பிரதமர் அலுவலகம்

கட்டாக்கில் வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நவீன அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாக திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 11 NOV 2020 7:01PM by PIB Chennai

ஜெய் ஜெகன்நாத்!

ஒடிசா முதலமைச்சரும், நமது மூத்த சகாவுமான திரு. நவீன் பட்நாயக் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகா திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களே, ஒடிசா மண்ணின் மைந்தரும், மத்திய அமைச்சருமான திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி பி.பி.பட் அவர்களே, ஒடிசா மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நண்பர்களே வணக்கம்.

பகவான் ஜெகநாதரின் அருளாசியால், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கட்டாக் கிளை இன்று புதிய, நவீன வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகள் இயங்கிய பின்னர், சொந்த இடத்திற்கு வந்துள்ள உங்களின் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போது, நானும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்களது மகிழ்ச்சியான தருணத்தின் ஒருவனாக பங்கேற்றிருக்கும் நிலையில், இந்த தீர்ப்பாயத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்இந்த தீர்ப்பாயக் கிளை, ஒடிசாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் வடக்கு-கிழக்கு இந்தியா முழுமைக்கும் இந்த நவீன வசதியை வழங்கவுள்ளது. புதிய வளாகத்திற்கு சென்ற பின்னர், கொல்கத்தா மண்டலத்தின் இதர கிளைகளில் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளையும் இது தீர்த்து வைக்கும். எனவே, விரைவான விசாரணைக்கு வழிவகுக்கும், இந்தப் புதிய வளாகத்தின் மூலம் பயனடையவுள்ள  அனைத்து வரி செலுத்துவோருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று ஒரு வணக்கத்துக்குரிய ஆத்மாவை நினைவு கூரும் ஒரு நாளாகும். அவரது முயற்சி இல்லாவிட்டால், கட்டாக் வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தற்போதைய இந்த நிலைக்கு உயர்ந்திருக்காது. ஒடிசா மாநிலத்துக்காகவும், மக்களுக்காகவும் தொண்டாற்ற தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பிஜூ பட்னாயக் பாபு அவர்களுக்கு எனது மரியாதையை நான் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கென ஒரு பெருமைமிகு வரலாறு உள்ளது. நாடு முழுவதும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டு வரும் தற்போதைய குழுவை நான் பாராட்டுகிறேன். கட்டாக்குக்கு முன்னதாக உங்களது சொந்த வளாகங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூரில் ஏற்கனவே தயாராகி இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது. மற்ற நகரங்களிலும், நீங்கள் நவீன வளாகங்களை அமைத்தும், பழையனவற்றை மேம்படுத்தியும் வருகிறீர்கள்.

நண்பர்களே,

தொழில்நுட்ப யுகத்தில் நடைமுறை முழுவதையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும். அதனை நாம் இன்று அடைந்து வருகிறோம். நவீனத்துவம், மென்மேலும் தொழில்நுட்ப பயன்பாடு, குறிப்பாக நீதித்துறையில், நாட்டு மக்களுக்கு புதிய வசதிகளைப் பெறுவதற்கு வழி வகுத்துள்ளது. நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம், விரைவான, நியாயமான நீதி கிடைக்கும். மெய்நிகர் விசாரணைகளுக்காக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதன் கிளைகளை  மேம்படுத்தி வருவது திருப்தியளிக்கிறது. திரு. பி.பி. பட் இந்தக் கொரோனா காலத்தில் மெய்நிகர் விசாரணைகள் நடத்தப்பட்டது பற்றியும், திரு. ரவி சங்கர் பிரசாத், நாடு முழுவதும் இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பதையும் விளக்கினார்கள்.

