பிரதமர் அலுவலகம்

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு ஆண்டு விழாவில் பிரதமர் தொடக்க உரை நமது வளர்ச்சியை நாம் நிச்சயமாக திரும்பப் பெறுவோம்: பிரதமர்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க எண்ணம், சேர்ந்து செயல்படுதல், முதலீடு, கட்டமைப்பு மற்றும் புதுமை சிந்தனை முக்கியம்: பிரதமர்

Posted On: 02 JUN 2020 2:21PM by PIB Chennai

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) 125வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு மோடி காணொலி மூலம் இன்று தொடக்க உரை நிகழ்த்தினார். இந்த ஆண்டு மாநாட்டின் கொள்கை அழுத்தம் ``புதிய உலகிற்கான இந்தியாவை கட்டமைத்தல்: உயிர்கள், வாழ்வாதாரங்கள், வளர்ச்சி'' என்று எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கொரோனா காரணமாக இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் வழக்கமாகிவிட்டன என்று கூறினார். ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரு புதிய வழிமுறையை உருவாக்கிக் கொள்ளும் இந்த அணுகுமுறையும் மனிதர்களின் மிகப் பெரிய பலமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ``ஒருபுறம் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். மறுபுறம், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, அதன் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டியுள்ளது'' என்று பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டு மாநாட்டுக்கான கொள்கை அழுத்தத்தின் தலைப்பு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ``திரும்பவும் வளர்ச்சியை மீட்பது'' என்பது குறித்த விவாதத்தைத் தொடங்கி இருப்பதற்கு இந்தியத் தொழில் துறைக்கு பாராட்டு தெரிவித்தார். தொழில் துறையினர் இதையும் தாண்டி செல்ல வேண்டும் என்று கூறிய அவர் ``ஆமாம்! நமது வளர்ச்சியை நிச்சயமாக நாம் திரும்பவும் பெறுவோம்'' என்று குறிப்பிட்டார். இந்தியாவின் திறன்கள், நெருக்கடிகளை சமாளிக்கும் திறனில், இந்தியாவின் திறமைகள் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் புதுமைச் சிந்தனை மற்றும் அறிவு மேன்மை, இந்தியாவின் விவசாயிகள், எம்.எஸ்.எம்.இ.கள், தொழில்முனைவோர் ஆகியோர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

கொரோனா பரவும் வேகம் குறைந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் முடக்கநிலை சூழ்நிலையை இந்தியா கடந்து, முடக்க நிலை நீக்கத்தின் முதலாவது கட்டத்தில் இருக்கிறோம் என்பது தான் பெரிய உண்மையாக உள்ளது. முடக்க நிலை நீக்கத்தின் முதலாவது கட்டத்தில் பொருளாதாரத்தின் பெரும் பகுதி திறந்துவிடப் பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதிக்குப் பிறகு நிறைய விஷயங்கள் திறக்கப்படுகின்றன. வளர்ச்சியைத் திரும்பவும் பெறும் பணி தொடங்கிவிட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், உரிய தருணத்தில் சரியான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். ``மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, முடக்கநிலை அமலால் இந்தியாவில் எந்த அளவுக்கு பரவலான ஆதாயங்கள் கிடைத்துள்ளன என்பதை அறிந்திருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார். ``கொரோனா பாதிப்புக்குப் பிறகு  பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்துவது, நமது உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது'' என்றும் பிரதமர் கூறினார். இதற்காக, உடனடியாகத் தேவைப்படும் முடிவுகளையும், நீண்டகால அடிப்படையில் தேவைப்படும் முடிவுகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார். ஏழைகளுக்கு உடனடி நன்மைகள் கிடைப்பதற்கு பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா உதவிகரமாக இருந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 74 கோடி பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பெண்களாக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகள், முதியோர், தொழிலாளர்கள் என யாராக இருந்தாலும், எல்லோருமே இதில் பயன் பெற்றிருக்கிறார்கள். முடக்கநிலை காலத்தில் ஏழைகளுக்கு 8 கோடி இலவச எரிவாயு சமையல் சிலிண்டர்களை அரசு அளித்துள்ளது. 50 லட்சம் தனியார் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 24 சதவீத பங்களிப்புத் தொகையை அரசிடம் இருந்து பெற்றுள்ளனர். இதற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.800 கோடி செலுத்தப் பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவை கட்டமைத்து, தீவிர வளர்ச்சியின் பாதையில் இந்தியாவை மீண்டும் கொண்டு வருவதற்கு மிகவும் முக்கியமான ஐந்து விஷயங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். உருவாக்க எண்ணம், சேர்ந்து செயல்படுதல், முதலீடு, கட்டமைப்பு மற்றும் புதுமை சிந்தனை ஆகியவை முக்கியம் என்று அவர் கூறினார். அரசு அண்மையில் மேற்கொண்ட துணிச்சலான முடிவுகளில் இவை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். பல துறைகள் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தயார்படுத்தப் பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

``நம்மைப் பொருத்த வரையில் சீர்திருத்தங்கள் என்பது தன்னியல்பான அல்லது எப்போதாவது எடுக்கும் முடிவுகள் கிடையாது. நடைமுறை வழக்கமாக, திட்டமிடப் பட்டதாக, ஒருங்கிணைக்கப்பட்டதாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக, எதிர்கால தேவைகளை சமாளிக்கும் தன்மை கொண்டதாக சீர்திருத்தங்கள் இருக்கின்றன. முடிவுகள் எடுப்பதற்கும், அவற்றை நியாயமான இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்குமான தைரியம் தான் நமக்கு சீர்திருத்தம் என்பதாக இருக்கிறது'' என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக, திவால் நிலை மற்றும் வங்கிமுறிவு விதி (ஐ.பி.சி.), வங்கிகள் இணைப்பு, ஜி.எஸ்.டி., நேரில் செல்லாமல் வருமான வரி மதிப்பீடு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை அவர் பட்டியலிட்டார்.

