பிரதமர் அலுவலகம்

பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 13 SEP 2020 2:47PM by PIB Chennai

பிரதமர்  திரு. நரேந்திர மோடி பிகாரில் பெட்ரோலியத்துறை தொடர்பான மூன்று முக்கியத் திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். துர்காபூர் –பங்கா பிரிவில், பாரதிப் –ஹால்தியா- துர்காபூர் பைப்லைன் விரிவாக்கத் திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் இத்திட்டங்களில் அடங்கும். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை இவற்றை நிர்மாணித்துள்ளன.

 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சில ஆண்டுகளுக்கு முன்பு பிகாருக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு, மாநிலத்தின் உள்கட்டமைப்பில் அதிகபட்சம் கவனம் செலுத்தும் வகையிலானது என்று கூறினார். இந்த சிறப்பு தொகுப்பு, பெட்ரோலியம் தொடர்பான ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பெரிய திட்டங்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார். அந்த வகையில் இன்று பிகார் மக்களுக்கு  அர்ப்பணிக்கப்பட்டது ஏழாவது திட்டமாகும். பிகாரில் முன்னதாக நிறைவு செய்யப்பட்ட இதர ஆறு திட்டங்களை அவர் பட்டியலிட்டார். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாம் அடிக்கல் நாட்டிய  துர்காபூர்-பங்கா (200 கி.மீ) பிரிவில் முக்கிய எரிவாயு பைப்லைன் திட்டத்தைத் தொடங்கி வைப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  நிலப்பகுதி சவால்களுக்கு இடையே, இத்திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றிய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, மாநில அரசின் தீவிர ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர் பாராட்டினார். ஒரு தலைமுறை ஆரம்பித்த வேலையை, மறு தலைமுறை முடிக்கும் பணிக் கலாச்சாரத்திலிருந்து பிகாரை வெளியே கொண்டு வருவதில் பிகார் முதலமைச்சரின் முக்கிய பங்களிப்பையும் அவர் புகழ்ந்துரைத்தார். இந்தப் புதிய பணிக் கலாச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இது பிகாரையும், கிழக்கு இந்தியாவையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறினார்.

 

வலிமை என்பது சுதந்திரத்துக்கு ஆதாரம், தொழிலாளரின் ஆற்றல் எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்ற பொருள் தொனிக்கும்  “सामर्थ्य मूलं स्वातंत्र्यम्श्रम मूलं वैभवम् ।” வேத வாக்கியத்தை பிரதமர் குறிப்பிட்டார். பிகார் உள்ளிட்ட கிழக்கு இந்தியாவில் தொழிலாளர் பற்றாக்குறையோ, இயற்கை வளங்களுக்கு தட்டுப்பாடோ இல்லை என்ற போதிலும், பிகாரும், கிழக்கு  இந்தியாவும் பல ஆண்டுகளாக வளர்ச்சியற்ற நிலையிலேயே இருந்தது என்று கூறிய அவர், அரசியல், பொருளாதார காரணங்களாலும், இதர முன்னுரிமைகளாலும் முடிவற்ற தாமதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது என்றார்.  முன்பெல்லாம், சாலை, ரயில், விமானம், இணையதளம் ஆகிய தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், வாயு சார்ந்த தொழிற்சாலைகள், பெட்ரோலிய இணைப்புகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை பிகாரில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். நிலத்தால் சூழப்பட்ட மாநிலமானதால், வாயு சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குவது பிகாரில் பெரும் சவாலாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், கடலோரத்தில் உள்ள அண்டை மாநிலங்களில் உள்ளது போல பெட்ரோலியம், வாயு தொடர்பான வளமும் இங்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

 

வாயு சார்ந்த தொழிற்சாலை மற்றும் பெட்ரோ இணைப்பு, மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது வாழ்க்கைத் தரத்திலும், நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய பிரதமர், லட்சக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகளையும் அது உருவாக்கும் என்றார். பிகார் மற்றும் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த  பல நகரங்களில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி வசதிகள் வந்துள்ளன என்று கூறிய அவர், இதன் காரணமாக தற்போது மக்கள் இந்த வசதிகளை எளிதில் பெற வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமர் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்கரையில் உள்ள பாரதிப், மேற்கு கடற்கரையில் உள்ள காண்ட்லா ஆகியவற்றை இணைக்கும் பகீரத முயற்சி துவங்கியுள்ளதாக கூறிய அவர், இந்த பைப்லைன் திட்டத்தால் ஏழு மாநிலங்கள் இணைக்கப்படும் என்றார். இந்த 3000 கி.மீட்டர் தூரத் திட்டத்தில் பிகார் முக்கிய பங்கு வகிக்கும். பாரதிப்-ஹால்தியா லைன் தற்போது பாட்னா, முசாபர்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காண்ட்லாவில் இருந்து போடப்படும் பைப்லைன் கோரக்பூர் வரை வந்து அதுவும் இதனுடன் இணைக்கப்படும். இந்தத் திட்டம் முற்றிலுமாக முடிவடையும் போது, உலகிலேயே மிக நீண்ட தொலைவிலான பைப்லைன் திட்டங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

இந்த எரிவாயு பைப்லைன்கள் காரணமாக, பிகாரில் வாயு நிரப்பும் பெரிய நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இவற்றில், பங்கா, சம்பரன் ஆகிய இடங்களில் இரண்டு புதிய நிலையங்கள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிலையங்களும் ஒவ்வொரு ஆண்டும் 125 மில்லியனுக்கும் அதிகமான உருளைகளை நிரப்பும் திறன் வாய்ந்தவை. இந்த நிலையங்கள், கொட்டா, தியோகர், தும்கா, சாகிப் கஞ்ச், பக்கூர் மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் ஆகியவற்றின்  எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும். பைப்லைன் மூலமான எரிசக்தி அடிப்படையில் அமையும் புதிய தொழில்கள் இந்த பைப்லைன் திட்டத்தால் உருவாகும் என்பதால், ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை பிகார் உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

