பிரதமர் அலுவலகம்

இந்தியா-இலங்கை இருதரப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமரின் தொடக்க உரை

Posted On: 26 SEP 2020 5:36PM by PIB Chennai

பிரதமர் மகிந்தா ராஜபக்ச அவர்களே, வணக்கம்.

நான் இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டுக்கு தங்களை வரவேற்கிறேன். எப்போதும் போல, உங்களது முதல் அதிகாரபூர்வ இந்திய பயணத்தின்போது உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவோம். இந்த அழைப்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும். தற்போதைய சூழலில், இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உச்சிமாநாட்டுக்கான எனது அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட தங்களை நான் வாழ்த்துகிறேன். நாடாளுமன்ற தேர்தலில், எஸ்எல்பிபி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு நான் மீண்டும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி, உங்களது தலைமையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பன்முகத்தன்மை கொண்ட உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. முதலில் அண்டை நாடுகள் என்ற எனது கொள்கை,  எனது அரசின் சார்க் கோட்பாடு ஆகியவற்றின் கீழ், நாங்கள் இலங்கையுடனான நட்புறவை சிறப்பு முன்னுரிமையுடன் அணுகுகிறோம். பிம்ஸ்டெக், சார்க், ஐஓஆர்ஏ அமைப்புகளில், இந்தியாவும், இலங்கையும் நெருங்கிய ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

உங்கள் கட்சியின்  சமீபத்திய வெற்றிக்குப் பின்னர், இந்தியா-இலங்கை உறவுகளில் புதிய வரலாற்று அத்தியாயம் ஏற்படுத்த பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் இருநாட்டு மக்களும் நம்மை நோக்குகின்றனர். நீங்கள் பெற்றுள்ள பெரும் ஆட்சிக்கட்டளை உரிமை, உங்களது கொள்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் பேராதரவு ஆகியவை இருதரப்பு உறவில் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைய பெரிதும் உதவும்.

பிரதமர் ராஜக்ச தொடக்க உரையாற்றுமாறு நான் இப்போது அழைக்கிறேன்.

பொறுப்பு துறப்பு: இது தோராயமான மொழியாக்கம். அசல் கருத்துக்கள் இந்தியில் தெரிவிக்கப்பட்டன.

****


(Release ID: 1659594) Visitor Counter : 183