பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மற்றும் அதனை செயல்படுத்துவது தொடர்பான கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 15 OCT 2020 5:30PM by PIB Chennai

கொவிட் 19 தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.  தடுப்பூசி சோதனை நடை முறைகள், நோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், மருந்து மற்றும் சிகிச்சை வழிமுறைகள் குறித்து பிரதமர் ஆய்வு நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டிற்குப் பெரும் சவாலாக இருந்து வரும் கொவிட்-19 பரவலுக்கு எதிராக இந்தியாவில் தடுப்பூசியைத் தயாரித்துவரும் நிறுவனங்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதுபோன்ற முயற்சிக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

மருத்துவத்துறையில் புதிதாக மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அதனை சீர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசிகளைக் கையகப்படுத்துதல், விநியோகம் செய்தல், தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறை குறித்தும் இன்றைய கூட்டத்தில் அவர் ஆய்வு நடத்தினார். 

செரோ சர்வே மற்றும் தொற்று கண்டறிய சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், பரிசோதனைகள் முறையாகவும், துரிதமாகவும், குறைந்த செலவிலும் வழங்கப்பட வேண்டும் என்று  ஆலோசனை விடுத்தார்.

பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் அறிவியல் ரீதியான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி அடிகோடிட்டுக் கூறினார். இந்தக் கொரோனா காலத்தில் சான்றுடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வுகளை அளித்து வரும் ஆயுஷ் அமைச்சகத்தை அவர் பாராட்டினார்.

 இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்த விலையில், எளிதாகக்  கிடைக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனைகளும், தடுப்பூசிகளும், மருந்துகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இந்தத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் விழிப்புணர்வுடனும், ஆயத்தமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

**********************

 



(Release ID: 1664868) Visitor Counter : 208