காலம் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒவ்வொரு சித்தாந்தமும் தேசிய நலனுக்காக ஒன்று சேர்ந்துள்ளது என்று மாணவர்களிடையே பிரதமர் கூறினார். விடுதலைப் போராட்டத்தில், மகாத்மா காந்தி தலைமையின் கீழ், அனைத்து சித்தாந்தங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் நின்றனர். அவர்கள் ஒன்றாக போராடினார்கள். நெருக்கடி நிலை காலத்தில் அதேபோன்ற ஒற்றுமையை நாடு கண்டது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்தில் கலந்து கொண்டனர். அதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் ஜனசங்க கட்சியினரும் இருந்தனர். சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்களும் ஒன்று சேர்ந்தனர்.

இந்த ஒற்றுமையில், யாரும் சித்தாந்தத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்தேச நலன் என்ற ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது. எனவே, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசிய நலன் குறித்து  எப்போதெல்லாம் கேள்வி எழுகிறதோ, அப்போது எந்தவொரு சித்தாந்தத்தின் கீழ், முடிவுகளை எடுத்தாலும் அது நாட்டின்  இழப்புக்கு வழி வகுக்கும்.

கருத்து பகிர்வு, புதிய யோசனைகள் பெருகுவதற்கு  இடையூறு கூடாது என பிரதமர் தெளிவுபடக் கூறினார். நமது நாடு பல்வேறு விதமான அறிவுசார் யோசனைகள் உதித்து செழித்த பூமி. இந்தப் பாரம்பரியத்தை இளைஞர்கள் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்இந்தப் பாரம்பரியம் காரணமாக, உலகிலேயே, இந்தியா துடிப்புமிக்க ஜனநாயக நாடாகத் திகழ்கிறது என்று திரு. மோடி கூறினார்.

பிரதமர், தமது அரசின் சீர்திருத்த வரையறைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்தற்சார்பு இந்தியா என்ற யோசனை 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கூட்டு உணர்வாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். அது நமது விருப்பங்களில் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது. இந்தியாவில் சீர்திருத்தங்களைத் தொடர்வது குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஜேஎன்யு மாணவர்கள், நல்ல சீர்திருத்தங்கள் கெட்ட அரசியல் என்ற கருத்து எவ்வாறு நல்ல சீர்திருத்தங்கள் நல்ல அரசியலாக மாறியது என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சீர்திருத்தங்களின் பின்னால், ஒவ்வொரு வழியிலும் இந்தியாவை சிறந்த நாடாக மாற்றுவது பற்றிய உறுதிப்பாடு உள்ளது என்று அவர் கூறினார். நோக்கமும், உறுதிப்பாடும் இன்று சீர்திருத்தங்கள் ஏற்பட்டதற்கு உண்மையான காரணிகளாக இருந்தன என்று அவர் மேலும் தெரிவித்தார். நடைபெற்று வரும் சீர்திருத்தங்களுக்கு முன்னதாக, ஒரு பாதுகாப்பு வலை உருவாக்கபட்டு வருகிறது என்றும், நம்பிக்கை தான் இந்த பாதுகாப்புக்கு அடிப்படை என்றும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக, ஏழை மக்கள் வெறும் முழக்கங்களில் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பிரதமர் கூறினார். அவர்களை நாட்டின் நடைமுறையுடன் இணைக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஏழைகள் மிக அதிகமாக புறக்கணிக்கப்பட்டனர், மிக அதிகமாக தொடர்பில்லாமலும், நிதி ரீதியாக விலக்கி  வைக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று அவர் கூறினார். தற்போது, ஏழைகள் தங்களது உறுதியான சொந்த வீடுகள்,கழிப்பறைகள், மின்சாரம், எரிவாயு, சுத்தமான குடிநீர், டிஜிடல் வங்கி முறை, குறைந்த விலையில் கைபேசி இணைப்பு, அதிவேக கணினி இணைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். ஏழைகள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு  அவசியமான, அவர்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள பாதுகாப்பு வலை இதுதான். இதேபோல, சிறந்த பாசன கட்டமைப்பு, நவீன மண்டிகள், -நாம், மண்வள அட்டைகள், குறைந்தபட்ச ஆதரவு  விலையில் யூரியா கிடைப்பது ஆகியவை விவசாயிகளைச் சுற்றி பின்னப்பட்டுள்ள பாதுகாப்பு வலையாகும்.அரசு முதலில் அவர்களது தேவைகளுக்காகப் பணியாற்றியது, இப்போது அவர்களது விருப்பங்களுக்காக உழைத்து வருகிறது.

சுவாமி விவேகானந்தர் ஒவ்வொரு மனிதரிலும் காண விரும்பிய துணிச்சலை வழங்குவதுடன், ஜேஎன்யு-வில் உள்ள சுவாமியின் இந்தச் சிலை அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் வாழ்த்தினார். சுவாமியின் தத்துவத்தில் முக்கிய புள்ளியாக இருந்த கருணையை இந்தச் சிலை போதிக்கும் என அவர் கூறினார். நாட்டுக்காக மகத்தான அர்ப்பணிப்பு உணர்வை போதிக்கட்டும், நமது நாட்டின் மீதான ஆழ்ந்த பற்றை போதிக்கட்டும் என பிரதமர் வாழ்த்தினார். இவை சுவாமியின் வாழ்க்கையில் முக்கிய செய்தியாக இருந்தது. சுவாமியின் எதிர்பார்ப்பாக இருந்த, ஒற்றுமை உணர்வு, இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி பீடுநடை போட வேண்டும் என்ற தொலைநோக்கை இந்தச் சிலை  நாட்டுக்கு வழங்கும் என அவர் தெரிவித்தார். வலுவான, முன்னேற்றமான இந்தியா என்னும் சுவாமியின் கனவை நனவாக்க இந்தச் சிலை தொடர்ந்து நமக்கு ஊக்கத்தை அளிக்கட்டும் என அவர் வாழ்த்தினார்.(Release ID: 1672581) Visitor Counter : 173