பிரதமர் அலுவலகம்

கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 27 OCT 2020 6:41PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகா டாக்டர் ஜித்தேந்திர சிங் அவர்களே,  சிவிசி மற்றும் ஆர்பிஐ உறுப்பினர்களே, மத்திய அரசின் செயலர்களே, சிபிஐ அதிகாரிகளே, மாநிலங்களின் தலைமை செயலர்களே, மாநில புலனாய்வு குழுக்களின் தலைவர்களே, வங்கிகளின் மூத்த மேலாளர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள அனைவருக்கும் வணக்கம். இந்த தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள சிபிஐ குழுவை நான் வாழ்த்துகிறேன்.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் இன்று தொடங்குகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளைக் கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் நிர்வாக முறைகளின் சிற்பியாக சர்தார் பட்டேல் திகழ்ந்தார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்ற முறையில், நாட்டின் சாதாரண மக்களுக்கான நடைமுறையை ஏற்படுத்த அவர் முயற்சித்தார். அரசியலில் நல்ல மரபுகளை அவர் உருவாக்க முயன்றார். ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த பல பத்தாண்டுகளில், மாறுபட்ட சூழல் உருவாக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான ரூபாய் ஊழல்களை நீங்கள் நினைவு கூரலாம். போலி நிறுவனங்களின் கட்டமைப்பு, வரி துன்புறுத்தல், வரி ஏய்ப்பு போன்றவை பல ஆண்டுகளாக விவாதங்களின் மையப்புள்ளிகளாக மாறிப் போனது.

நண்பர்களே, 2014-ம் ஆண்டு நாடு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத் தீர்மானித்த போது, புதிய திசையை நோக்கி நகர்ந்த போது, அப்போதைய சூழல் முறை மிகப் பெரும் சவாலாக இருந்தது. நாடு இதே மாதிரி செல்ல வேண்டுமா என்ற சிந்தனையில் மாற்றம் அவசியமாக இருந்தது. பதவி ஏற்புக்குப் பின்பு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காமல் இருந்த கருப்பு பணத்திற்கு எதிரான குழுவை அமைத்தல்  போன்ற அரசின் இரண்டு மூன்று உத்தரவுகள், ஊழலுக்கு எதிரான இந்த அரசின் உறுதிப்பாட்டைக் காட்டியது. ஊழலுக்கு எதிரான சகிப்புத் தன்மையற்ற நிலையை நோக்கி நாடு நடைபோட்டது. 2014-ம் ஆண்டிலிருந்து நாட்டின் நிர்வாக நடைமுறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வங்கி நடைமுறைகள், சுகாதாரத் துறை, கல்வித் துறை, தொழிலாளர், வேளாண்மை  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் காலம் பல பெரிய சீர்திருத்தங்களின் காலம். இன்று, இந்த சீர்திருத்தங்களின் அடிப்படையில், இந்தியா வெற்றிகரமான தன்னிறைவு நோக்கி நடைபோடுகிறது.

உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டு செல்வதே நமது நோக்கமாகும். ஆனால், நண்பர்களே, வெளிப்படையான, பொறுப்புடைமை கொண்ட, மக்களுக்கு பதிலளிக்கும் தன்மை கொண்ட நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தம் வளர்ச்சிக்கு அவசியமாகும். இந்த அனைத்துக்கும் மிகப்பெரிய எதிரி ஊழல்தான். ஊழல் என்பது சில ரூபாய் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு புறம் ஊழல் நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், மறுபுறம் சமூக சமன்பாட்டையும் குலைக்கிறது. மிகவும் முக்கியமாக, நாட்டின் நடைமுறை மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்கிறது. ஆகவே, ஊழலைத் தடுப்பது ஒரு முகமையின் அல்லது ஒரு நிறுவனத்தின்   பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.

நண்பர்களே, சிபிஐ தவிர, வேறு சில முகமைகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. ஒரு வகையில் இந்த மூன்று நாட்கள், நாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் அனைத்து முகமைகளும் ஒரு தளத்தில் கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய சவாலாக உள்ள ஊழலை ஒழிக்கும் முயற்சிகளுக்கு  இந்த மூன்று நாட்களும் வாய்ப்பாக அமையக்கூடும். ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை, பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. எனவே, இவற்றைத் தடுக்க முறையான கண்காணிப்பு, செயல்திறன் மிக்க தணிக்கைகள், திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிகள் மிகவும் அவசியமாகும். அனைத்து முகமைகள் இடையே ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி  இதற்கு மிகவும் அவசியமாகும். இதற்கு ஏற்ற சிறப்பான தளமாக இந்த மாநாடு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நண்பர்களே, 2016-ம் ஆண்டு கண்காணிப்பு வாரத்தின் போது, வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் நம் நாட்டைப் போன்ற  நாட்டில், ஊழலுக்கு ஒரு போதும் இடம் இல்லை என்று நான் கூறினேன். ஊழலின் மிகப்பெரிய பாதிப்பை நாட்டின் ஏழை மக்கள் அடைந்துள்ளனர். நேர்மையான மனிதர்கள் ஊழல் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இங்கு உள்ள நிலைமை காரணமாக, ஏழை மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை. முந்தைய நிலை வேறு, இப்போது, நேரடி பண உதவி திட்டத்தின் பயன்கள் 100 சதவீதம் மக்களைச் சென்றடைகின்றன. நிதி மக்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாகச் செல்கிறது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தவறானவர்கள் கைகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்று, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நாட்டின் நிறுவனங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.  ஒரு நேர்மறையான சிந்தனை உருவாகியுள்ளது.

