பிரதமர் அலுவலகம்

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


கல்வித்துறை சீர்திருத்தங்களில் உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர்

கல்வித்துறை சீர்திருத்தங்களுக்கான புதிய பாதை மற்றும் புதிய வலிமையை தேசிய கல்வி கொள்கை வழங்கும்: பிரதமர்

நாட்டின் கல்வித் துறையில் அனைத்து மட்டங்களிலும், பெண் குழந்தைகளின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகமாகும்: பிரதமர்

திறன் வளர்த்தல், மறு திறன் வளர்த்தல் மற்றும் கூடுதல் திறன் வளர்த்தல் ஆகியவை இந்த காலகட்டத்தின் தேவையாகும்: பிரதமர்

Posted On: 19 OCT 2020 2:01PM by PIB Chennai

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது என்றும் 'ராஜர்ஷி' நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மற்றும் எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலட்சியம் மற்றும் உறுதிகளை இந்தப் பல்கலைக்கழகம் நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்த பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தலைசிறந்தவர்களைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்துமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிவைப் பயன்படுத்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கையை ஒரு பெரிய பல்கலைக்கழகம் என்று அவர் குறிப்பிட்டார்.

"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது" என்னும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் கோரூரு ராமசாமி ஐயங்கார் அவர்களின் வார்த்தைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்வி முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

உயர்கல்வியின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றுவதற்கும், நமது இளைஞர்களை போட்டித் திறன் மிக்கவர்களாக ஆக்குவதற்கும் அதிக எண்ணிக்கையிலும், சிறப்பான முறையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

கடந்த ஆறு வருடங்களில் சராசரியாக ஒரு வருடத்துக்கு ஒரு ஐஐடி திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள தார்வாடிலும் ஒரு ஐஐடி  செயல்படுகிறது என்று கூறிய பிரதமர், 2014-இல் இந்தியாவில் வெறும் 9 ஐஐடிக்களே இருந்தன. அதைத் தொடர்ந்து வந்த ஐந்து வருடங்களில் 16 ஐஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

கடந்த ஐந்தாறு வருடங்களில் 7 புதிய ஐஐஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு முன்பு இந்தியாவில் வெறும் 13 ஐஐஎம்களே இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆறு தசாப்தங்களாக வெறும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே நாட்டில் சேவைகளை வழங்கி வந்தன. 2014க்குப் பிறகு எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன அல்லது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 5-6 வருடங்களில் உயர்கல்வித் துறையில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுவது தொடர்பானது மட்டுமே அல்ல என்றும் இந்த நிறுவனங்களில் பாலின மற்றும் சமூக பங்கு பெறுதலுக்கான சீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிய பிரதமர், இத்தகைய நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

முதல் ஐஐஎம் சட்டம் நாடு முழுவதிலும் உள்ள  ஐஐஎம்களுக்கு அதிக உரிமைகளை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். மருத்துவ கல்வியில் அதிக வெளிப்படைத் தன்மையை கொண்டு வர தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி மற்றும் இதர இந்திய மருத்துவ முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர இரண்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

நாட்டின் கல்வித் துறையில் அனைத்து மட்டங்களிலும், பெண் குழந்தைகளின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

நெகிழ்வுத் தன்மை மிக்க மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் கல்வி முறையின் மூலம் நமது இளைஞர்களை போட்டி திறன் மிக்கவர்களாக ஆக்க பல முனைகளில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இருக்கும் மைசூர் பல்கலைக்கழகத்தை, தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதுமைகளைப் படைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆதரவு மையங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி மையங்கள், 'தொழிற்சாலை-கல்வி நிலையை இணைப்பு' மற்றும் 'பல்முனை ஆராய்ச்சி'யில் கவனம் செலுத்துமாறு மைசூர் பல்கலைக்கழகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச மற்றும் தற்போதைய விஷயங்களோடு, உள்ளூர் கலாச்சாரம், உள்ளூர் கலை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழகத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார். தங்களுடைய தனிப்பட்ட வலிமைகளின் அடிப்படையில் சிறந்த இடத்தை அடைய முயற்சிக்குமாறு மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

*********



(Release ID: 1665933) Visitor Counter : 160