பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் விவசாயிகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 27 SEP 2020 1:37PM by PIB Chennai

தன்னுடைய மனதின் குரல் உரையில், கொவிட் நெருக்கடியின் போது நாட்டின் விவசாயிகள்

சிறப்பான உறுதியை  வெளிப்படுத்தியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

நாட்டின் வேளாண்துறை, நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன தற்சார்பு பாரதத்தின் ஆதாரங்கள்.  இவை பலமாக விளங்கினால் தான் தற்சார்பு பாரதத்தின் அஸ்திவாரம் பலமானதாக அமையும் என்று அவர் கூறினார்.

 சில காலமாகவே இந்தத்துறை, சுயமாகவே பல தடைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, பல தவறான கருத்துக்களைத் தகர்க்க முயன்றிருக்கிறது என்று கூறிய அவர்,  என்னிடத்தில் பல விவசாயிகள் எழுதியிருக்கிறார்கள், விவசாயிகளின் சங்கங்களோடு நான் பேசியும் இருக்கிறேன்.  விவசாயத்தில் புதியபுதிய பரிமாணங்கள் ஏற்பட்டு வருகின்றன, வேளாண்மையில் உருவாகிவரும் மாற்றங்கள் ஆகியன பற்றி அவர்கள் கூறுகிறார்கள் என்றார்.

"ஹரியாணாவின் சோனீபத் மாவட்டத்தில் நமது விவசாய சகோதரர் ஒருவர் வசிக்கிறார். அவர் பெயர் கன்வர் சௌஹான் அவர்கள்.  தனது விளைபொருட்களான பழங்கள், காய்கறிகளைச் சந்தைக்கு வெளியே விற்பதில் தனக்கு எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவித்தார்.  அவர் சந்தைக்கு வெளியே தன் விளைபொருட்களை விற்றால், அவருடைய விளைபொருட்கள் மட்டுமல்லாமல், அவருடைய வண்டியும் கூட கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறினார்.  ஆனால் 2014ஆம் ஆண்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் குழுச் சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அவருக்கும் சரி, அக்கம்பக்கத்திலிருந்த மற்ற விவசாயிகளுக்கும் பெரும் ஆதாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் தனது கிராமத்தின் சக விவசாயிகளுடன் இணைந்து ஒரு விவசாய விளைபொருள் குழுவை நிறுவியிருக்கிறார்.  இன்று கிராமத்தின் விவசாயிகள், சோளம், பேபிகார்ன் ஆகியவற்றைப் பயிர் செய்கிறார்கள்.  அவர்களின் விளைபொருட்களை, இன்று தில்லியின் ஆஸாத்புரின் சந்தை, பெரிய சில்லரை வியாபார சங்கிலித் தொடர் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் அளித்து வரப்படுகிறது.  இன்று கிராமத்தில் விவசாயிகள் சோளம் மற்றும் பேபிகார்னை விளைவிக்கிறார்கள், ஏக்கருக்கு 2 ½ இலட்சத்திலிருந்து 3 இலட்சம் ரூபாய் வரை, ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கிறார்கள்.  இதே கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் வலைவீட்டை உருவாக்கி, பாலி வீட்டை ஏற்படுத்தி, தக்காளி, வெள்ளரி, சிம்லா மிளகாய், இவற்றின் பலவகைகளை விளைவிக்கிறார்கள், ஒவ்வொரு ஏக்கரிலும், ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள்.  இந்த விவசாயிகளிடத்திலே என்ன வித்தியாசம் தெரியுமா?  தங்களுடைய பழங்கள்-காய்கறிகளை, அவர்களால் எங்கு வேண்டுமானாலும், யாரிடத்தில் வேண்டுமானாலும் விற்கும் சக்தி இருக்கிறது, இந்தச் சக்தி தான் அவர்களின் முன்னேற்றத்துக்கான ஆதாரம்.  இந்தச் சக்தி தான் நாட்டின் பிற விவசாயிகளுக்கும் கிடைத்திருக்கிறது.  பழங்கள்-காய்கறிகள் மட்டுமல்லாமல், தங்களுடைய வயல்களில் அவர்கள் பயிர் செய்யும், தானியங்கள், கோதுமை, கடுகு, கரும்பு ஆகியவற்றையும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, எங்கே அதிக விலை கிடைக்கிறதோ, அங்கே, விற்க இப்போது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது," என்று பிரதமர் கூறினார்.