கடந்த காலத்தில் மூடப்பட்ட பாராவுனி உரத் தொழிற்சாலை, இந்த பைப்லைன் திட்டக் கட்டுமானம் முடிவடைந்ததும், விரைவில் இயங்கத் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் காரணமாக நாட்டின் எட்டு கோடி ஏழைக் குடும்பங்கள் இன்று எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளன என்று அவர் கூறினார். இது, இந்தக் கொரோனா காலத்தில், ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெளியில் சென்று விறகுகளையோ, எரிபொருளையோ சேகரிக்க வேண்டிய தேவை இல்லாமல், அவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க இது அவசியமாகியுள்ளது என்று அவர் கூறினார்.

 

லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு, இந்தக் கொரோனா காலத்தில்,  லட்சக்கணக்கான எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கொரோனா பரவல் காலத்திலும், தொற்று அபாயம் உள்ள நிலையிலும், மக்களை எரிவாயு இல்லாமல் சிரமப்பட விடாமல், உருளைகளை விநியோகிக்கும் பணியாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியத்துறையின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பிகாரில் ஒரு காலத்தில் எல்பிஜி வாயு இணைப்பு, வசதியானவர்களின் அடையாளமாக இருந்ததைச்  சுட்டிக்காட்டிய அவர், எரிவாயு இணைப்புக்கு பரிந்துரை பெற  மக்கள் அலைய வேண்டியிருந்தது என்றார். ஆனால். தற்போது உஜ்வாலா திட்டத்தால், பிகாரில் இந்த நிலைமை மாறியுள்ளது. பிகாரில் சுமார் 1.25 கோடி  ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு இணைப்பு, பிகாரில் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

 

பிகார் இளைஞர்களைப் பாராட்டிய பிரதமர், நாட்டின் திறமையின் ஆற்றல்மிக்க மையமாக பிகார் திகழ்கிறது என்றார். பிகாரின் ஆற்றல், பிகார் தொழிலாளர்களின் முத்திரையை ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காணலாம் என்று அவர் கூறினார். கடந்த 15 ஆண்டுகளாக, சரியான அரசு, சரியான முடிவுகள், தெளிவான கொள்கை காரணமாக பிகாரில் வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொருவரையும் அது சென்றடைந்துள்ளதாக அவர் கூறினார். பிகார் இளைஞர்கள் வயல் வெளிகளில் வேலை பார்க்க நேர்ந்ததால், கல்வி தேவையில்லை என்ற எண்ணம் முன்பு நிலவியது. இந்த எண்ணம் காரணமாக, பிகாரில் பெரிய கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான வேலை நடைபெறவில்லை. இதனால், பிகார் இளைஞர்கள் கல்விக்காக, வேலைக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தது. வயல்களில் வேலை செய்வது கடினமான வேலை என்பதுடன் பெருமைக்குரியதாகும். ஆனால், அதற்காக வேறு வாய்ப்புகளைத் தராமல், ஏற்பாடுகளை செய்யாமல்  இருந்தது சரியல்ல.

 

பிகாரில் தற்போது மிகப்பெரிய கல்வி மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் கூறினார். தற்போது, விவசாயக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இருந்து வந்த பிகார் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற, மாநிலத்தில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி ஆகியவை  உதவி வருகின்றன. பாலிடெக்னிக் நிறுவனங்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தி, இரண்டு பெரிய பல்கலைக் கழகங்கள், ஒரு ஐஐடி, ஒரு ஐஐஎம், ஒரு நிப்ட் ஒரு தேசிய சட்ட கல்வி நிலையம் ஆகியவற்றைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பிகார் முதலமைச்சருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

பிகார் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்புக்குத் தேவைப்படும் தொகையை ஸ்டார்ட் அப், முத்ரா திட்டம் மற்றும் அதுபோன்ற திட்டங்கள் வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பிகாரில் எப்போதையும் விட அதிகமாக, நகரங்களிலும், கிராமங்களிலும் மின்சாரம் தட்டுப்பாடின்றி உள்ளதாக அவர் கூறினார். மின்சாரம், பெட்ரோலியம், எரிவாயு துறைகளில் நவீன உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, மக்களின் வாழ்க்கை எளிதாக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கும், பொருளாதாரத்துக்கும் ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா காலத்திலும், சுத்திகரிப்பு திட்டங்கள், துரப்பணம், உற்பத்தி, பைப்லைன், நகர வாயு விநியோகத் திட்டங்கள் போன்ற பெட்ரோலியம் சார்ந்த உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் இதர திட்டங்கள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார். வரும் நாட்களில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ரூ.6 லட்சம் கோடி செலவிடப்படும் என்று அவர் கூறினார்.  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி விட்டதாகவும், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  மிகப்பெரிய உலக அளவிலான தொற்று பரவல் காலத்திலும், நாடு, குறிப்பாக பிகார் முடங்கிவிடவில்லை. ரூ.100 லட்சம் கோடி மதிப்பாலான, தேசிய கட்டமைப்பு பைப்லைன் திட்டம், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார். கிழக்கு இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையமாக பிகாரை மாற்ற ஒவ்வொருவரும் விரைவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



(Release ID: 1653831) Visitor Counter : 210