நண்பர்களே, அரசிடம் இருந்து அழுத்தம் இருப்பதாக மக்கள் உணரக்கூடாது. அதேசமயம் அரசு செயல்படவில்லையோ என்ற எண்ணமும் வந்துவிடக்கூடாது. எனவே, 1500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம், உதவித்தொகை, வங்கிகளிடமிருந்து கடன்கள், பாஸ்போர்ட்டுகள், உரிமங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கும், தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதற்கும் மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. எந்த அதிகாரியையும் பார்க்க வேண்டியதில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்று காத்திருக்க  வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் டிஜிடல் வாய்ப்புகள் வந்து விட்டன.

நண்பர்களே, அழுக்கைச் சுத்தப்படுத்துவதை விட அழுக்கடையாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது என ஒரு பழமொழி உண்டு.  தண்டனை கண்காணிப்பை விட தடுப்பு கண்காணிப்பு சிறந்தது. ஊழல் மலியக் காரணமாக உள்ள சூழல்களைத் தாக்க வேண்டியது அவசியம். ஒரு காலத்தில் பணி மாறுதல்கள், பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு ஆகியவை எப்படி நடந்தன என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசு பணத்தைக் கொள்ளையடிக்காமல், அதை சரியான முறையில் பயன்படுத்தி பெருக்கி நாட்டு நலனுக்காகப் பாடுபடும் அதிகாரிகளை முக்கிய பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று கவுடில்யர் கூறியுள்ளார். இது சில ஆண்டுகளுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற அரசின் விருப்பம் செயல்படுத்தப்பட்டது. பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கிய பதவிகளுக்கு சிபாரிசுகள் போன்ற அழுத்தங்கள் இப்போது இல்லை. டாக்டர் ஜித்தேந்திர சிங் சற்று முன்பு குறிப்பிட்டதைப்போல, குரூப் பி, சி பணியிடங்களுக்கு நேர்காணலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தவறு நடப்பது நிறுத்தப்பட்டுள்ளது. வங்கி வாரியத்துறை உருவாக்கப்பட்டு, வங்கி உயர் பதவிகளுக்கான நியமனங்களில் வெளிப்படைத் தன்மை பராமரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கண்காணிப்பு முறையைப் பலப்படுத்த பல சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு பணம், பினாமி சொத்து ஆகியவற்றைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உலகின் பிற நாடுகளுக்கு முன்னோடியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தப்பியோடி தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நண்பர்களே, இந்த முயற்சிகளுக்கு இடையே, ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ முடிவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இந்த நேரத்தில் உங்களுக்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக இந்த ஊழல் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. இப்போது அது நாட்டின் முன்பு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்த சவால் வாரிசு வம்ச ஊழல் ஆகும். அதாவது, ஊழல் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது.

ஊழல் நடைமுறைகளுக்கு ஒரு தலைமுறைக்கு சரியான தண்டனை கிடைக்காவிட்டால், அடுத்த தலைமுறை மேலும் தீவிரத்துடன் ஊழலைச் செய்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாயை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காத போது, அல்லது சிறு தண்டனை மட்டும் கிடைக்கின்ற போது, அவர்கள் ஊக்கம் பெற்று ஊழலை அதிகமாக செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். பல மாநிலங்களில் இது அரசியல் பாரம்பரியமாக மாறியுள்ளது.  தலைமுறை, தலைமுறையாக நடைபெறும் இத்தகைய ஊழல் நாட்டை கரையான்கள் போல அரிக்கக்கூடியதாகும்.

ஒரு வழக்கில் ஊழலுக்கு ஆதரவான மெத்தனப்போக்கு அத்துடன் நின்று விடுவதில்லை. அது ஒரு சங்கிலித் தொடர் போல பல ஊழல்களுக்கு வழி வகுத்து விடும். சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஊடகமும், சமுதாயமும் இந்தக் குற்றத்தை மிக எளிதாக எடுத்துக் கொண்டுவிடும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும். இது முன்னேற்றமான, தன்னிறைவு இந்தியாவுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மிக முக்கியமாக இது உங்களுக்கு அதிகமாக உள்ளது. இந்தத் தலைப்பு இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என நான் நம்புகிறேன். ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது போன்ற செய்திகள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவை. ஊழல் செய்தால் தப்ப முடியாது என்ற உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இன்று இந்த நிகழ்ச்சியின் மூலம், ‘’ஊழலுக்கு எதிரான இந்தியா’’ என்னும் போரில் ஊழலை முறியடித்து, இந்தியாவை வலுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இதனை நிறைவேற்றுவதன் மூலம், சர்தார் வல்லபாய் பட்டேல் கனவு கண்ட வலுவான, வளர்ச்சி மிக்க, தன்னிறைவு பெற்ற  இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்வரும் பண்டிகைகளையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரோக்கியமாக இருந்து உங்களைப் பேணுவீர்களாக!

 

-----------------------------------


(Release ID: 1669679) Visitor Counter : 344