நாடு நம்பிக்கையை இழந்துவிட்ட விஷயங்களிலும் இதுபோன்ற கொள்கை சீர்திருத்தங்களைச்  செய்துள்ளது என்று பிரதமர் கூறினார். வேளாண்மைத் துறையில், சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால், இடைத்தரகர்களின் பிடியில் விவசாயிகள் சிக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். வேளாண்மை விளைபொருள் மார்க்கெட் கமிட்டி (ஏ.பி.எம்.சி.) சட்டம் திருத்தப்பட்ட பிறகு, இப்போது நாட்டில் எந்த மாநிலத்தில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்றார் பிரதமர்.

தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். தனியார் அனுமதிக்கப்படாத, முக்கியத்துவம் அல்லாத துறைகளும் இப்போது அவர்களுக்கு திறந்துவிடப் பட்டுள்ளன. நிலக்கரித் துறையில் இப்போது வணிக ரீதியிலான சுரங்கத் தொழிலுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ``அரசு இப்போது பயணிக்கும் திசையில் சென்றால், நமது சுரங்கத் துறை, எரிசக்தித் துறை அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம், தொழில் துறை என எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் பெருகும், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றையெல்லாம் தாண்டி, நாட்டின் முக்கியமான துறைகளில் தனியார் பங்கேற்பதும் சாத்தியமாகியுள்ளது. விண்வெளித் துறையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினாலும், அல்லது அணுசக்தித் துறையில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய விரும்பினாலும், அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு முழுமையாக அளிக்கப்படும்'' என்றும் பிரதமர் கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) துறைதான் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு என்ஜின் போன்றது. நமது ஜி.டி.பி.யில் 30 சதவீத பங்களிப்பை அந்தத் துறை அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். எம்.எஸ்.எம்.இ. என்பதற்கான வரையறையை உயர்த்த வேண்டும் என்ற இத் துறையின் நீண்டகால கோரிக்கை இப்போது நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனால் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் எந்தக் கவலையும் இன்றி வளர்ச்சி காண முடியும். எம்.எஸ்.எம்.இ. என்ற அந்தஸ்தைத் தக்கவைப்பதற்கு அவை வேறு பாதைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அரசுக்கான கொள்முதல்களில் ரூ.200 கோடி வரையில் உலக அளவில் டெண்டர் தர வேண்டாம் என அறிவிக்கப் பட்டிருப்பதால், எம்.எஸ்.எம்.இ. துறையில் உள்ள நிறுவனங்கள் பயன் பெறும் என்று அவர் தெரிவித்தார்.

உலக அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவை உலக நாடுகள் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவப் பொருட்களை அளித்து உதவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நம்பகமான, நம்பிக்கைக்கு உரிய பங்காளரை உலகம் எதிர்நோக்கியுள்ளது. அந்த பலமும், திறனும், வல்லமையும் இந்தியாவிடம் உள்ளன என்றார் பிரதமர். இந்தியாவை நோக்கி மற்ற நாடுகள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை முழு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழில் துறையினரை பிரதமர் வலியுறுத்தினார்.

வளர்ச்சியை மீண்டும் பெறுவது என்பது மிகவும் கடினமானது இல்லை என்றும் அவர் கூறினார். இப்போது இந்தியத் தொழில் துறையினருக்கு தற்சார்பு இந்தியா என்ற தெளிவான பாதை கிடைத்திருப்பது தான் மிகப் பெரிய விஷயம் என்றார் அவர். நாம் பலம் மிகுந்தவர்களாக உருவாகி, உலகை அரவணைத்துச் செல்வது என்பது தான் தற்சார்பு இந்தியா என்பதன் அர்த்தம் என்றும் அவர் கூறினார். உலகப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஐக்கியமாகி, ஆதரவாக இருப்பது தான் தற்சார்பு இந்தியா என்றும் அவர் விளக்கினார்.

உலக அளவிலான வழங்கல் சங்கிலித் தொடரில் இந்தியாவின் நிலையை பலப்படுத்தும் வகையில், துடிப்பான உள்நாட்டு வழங்கல் சங்கிலித் தொடரை உருவாக்குவதில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். சி.ஐ.ஐ. போன்ற பெரிய அமைப்புகள் முன்வந்து, கொரோனாவுக்குப் பிந்தைய இந்தியாவை தற்சார்புள்ளதாக உருவாக்குவதில் புதிய பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உலக நாடுகளுக்கான பொருட்களை நமது நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள, தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) மூன்று மாத காலத்திற்குள் உற்பத்தி செய்தமைக்காக தொழில் துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதலீடுகளை உருவாக்குவதற்கு, முழுமையாக சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் துறையினரை அவர் வலியுறுத்தினார். உள்ளூர் வேளாண் பொருட்களுக்கு, கிராமங்களுக்கு அருகில் தொகுப்பு உற்பத்தி வசதிகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப் படுவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், ஒரு பங்காளராக தனியார் துறையினரை அரசு கருதுகிறது என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக தொழில் துறையின் அனைத்துத் தேவைகளும் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்குவதற்கு தொழில் துறையினர் சபதம் ஏற்க வேண்டும் என்றும், இந்த உறுதியை நிறைவேற்ற தங்களுடைய அனைத்து சக்திகளையும் திரட்டி செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

******



(Release ID: 1654980) Visitor Counter : 230