3-4 ஆண்டுகள் முன்பாக, மஹாராஷ்டிரத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளை வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்தும் குழுக்களின் வரையறையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.  இந்த மாற்றம், எப்படி மஹாராஷ்டிரத்தின் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகளின் நிலையை மாற்றியது என்பதற்கான எடுத்துக்காட்டு, ஸ்ரீ சுவாமி சமர்த் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் என்ற விவசாயிகள் சங்கம்.  புனே மற்றும் மும்பையில் வாராந்திர சந்தையை விவசாயிகளே நடத்துகிறார்கள்.  இந்தச் சந்தைகளில் சுமார் 70 கிராமங்களின், 4,500 விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள், நேரடியாக விற்கப்படுகின்றன.  இங்கே இடைத்தரகர்கள் யாரும் கிடையாது.  ஊரகப்பகுதி இளைஞர்கள், சந்தையில் விவசாயப் பொருள்கள் மற்றும் விற்பனை ஆகியவற்றில் நேரடியாக பங்கெடுக்கிறார்கள்.  இதன் நேரடி லாபம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது, கிராமங்களின் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் ஒரு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் காணக் கிடைக்கிறது என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் வாழை சாகுபடியாளர்கள் கம்பெனி, பெயருக்குத் தான் ஒரு கம்பெனி.  உண்மையில், இது விவசாயிகள் இணைந்து ஏற்படுத்தி இருக்கும் ஒரு சங்கம் தான்.  அதிக நெகிழ்ச்சித் தன்மை உடைய முறை இது, அதுவும் 5-6 ஆண்டுகள் முன்பாகத் தான் உருவாக்கப் பட்டிருக்கிறது.  இந்த விவசாயிகள் சங்கம், பொது முடக்கத்தின் போது அருகிலே இருக்கும் கிராமங்களிலிருந்து பலநூறு மெட்ரிக் டன் அளவுடைய காய்கறிகள், பழங்கள், வாழை ஆகியவற்றை வாங்கி, சென்னை மாநகரில், காய்கனிகளின் ஒரு காம்போ கிட்டை உருவாக்கினார்கள்.  சிந்தித்துப் பாருங்கள், எத்தனை இளைஞர்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை அளித்திருப்பார்கள்!! மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இடைத்தரகர்கள் இல்லாமையினால், விவசாயிகளுக்கும் ஆதாயம், நுகர்வோருக்கும் ஆதாயம் என்று கூறினார்.

"இதே போல, லக்னௌவிலும், ஒரு விவசாயிகளின் சங்கம் இருக்கிறது.  அவர்கள் “இராதா ஃபார்மர் ப்ரொட்யூசர் என்று இதற்குப் பெயரிட்டார்கள்.  இவர்களுமே கூட, பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளின் வயல்களிலிருந்து நேரடியாக காய்கனிகளை வாங்கி, நேரடியாகவே லக்னௌவின் சந்தைகளில் விற்பனை செய்தார்கள்.  இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை, விரும்பிய லாபம் ஆகியன ஒருசேரக் கிடைத்தன.  நண்பர்களே, குஜராத்தின் பனாஸ்காண்டாவின் ராம்புரா கிராமத்தில், இஸ்மாயில் பாய் என்ற ஒரு விவசாயியுடைய கதை மிக சுவாரசியமானது.  இஸ்மாயில் பாய் விவசாயம் செய்ய விரும்பினார், ஆனால் இப்போது விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்ற பொதுவான கருத்து நிலவுவதால், அவருடைய குடும்பத்தாருக்கும் சற்றே கவலையாக இருந்தது.  இஸ்மாயில் பாய் உடைய தந்தையும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார், ஆனால் பெரும்பாலும் அவருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டு வந்தது.  ஆகையினால் தந்தையாருக்கும் கவலையாகவே இருந்தது.   ஆனால் குடும்பத்தாருடைய ஆட்சேபங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் இஸ்மாயில் பாய், தான் விவசாயம் செய்யப் போவதாகத் தீர்மானம் செய்தார். விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்ற நினைப்பையும், நிலையையும் மாற்றிக் காட்டப் போவதாக உறுதிப்பாடு கொண்டார்.  அவர் விவசாயத்தில் ஈடுபட்டு, புதிய நூதனமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டார்.  அவர் சொட்டுநீர்ப் பாசனம் செய்தார், உருளை நடவு செய்தார், இன்று அவர் சாகுபடி செய்திருக்கும் உருளைக் கிழங்குகள் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கின்றன.  மிகச் சிறந்த தரம் வாய்ந்த உருளைக்கிழங்குகளை அவர் பயிர் செய்து வருகிறார்.  இஸ்மாயில் பாய், தனது உருளைக்கிழங்குகளை நேரடியாகவே பெரியபெரிய நிறுவனங்களிடம் விற்கிறார்.  இடைத்தரகர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை, இதன் விளைவாக நல்ல இலாபம் ஈட்டி வருகிறார்.  இப்போது அவர் தன்னுடைய தந்தையின் அனைத்துக் கடன்களையும் அடைத்து விட்டார்.  ஒரு மிகப்பெரிய விஷயம் தெரியுமா?  இஸ்மாயில் பாய் இன்று தனது பகுதியில், பல நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் உதவி புரிந்து வருகிறார்.  அவரது வாழ்க்கை இன்று மாறிப் போனது," என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

"இன்றைய தேதியில் வேளாண்மையில் நாம் எத்தனை புதிய புதுமைகளைப் புகுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்.  இந்தப் புதுமைகளில், புதியபுதிய வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியனவும் அடங்கும்.  மணிப்பூரில் வசிக்கும் விஜய்சாந்தி அவர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் புகுத்தியதால், அதிகம் பேசப்பட்டு வருகிறார்.  அவர் தாமரைத்தண்டிலிருந்து நாரினை ஏற்படுத்தும் ஒரு ஸ்டார்ட் அப்பை ஏற்படுத்தினார்.  இன்று அவருடைய நூதனம், தாமரை விளைச்சல் மற்றும் துணிகளில் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

 

****


(Release ID: 1659622) Visitor Counter : 247