நண்பர்களே, நீண்ட அடிமைக் காலம், வரி செலுத்துவோருக்கும், வரி வசூலிப்பவர்களுக்கும் இடையிலான உறவை, சுரண்டப்படுபவர்கள், சுரண்டுபவர்கள் என்ற முறையில் உருவாக்கியது. துரதிருஷ்டவசமாக, சுதந்திரத்துக்குப் பின்னர் நடைமுறையில் இருந்த இந்த நிலையை மாற்ற பெரிய அளவில் முயற்சி எடுக்கப்படவில்லை. ஆனால், பண்டைக் காலத்தில் மிகவும் ஆரோக்கியமான வரி வசூல் முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேகங்கள் மழை பொழியும்  போது, அனைவருக்கும் பலனளிப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், மேகங்கள் உருவாகும் போது, சூரியன் தண்ணீரை உறிஞ்சி விடுகிறது. ஆனால், யாருக்கும் சிரமம் ஏற்படுவதில்லை என கோஸ்வாமி துளசிதாஸ் கூறுகிறார். அதேபோல, நிர்வாகமும் இருக்க வேண்டும். சாதாரண மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் போது, அவர்கள் பாதிக்கப்படக் கூடாது. நாட்டின் அதே பணம் மக்களை அடையும் போது, அவர்கள் அந்த பயனை உணர வேண்டும். பல ஆண்டுகளாக, அரசு இந்த நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளது.

இன்றைய வரி செலுத்துவோர், முழுமையான வரி நிர்வாகத்தில், மிகப்பெரிய மாற்றங்களையும், வெளிப்படைத்தன்மையையும் கண்டு வருகின்றனர். வரியைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் பல மாதங்களாக காத்திருக்கத் தேவையில்லை. சில வாரங்களிலேயே அவர்களுக்கு பணம் கிடைத்து விடுகிறது. அவர்கள் வெளிப்படைத் தன்மையை உணர்கின்றனர். அதேபோல, முறையீடுகளுக்குத் தீர்வு காண்பதிலும் வெளிப்படைத் தன்மையை அவர்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். வருமான வரி தொடர்ந்து குறைந்து வருவதையும், மேலும் வெளிப்படைத் தன்மை நிலவுவதையும் வரி செலுத்துவோர் பார்த்து வருகின்றனர். முந்தைய ஆட்சிகளின் போது, வரி பயங்கரவாதம் நிலவியதாக புகார்கள் உள்ளன. வரி பயங்கரவாதம் என்ற வார்த்தை எல்லா இடத்திலும் கேட்டது. இன்று, வரி பயங்கரவாதத்திலிருந்து, வரி வெளிப்படைத் தன்மைக்கு நாடு நகர்ந்துள்ளது. இந்த மாற்றம்சீர்திருத்தம், செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பத்தின் அதிகபட்ச உதவியுடன், நாம் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் சீர்திருத்தி வருகிறோம். தெளிவான மனநிலை, தெளிவான நோக்கம் ஆகியவற்றுடன் நாம் செயல்பட்டு வருவதால், வரி நிர்வாகத்தின் மனப்போக்கை நாம் மாற்றி வருகிறோம்.

நண்பர்களே,

நாட்டில் ரூ.5 லட்சம் வரை இன்று வரி கிடையாது. இன்று, கீழ் நடுத்தர பிரிவைச் சேர்ந்த நமது இளைஞர்கள் இதனால் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். பட்ஜெட்டில் இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள புதிய வாய்ப்பு மிகவும் எளிதானது என்பதுடன், வரிசெலுத்துவோருக்கு தேவையற்ற அழுத்தத்தையும், செலவையும் தவிர்க்கிறது. அதேபோல, கார்பரேட் வரியில் வரலாற்று சிறப்பு மிக்க குறைப்பு காரணமாக, மேம்பாட்டின் வேகமும் அதிகரிக்கப்பட்டு இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த நாடாக மாற்றியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறும் வகையில், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி விகிதம் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பங்கு சந்தையில், முதலீட்டை அதிகரிக்க ஊக்கத்தொகை விநியோக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியும் பல வரி வலைகளைக் குறைத்துள்ளது. பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதம் குறைந்துள்ளது.

நண்பர்களே, 5-6 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.3 லட்சம் வரை, வருமான வரி ஆணையர் நிவாரணம் அளிக்கும் வழக்கம் நிலவியது. இது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. எங்கள் அரசு இந்த வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தியது. இதேபோல, குறைந்தபட்சம் ரூ.2 கோடி வரையிலான வரி மேல்முறையீடு வழக்குகள் மட்டும் உச்சநீதிமன்றத்துக்கு செல்கின்றன. இந்த நடவடிக்கைகள் எளிதாக தொழில் நடத்துவதற்கு உதவியதுடன், பல நிறுவனங்களில் வழக்குகளின் சுமையும் குறைந்தது.

நண்பர்களே,

மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தங்கள், வரி குறைப்பு, நடைமுறைகளை எளிதாக்கியது ஆகியவைநேர்மையான வரி செலுத்துவோரின் கண்ணியத்துடன் தொடர்புடையதாகும். மேலும் இடையூறுகளில் இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும் செய்யும். இன்று, வரி செலுத்துவோரின் கடமைகள், உரிமைகள் ஆகியவை வரைமுறைப்படுத்தப்பட்டு, சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே, இவ்வாறு அங்கீகரித்துள்ள வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. வரி செலுத்துவோர் மற்றும் வரி வசூலிப்பவர் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். உழைப்பையும், வியர்வையையும் நாட்டின் வளர்ச்சிக்கு அளிப்பவர்கள், நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோர் ஆகியோர் மரியாதைக்கு உகந்தவர்களாவர். இதை ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய போது நான் குறிப்பிட்டேன். வரி செலுத்துவோர் இடையே, நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் பலர் வரி முறையில் சேருவதற்கு வழி வகுக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அரசு எவ்வாறு வரி செலுத்துவோரை நம்பியுள்ளது என்பதற்கு நான் மேலும் உதாரணத்தை கூற விரும்புகிறேன்.

முன்பெல்லாம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பெரும்பாலானோர் அல்லது தொழில் நடத்துவோர், வருமான வரித்துறையின் ஆய்வைச் சந்திக்க வேண்டியிருந்தது. இது போல இல்லாமல், தாக்கல் செய்யப்படும் கணக்குகளை முதலில் நம்பவேண்டும் என்ற நடைமுறையை அரசு கொண்டு வந்தது. இதன் பயனாக, நாட்டில் தாக்கல் செய்யப்படும் 99.75 சதவீதம் இன்று எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வெறும் 0.25 கணக்குகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது நாட்டின் வரி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட பெரிய மாற்றமாகும்.

நண்பர்களே,

நாட்டில், வரி சீர்திருத்தங்களின் இலக்குகளை எட்டுவதற்கு தீர்ப்பாயங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நேரில் விசாரணைகளை நடத்துவதற்கு பதிலாக, -விசாரணைகளை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பதை சிந்திக்க வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் இதைச் செய்ய முடிந்துள்ள போது, வருங்காலத்திலும் இதனை விரிவாக்கலாம். இந்த வளாகங்கள் அமைத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம், வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணமுடியும்.

அசாதாரணமான ஆற்றலின் அடிப்படையிலான  நல்ல நிர்வாகமும், அமைப்பும் நீதிக்கு மிகவும் அவசியம் என அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, நீதியின் ஆற்றலை வலுப்படுத்தவும், அமைப்புகளை தன்னிறைவு பெற்றதாக மாற்றவும்  தொடர் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என நான் முழுமையாக நம்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி உள்ளிட்ட எதிர்வரும் பண்டிகைகளையொட்டி நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முகக்கவசம் அணிவது, இடைவெளியைப் பராமரிப்பது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு நான் ஒடிசா மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தீபாவளி சமயத்தில் மட்டும் உள்ளூர் பொருட்களை வாங்காமல், 365 நாளும் தீபாவளி கொண்டாடுபதைப்போல உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வெகு வேகமாக வளருவதை நாம் காண முடியும். நமது மக்களின் உழைப்பு நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இந்த நம்பிக்கையுடன் எனது வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல!

*******

 


(Release ID: 1672273) Visitor Counter : 253